தொழில் அதிபர் நா.மகாலிங்கம்

 

தொழில் அதிபர் நா.மகாலிங்கம்

தமிழ்நாட்டை சேர்ந்த நா. மகாலிங்கம், தொழிலதிபரும், குறிப்பிடத்தக்க மக்கள் சேவையாளரும், அரசியல்வாதியும் ஆவார். பொள்ளாச்சியை சேர்ந்த இவர், சக்தி குழுமத்தின் அதிபர் ஆவார். ‘பொள்ளாச்சி’ மகாலிங்கம் என்றும் அழைக்கப்படுவார்.
நாச்சிமுத்து கவுண்டருக்கும், ருக்மணி அம்மையாருக்கும், 1923-ம் வருடம் மார்ச் 21–ம் நாள் நா.மகாலிங்கம் பிறந்தார். நா.மகாலிங்கத்தின் தாத்தா பழனிக்கவுண்டர், பொள்ளாச்சியின் ஊர்க்கவுண்டராக விளங்கியவர். நா.மகாலிங்கத்தின் பாட்டியின் பெயர் செல்லம்மாள். பொள்ளாச்சியில் பள்ளி கல்வி முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டத்தை பெற்ற பின், கிண்டி பொறியியல் கல்லூரியில், மகாலிங்கம் இயந்திரப் பொறியியல் படித்தார். தனது அத்தை மகள் மாரியம்மாளை 1945–ல் மணமுடித்துக்கொண்டார்.

TH04_N_MAHALING_TH_2138559e

 

இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் பிறந்தனர். மகாலிங்கம் அவரது தந்தை நாச்சிமுத்து ,மாட்டுவண்டிகளில் தொழில் தொடங்கி, கார்களாகவும், லாரிகளாகவும், பேருந்துகளாகவும் உயர்ந்து பின் 1931–ல் ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட்(ஏ.பி.டி) என்று தொடங்கிய நிறுவனம், சக்தி குழுமத்தின் நிறுவனங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. 21 பேருத்துகளில் தொடங்கிய ஏ.பி.டி நிறுவனம் 1946–ல் 100 பேருந்துகளை கொண்ட பெரிய நிறுவனமாக வளர்ந்தது. நாச்சிமுத்து, பொள்ளாச்சி நகராட்சி தலைவராகவும் இருந்தவர். 1934–ல் நாச்சிமுத்து, மகாத்மா காந்தியை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தார். அப்பொழுது காந்தியைச் சந்தித்த மகாலிங்கம் சிறு வயதிலிருந்தே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வு கொண்டிருந்தார்.

நாச்சிமுத்துக் கவுண்டர் நகராட்சித் தலைவராக இருந்த காரணத்தினால், மகாலிங்கமும் அரசியலில் ஆரம்ப காலம் முதல் ஆர்வமாக இருந்தார். இவர் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக 1952–ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற 29 வயது இளைஞர் மகாலிங்கம்தான். பின்னர் 1957 மற்றும் 1962 ஆண்டுகளிலும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய உந்துதலால் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் மற்றும் பல்வேறு சமுதாய மற்றும் விவசாயத் திட்டங்களைப் பொள்ளாச்சிக்குப் பெற்று தந்திருக்கிறார். 1969 முதல் தீவிர அரசியலில் இருந்து விலகி, சமூக முன்னேற்றத்திற்காகக் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிப் பணிகளில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த தொழில் கொள்கைகளைப் பயன்படுத்தி, பல்வேறு தொழில் மற்றும் வணிகங்களைத் தொடங்கிருக்கிறார். இன்று சக்தி குழுமம் சர்க்கரை ஆலை, நிதி துறை, பேருந்து உற்பத்தி, பேக்கிங், பானங்கள், நான்கு சக்கர வாகன உற்பத்தி, காற்று அலை, பேருந்து சுற்றுலா , பால் உற்பத்தி , தேயிலைத் தோட்டம், ஜவுளித் தொழில் போன்றவை இப்போதும் இடம் பெற்றுள்ளன. 91 வயது வரை வாழ்ந்த இவர், பல்வேறு குழுமங்களுக்குத் தலைவராகவும் கவுரவத் தலைவராகவும் இருந்திருக்கிறார். மாநிலத் திட்டக் குழுமத்தில் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றிற்கும் பல்வேறு சமுதாய சேவைக்கு, பண உதவியும் செய்து உள்ளார்.

dr-tn-ganapathy-dr-mahalingam

சென்னையில் அமைந்திருக்கும் ஆசிய ஆராய்ச்சிக் கழகம் இவரது உந்துதலால் 1981–ம் ஆண்டு உருவானது. இதுவரை 46–க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ளார். 1974–ல் ‘கிசான் வேர்ல்ட்’ என்ற வேளாண்மை மாதஇதழ் மற்றும் 1983–ல் ஓம் சக்தி என்ற மாத இதழைத் தொடங்கினார். இவரது முக்கியமான கனவு, ரோமானிய மற்றும் கிரந்த லிபிகளை இணைத்து 52 எழுத்துக்கள் கொண்ட வடிவமாய் உருவாக்க பிரத்யேகமான மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்துவதாகும். அவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் மொழியின் விளக்கக் கூறுகளையும் உச்சரிப்பையும் பெருமளவு இணைய வாசகர்களுக்கு கற்பிக்க முடியுமென அவர் நம்பினார்.ஆங்கிலத்தில் Mahalingam Roman Grantha Script (MRG) என்று அவர் அதனை அழைத்தார்.

தொழில் அதிபர் மகாலிங்கம், பல்வேறு பட்டங்கள் மற்றும் விருதுகளையும், கவுரவ முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
1983-ல் காஞ்சி சங்கராச்சாரியார் பல்கலைக்கழகமும், 1984-ல் பாரதியார் பல்கலைக்கழகமும், 1988-ல் அண்ணா பல்கலைக்கழகமும், 1988-ல் சென்னைப் பல்கலைக்கழகமும், 2000–ல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், இவருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளது. 1989-ல் இந்திரா காந்தி ஒருமைப்பாடு பட்டம், 1989–1992 ஆண்டுகளுக்கான மொரீஷியஸ் அரசின் விருது, 2007 – பத்ம பூஷண் விருது ஆகியவற்றையும் இவர் பெற்றுள்ளார். இவர், 2014–ம் ஆண்டு அக்டோபர் 2–ல் மரணம் அடைந்தார்…!!!.

 
 
 
 

This post has been viewed 607 times