18.சர்க்காரியா கமிஷன் ரத்து இல்லை

 

18.சர்க்காரியா கமிஷன் ரத்து இல்லை

1976-ல் தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதற்கிடையில் தமிழகத்தில் இன்னோர் அரசியல் மாற்றமும் நிகழ்ந்தது. ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் காமராஜர் 1975 -ம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதியன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

காமராஜர் மரணத்தைத் தொடர்ந்து ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஒரு விரக்தியும், மறு சிந்தனையும் தோன்றின. இந்திரா காங்கிரஸும், ஸ்தாபன காங்கிரஸும் இணைந்து ஒரே காங்கிரசாகிவிட வேண்டும் என்பதுதான் அந்த மறு சிந்தனை ஆகும். அதன்படி இணைப்பும் ஏற்பட்டது.

கருப்பையா மூப்பனார் தலைமையில் பெரும்பாலான ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள், இந்திரா காங்கிரஸில் இணைந்தனர். ஒன்றுபட்ட தமிழ்நாடு காங்கிரசுக்கு கருப்பையா மூப்பனார் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பா.இராமச் சந்திரன் தலைமையில் சிறுபான்மைக்குழுவினர் அதற்குப் பின்னரும் ஸ்தாபன காங்கிரஸாக இயங்கிக் கொண்டிருந்தனர். 1977–ல் இந்தியா முழுவதிலும் பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடிவு செய்தார், பிரதமர் இந்திரா.

அதுவரை ஒன்றையொன்று எதிர்த்துக்கொண்டிருந்த இந்திரா காங்கிரசும், அ.இ.அ.தி.மு.க.வும் சட்டமன்ற, நாடாளுமன்றத தேர்தலில் ஒரே அணியாக நிற்பதுதான் நல்லது என்னும் எண்ணம் இரு தரப்பிலும் பரவலாக ஏற்பட்டது.

அன்னை இந்திராவின் மேல் தனிப்பட்ட முறையில் மிகுந்த மிதிப்புக் கொண்டிருந்த புரட்சித் தலைவர், இந்திரா காங்கிரஸோடு கூட்டணி வைத்துக் கொள்ள உடன்பட்டார். ஆனால், நாடாளுமன்றத் தொகுதிகளில் நாடாளுமன்றத் தொகுதிகளில் அ.இ.தி.மு.க-வுக்கு அதிக இடங்களை ஒதுக்கிட இந்திரா காங்கிரஸ் சம்மதித்தால்தான் கூட்டணி அமைக்க ஒப்புக் கொள்ளமுடியும் என்றும் அவர் தெளிவு படுத்தினார்.

எம்.ஜி.ஆர். கூறியதை இந்திரா காங்கிரஸ் மேலிடம் ஒப்புக்கொண்டது. அதன்படி அ.இ.அ.தி.மு.கவுக்கு 20, இந்திரா காங்கிரஸுக்கு 15, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க வுக்கு என்ற அடிப்படையில் ஒப்பந்தம் உருவானது.

புதிய கூட்டணியும் உதயமானது. தி.மு.க. ஸ்தாபன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இன்னொரு கூட்டணியை அமைத்துக்கொண்டன. பிரதமர் இந்திராவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் பேசி வாக்குக் கேட்டார்கள்.

நெருக்கடி நிலைப்பிரகடனம் ரத்து செய்யப்பட்டது. காவலில் இருந்த தலைவர்களெல்லாரும் விடுதலை செய்யப்பட்டனர். தேர்தல் முடிவுப்படி வடமாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் பெரும் தோல்விகண்டது. மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதாக் கட்சி பெரும் வெற்றி பெற்றது.

ஆனால், தென் மாநிலங்கள் நான்கிலும் இந்திரா காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. தமிழகத்தில் புரட்சித் தலைவரின் செல்வாக்கும், அயராத உழைப்பும் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 18, இந்திரா காங்கிரஸுக்கு 14 கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 என்னும் அளவில் மகத்தான வெற்றியை ஈட்டித் தந்தது.

ஸ்தாபன காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் தி.மு.க. ஒரே ஒரு தொகுதியிலும் தாம் வெற்றிபெற்றன. பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியிலும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளரே வெற்றி பெற்றார் இது புரட்சித் தலைவரின் இன்னொரு மகத்தான சாதனையாகும்.

தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது, நியாயம் என்ற புரட்சித்தலைவரின் வாதத்தைதான் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்! ஒரேயொரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற தி.மு.க.வோடு கூட்டணி அமைத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓர் இடங்கூட கிடைக்கவில்லை.

தங்களோடு கூட்டணி அமைத்துக் கொண்ட ஜனதாக்கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பதால், தங்கள் மீதான சர்க்காரியா விசாரணைக்கமிஷன் கலைக்கப்பட்டு விடும் என்று தி.மு.க. தலைமை நம்பியது. புதிய பிரதமர் மொரார்ஜிதேசாய்க்கு மத்திய அமைச்சர் பா. இராமச்சந்திரன் மூலம் வேண்டுகோளும் விடுத்தது.

ஆனால், பிரதமர் மொரார்ஜி தேசாய் சர்க்காரியா கமிஷன் விசாரணையை கைவிடச் செய்ய சம்மதிக்கவில்லை! விசாரணை தொடரும் என்று அறிவித்து விட்டார்.

பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும், தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் பலரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையோடு சிந்தித்தனர். அவர்களின் சார்பில் தி.மு.க. பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் முதன் முதலில் போர்க்கொடியை உயர்த்தினார்.

1977–ம் ஆண்டு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிய நாவலர். கருணாநிதியின் மேல் ஒரு குற்றச்சாட்டு அறிக்கையை விடுத்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களான கே.ராஜாராம், எஸ். மாதவன், ஆதித்தனார், ப.உ.சண்முகம் ஆகியோரும் தி.மு.க.விலிருந்து விலகினர்.

இவர்களுள் சிலர் ஒன்று சேர்ந்து மக்கள் திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார்கள். புரட்சித் தலைவர் சொன்ன பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒட்டியே இவர்களது குற்றச்சாட்டுகளும் இருந்தன. என்றாலும், இந்தக் கட்சியினரைப் புரட்சித் தலைவர் சற்றும் பொருட்படுத்தவில்லை.!.

 
 
 
 

This post has been viewed 150 times