21.கார் விபத்தில் சபாபதி மரணம்

 

21.கார் விபத்தில் சபாபதி மரணம்

மக்கள் திலகம் எம்ஜி.ஆர். முதல் அமைச்சராக ஆன பிறகு 1979-ல் மதுரை மாவட்டம் சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருந்தபோது, நடந்த சம்பவம். பதினைந்து வயதிலிருந்து மக்கள் திலகத்தின் தேவையான பணிகளை கவனித்து வந்தவர், சபாபதி என்பவர். எம்.ஜி.ஆர். வெளியூர்களுக்கு செல்லும் போது, அவர் கூடவே செல்பவர். இன்னும் சொல்லபோனால் மக்கள் திலகத்துக்கு உதவியாளராக இருந்தவர். இப்படிபட்ட இவர் எப்போதுமே மக்கள் திலகம் அமர்ந்து செல்லும் காரில் தான் கூடவே செல்வார். பழனியில் ஒரு பொதுநிகழ்ச்சியில் இரவில் கலந்து கொண்டு மதுரைக்கு திரும்பும் வழியில், அன்றைய தினம் மக்கள் திலகம் அமர்ந்து இருந்த காரில் இவருக்கு இடம் இல்லாததால் பின்னால் வந்த காரில் சபாபதி வந்தார்.
முதல் அமைச்சர் காருக்கு முன்னும் பின்னும் போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்புக்கு போலீஸ் ஜீப் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு பின்னால் சபாபதியும், சில அரசாங்க அதிகாரிகளும் அமர்ந்து வந்த கார், வழியில் ரோட்டில் நின்று கொண்டு இருந்த லாரிமீது மோதியதால்,. காரில் இருந்தவர்கள் பலமாக காயம் அடைந்தனர். இந்த காருக்கு பின்னால் வந்து கொண்டு இருந்த அரசியல்வாதிகளின் கார்கள் சம்பவம் நடந்த இடத்தில் நிறுத்தி, காயம் அடைந்தவர்களை,மதுரை மத்திய அரசாங்க மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கு இடையில் எம்.ஜி.ஆர். மதுரையில் தான் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்த பிறகு, காரிலிருந்து இறங்கியவுடன் தன் உதவியாளர் சபாபதியை காணவில்லையே என்று சற்று நேரம் எதிர் பார்த்துவிட்டு, தான் தங்கி இருக்கும் அறைக்கு சென்றார். அங்கு உள்ள அரசாங்க விடுதியில் உள்ள அதிகாரிகள் அவர்களுடைய சாவியை எடுத்து வந்து அறையை திறந்து விட்டனர். அறைக்கு சென்ற பிறகும் “ சபாபதி இன்னும் வரவில்லையே” என்று மற்றவர்களிடம் கேட்டார். யாருக்குமே இதற்கு பதில் சொல்லமுடியாமல் சபாபதி காரை எதிர்பார்த்துக் கொண்டு நின்றனர்.
அப்போது ஒருகாரில் வந்தவர்கள், எம்.ஜி.ஆரிடம், சபாபதிக்கு ஏற்பட்ட விபத்து பற்றி கூறினார்கள். “மதுரை மத்திய அரசு மருத்துவமனையில், சபாபதி உட்பட அனைவரையும் சேர்த்துள்ளோம்” என்று சொன்னவுடன் பதட்டத்தில் மக்கள் திலகம் மனதுடிப்புடன் உடனே, அந்த மருத்துவமனைக்குச் சென்று தன் உதவியாளர் சபாபதியையும், மற்றவர்களையும் பார்த்தார். சபாபதிக்கு காயங்கள் மிக அதிகமாக இருந்த நிலையில், சபாபதி படுக்கையில் உணர்வற்ற நிலையில் இருந்ததைப் பார்த்த மக்கள் திலகம் அதிர்ச்சி அடைந்தார். டாக்டர்களிடம்,”இந்த விபத்தில் காயம் அடைந்த மூவரையும் நீங்கள் எப்படியாவது காப்பாற்ற வேண்டும். தேவையானால் சென்னையிலிருந்து மருத்துவர்களை அழைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு, தான் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார். பின்னர் தண்ணீர் குடித்துவிட்டு உணவு சாப்பிடாமல் படுத்துவிட்டார்.
அடுத்த நாள் மதுரை மாவட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய பல நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, முதல் விமானத்தில் சென்னைக்கு சென்று விட்டார். சென்னை ராமாபுரம் தோட்டத்திற்கு வந்த பிறகு, அன்று முழுவதும் எங்கும் செல்லவில்லை. அடுத்து இரண்டு நாளில் சபாபதி இறந்து விட்ட செய்தியை கேட்டவுடன் ,அதிர்ச்சி அடைந்து சற்று நேரம் யாரிடமும் பேசாமல் இருந்துவிட்டார். பிறகு சபாபதியின் சடலத்தை, மருத்துவ பக்குவத்துடன் சென்னைக்கு எடுத்து வர உத்தரவிட்டார். அதன்படி, சபாபதியின் உடல், அ.இ.அ.தி.மு.க கட்சி தலைமை கழகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர், மைலாப்பூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இது போன்ற எவ்வளவோ பேர் சவ அடக்கத்துக்கு காரிலும், நடந்தும் சென்று உள்ளார். “1957–ல் இருந்து 1979 வரை தன் கூடவே இருந்து தனக்கு வேண்டிய பணிகளை செய்து வந்த ஒரு நல்ல உடன் பிறப்பை இழந்து விட்டோமே” என்று மன வருத்தத்தோடு கண்ணீர் சிந்தலோடு சபாபதியுடைய உடல் அடக்கத்தில் பங்கேற்றார். இது ஒரு சாதாரண விஷயம் அல்ல., தன்னிடம் வேலைசெய்யும் நபர் எவ்வளவுதான் நல்லவராக இருந்தபோதிலும் அவன் ஒரு வேலைக்காரன்தான் என்று நினைப்பவர்கள்தான் உலகத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் திலகம், அப்படி அல்ல. இது அவருடைய வரலாற்றில் ஒரு பெரிய அம்சம் ஆகும். இது போன்ற பல துன்பமான விஷயங்களை அவருடைய வாழ்க்கை நாட்களில் சந்தித்து உண்டு.
மக்கள் திலகம் , கும்பகோணத்தில் படிக்கின்ற காலகட்டத்தில், அன்றைய காலம் ஆங்கிலேயர் ஆட்சி நடந்தது. பள்ளிக்கூடத்தில் படிக்கிற ஏழைபிள்ளைகளுக்கு அன்றைய காலத்தில் முதலில் ஏட்டு சுவடி. அதன் பிறகு சிலைட்டு, மூன்றாவதுதான் புத்தங்கள். அப்படி இருக்கிற காலகட்டத்தில் கூட அரசாங்க செலவில் இவைகளை வாங்கி கொடுக்கமாட்டார்கள். பெற்றோர்கள் தான் சொந்த செலவில் வாங்கி, தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் ,குடிதண்ணீர் பானையை கூட பிள்ளைகள் சேர்ந்துதான் தங்கள் சொந்த காசில் வாங்க வேண்டும். இதனால் பல வகுப்புகளில் படிக்கின்ற நேரத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கூட இருக்காது. அந்த காலகட்டத்தை நினைத்து பார்த்தது, மக்கள் திலகம் தான்.
“இனிமேல் முன்போல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்ததை போல பள்ளி பிள்ளைகளுக்கு குடிநீர் கூட இல்லாமல் இருக்க கூடாது.” என்று எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். ஏற்கனவே காமராஜர் முதல் அமைச்சராக தமிழ்நாட்டில் இருந்த போது, அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு பள்ளி கூட நாட்களில் மதிய உணவு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். அதைவிட மிக சிறப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஏழை குழந்தைகளுக்கும், சத்துணவு போட வேண்டும் என்ற சட்டத்தை எம்.ஜி.ஆர். அமல்படுத்தினார்.!!!.

 
 
 
 

This post has been viewed 267 times