தாய் அன்பின் தத்துவம்-இனியவளே உனக்காக

 

Indian Bridal Sarees (1)

தாய் அன்பின் தத்துவம்

இனியவளே, பெண் இனத்தில் தாய் என்று இருப்பவள், அன்பில் உருவானவள். இந்த அன்பில் உருவான தாயை இன்று அநேகர் மதிப்பது கிடையாது. இந்த உலகில் தாயின் அன்பிற்கு ஈடு இணை என்பது எதுவுமே கிடையாது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்….

எனக்கு 10 வருடத்திற்கு முன்பிருந்து தெரிந்த சிநேகிதி ஒருவர் உண்டு. அவளது பெயர் ராணி. அவளுக்கு அழகான ஒரு பெண் குழந்தை உண்டு. அந்த குழந்தை ஒரு நாள் வீட்டில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது, விலை மதிப்புள்ள கண்ணாடி பாத்திரம் ஒன்றை, காலை பொழுதில் உடைத்துப்போட்டு விட்டது. அந்த நேரத்தில் அக்குழந்தையின் தாய், அந்த குழந்தையின் பிறந்த நாளுக்காக, அவளது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள். அந்த சமயத்தில்தான், அந்த குழந்தை மேஜை மீதிருந்த அந்த விலை உயர்ந்த கண்ணாடி பாத்திரத்தை ,கீழே தள்ளி உடைத்து விட்டது. அந்த ஒரு பாத்திரம் மட்டும் தான் அந்த வீட்டில், அந்த தாய் வைத்திருந்த விலை மதிப்பு மிக்க பொருளாக இருந்தது. இந்த பொருளை, பெரிய விருந்துகளுக்கு மட்டுமே அந்த தாய் உபயோகிப்பாள். அப்படி பார்த்து, பார்த்து பத்திரமாக வைத்திருந்த அந்த பாத்திரத்தை, துரதிருஷ்டவசமாக அவளது மகள் தள்ளி விட, அந்த கண்ணாடி பாத்திரம் குண்டு வெடித்து சிதறுவது போல, சிதறி விட்டது. அந்த தாயார் வைத்திருந்த அந்த அழகிய பொருளை, அந்த குழந்தை ஒரு நிமிடத்தில் ஒன்றுமில்லாமல் செய்து விட்டது. அந்த சிறுமி அழுது கொண்டே “அம்மா என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்“ என்று சொல்லிக்கொண்டே தேம்பித்தேம்பி அழுதது. உடனே அந்த தாய், தன் மகளை தூக்கி அணைத்துக்கொண்டு, “அழாதே மகளே, கண்ணாடி பாத்திரத்தை காட்டிலும் நீ மிகவும் விசேஷித்தவள்., உன் பிறந்த நாளில் நீ அழவே கூடாது.” என்று மெல்லிய குரலில் அந்த தாய், தனது குழந்தையை தேற்றினாள். இதிலிருந்து, நமக்கு தெரிவது என்னவென்றால், தாயின் அன்புதான் மேலான அன்பு என்பது உறுதியாகிறது.
இந்த உலகில், இந்த அன்புக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. தாயின் அன்புக்கு கதவுகள் இல்லை., தடைகள் இல்லை., வயதும் இல்லை., அழிவும் இல்லை., பகையும் இல்லை., இடைவெளியும் இல்லை., ஆடம்பரமும் இல்லை., ஏமாற்றமும் இல்லை., சுய நலமும் இல்லை., தேய்வும் இல்லை. மேலும் அது அசையாதது., அலங்காரம் இல்லாதது., அதிசயமானது., தன்னலமற்றது., ஏக்கம் நிறைந்தது. இந்த தாயைப் போல அன்பு கூற நமக்கு, நல்லிதயம் வேண்டும்., தியாகம் வேண்டும்., மன வலிமை வேண்டும்., தூய்மை வேண்டும்., துணிவு வேண்டும்., பணிவு வேண்டும்., பண்பு வேண்டும்., அடக்கம் வேண்டும்., எளிமை வேண்டும்., இன்சொல் வேண்டும்., சகிப்பு தன்மை வேண்டும்., உண்மை வேண்டும்., உழைக்க வேண்டும்., தொண்டு மனம் வேண்டும்., நன்றி உணர்வு வேண்டும்., கனிவு வேண்டும்., பொறுமை வேண்டும்., புனித மனம் வேண்டும்… இவ்வளவு நல் குணங்கள் இருந்தால் மட்டும்தான், நம் அன்பு, தாயின் அன்புக்கு ஈடாகும்.

அன்பு என்றும் அணையா விளக்கு., அன்பு மலரிதழ் போல மென்மையானது. மழை போல் தூய்மையானது. இந்த அன்பை, தாயை போல இல்லத்திலுள்ள ஒவ்வொருவரும் மனதில் கொண்டு, நடக்கும் போது, குடும்பத்திலுள்ள எல்லா முகமும் மலரும்., அகமும் வளரும்., நலமும் பெருகும். இந்த அன்பினால் மட்டுமே, அவனியை அளக்கலாம்., இன்பத்தை அடையலாம்., இறைவனாய் வாழலாம்., இறைவனை காணலாம்., அமைதியாய் வாழலாம். இதுதான் அன்பின் தத்துவம். இந்த அன்பின் தத்துவத்தை தாயிடம் இருந்து ஒவ்வொருவரும் கற்று, அந்த தாயை மதித்து செயல்படும் போது, அனைவரும் அவனியிலுள்ள எல்லோராலும் போற்றப்படுவோம்., உயர்த்தப்படுவோம். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எனவே, தாயை போற்றுவோம். தரணியரால் மதிக்கப்படுவோம்.!!!.

 
 
 
 

This post has been viewed 1,988 times