3. நியூ 7 வொண்டர்ஸ்

 

உலக அதிசயங்கள்

3. நியூ 7 வொண்டர்ஸ்

(உலக அதிசயங்கள் பற்றி விரிவாக பார்த்து வருகிறோம். கடந்த இதழில் வெளியான பகுதியின் தொடர்ச்சியை பார்ப்போம்)
பதினாறாம் நூற்றாண்டு வரை ஆண்டிபாட்டர் பட்டியலிட்ட அதிசயங்கள் தான் உலக அதிசயங்களாக வழக்கத்தில் இருந்தன. எகிப்து பிரமீடைத் தவிர ஏனையவை காலப்போக்கில் அழிந்து விட்டது, ஒரு சோகமான சம்பவம். வரலாற்றை பதிய மட்டுமின்றி, பாதுகாக்கவும் தவறிய மனித இனத்தால், திரும்ப எழுப்பவே முடியாத அந்த ஆறு பழமையான அதிசயங்களை அழிந்து போக விட்டு விட்டார்கள். இதனால் பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகு, சில அறிஞர்கள் உலக அதிசயங்கள் என்று வேறு சில இடங்களை சொல்ல ஆரம்பித்தனர். ஆளாளுக்கு தங்களுக்கு பிடித்த இடங்களை சேர்த்து கொண்டு விட்டதால், உலகம் அதிசயம் பற்றி எந்த தெளிவும் இல்லாமல் குழப்பமாக இருந்து வந்தது.
இந்நிலையில் கோபான் ப்ரீவர் என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளர் 1870-ம் ஆண்டு வரலாற்று புள்ளிவிபரங்கள் அடங்கிய Brewers Dictionary of Phrase & Fable  என்ற அகராதி ஒன்றை வெளியிட்டார். ப்ரீவரின் அந்த வரலாற்று அகராதியில் இடைக்காலத்தில் கட்டப்பட்ட சில கட்டிடங்களும் நவீன காலத்தில் கட்டப்பட்ட சில கட்டிடங்களும் சேர்த்து உலக அதிசயமாக குறிப்பிட பட்டது. இங்கிலாந்தின் ஸ்டோன் ஹெஞ், மெக்சிக்கோவின் சிச்சென் இட்சா பிரமீட், ரோமின் கொலோசியம், சீனப் பெருஞ்சுவர், இத்தாலியின் பைசா நகர் சாய்ந்த கோபுரம், இந்தியாவின் தாஜ் மஹால், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், பிரான்சின் ஈபெல் கோபுரம் என புதிதாக உலக அதிசயங்களுக்கான இடங்கள் அதில் அறிமுகமாகின. இந்த பட்டியலில் தான் முதன் முதலாக இந்தியாவின் தாஜ்மஹால் உலக அதிசயம் என சேர்க்கபப்ட்டது.
அப்போது இந்த அளவு உலக விஷயங்களை பற்றி விழிப்புணர்வு இல்லாததால் இந்த இடங்களை விட சிறப்பான இடங்கள் பற்றி அறிந்து கொள்ளவோ, அதை இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளவோ வழியின்றி போனது. இதனால் சில நூற்றாண்டுகளாக அதிகாரபூர்வமற்ற இந்த உலக அதிசயபட்டியல் வழக்கத்தில் இருந்தது. இது மத்திய கால உலக அதிசயங்கள் எனப்பட்டது. அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், பிரான்சின் ஈபெல் கோபுரம் போன்றவை எல்லாம் உலக அதிசய பட்டியலில் இடம் பெற்று இருந்தது. இதுபற்றி பல வரலாற்று ஆய்வாளர்களால் விமர்சனம் செய்யப் பட்டது. கோபான் ப்ரீவர் வெளியிட்ட அகராதி சொன்னது எல்லாம் உலக மக்களின் கருத்தாகி விடாது என்று பல நாட்டு அறிஞர்களால் சொல்லப்பட்டது.
இறுதியாக மக்கள் தீர்ப்புக்கேற்ப இந்த உலக அதிசய பட்டியலை உருவாக்கலாம் என்ற நிலை சமீபத்தில் உருவானது. இதற்கு காரணம் ஏற்கனவே இருந்த பட்டியலில் இருந்த குறைபாடு மட்டுமல்ல, தற்சமயம் உலக மக்கள் பலர் உலக அறிவும், பல நாடுகளை சுற்றிப்பார்த்த அனுபவமும் கொண்டு இருக்கிறார்கள். எனவே மக்களே பார்த்தோ, அல்லது படித்தோ வியந்த இடங்களை தாங்களே தேர்ந்தெடுக்கலாம் என்ற அடிப்படையில், புதிய உலக அதிசயம் உருவாக்கும் பணி தொடங்கியது. 1999–ம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த பெர்னார்ட் வெபர் என்ற திரைப்பட இயக்குனர் அதிகாரப்பூர்வமான புதிய ஏழு உலக அதிசயங்களை கொண்ட பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக அவர் “ நியூ 7 வொண்டர்ஸ்” என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தினார்.
2001–ம் ஆண்டு புதிய பட்டியல் தயாரிக்கும் பணிக்கான ஒரு இணையதளம் துவங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து புதிய உலக அதிசயங்களுக்காக போட்டியிடும் நினைவுச் சின்னங்களுக்கான விண்ணப்பங்கள் 2005–ம் ஆண்டு நவம்பர்-24 வரை பெற்றுக்கொள்ளப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 177- நினைவு சின்னங்கள் பரிசீலனைக்கு வந்தது. அவற்றில் இருந்து முக்கியமான 21 முக்கிய அதிசயங்கள் மட்டும் உலகின் தலைசிறந்த இடம் என்று தெரிவு செய்தது. பின்னர் அவை கட்டிடக்கலை வல்லுனர்களை கொண்டு போட்டிக்கு தகுதியானவை என்று தேர்ந்தெடுத்தது, ”நியூ 7 வொண்டர்ஸ்” அறக்கட்டளை. இதை 2006 ஜனவரி 1 அன்று அறிவித்தது.
இந்த 21 முக்கிய அதிசயங்களில் உலகின் பண்டைய உலக அதிசயபட்டியலில் இடம் பிடித்திருந்த எகிப்து பிரமீடும் இருந்தது. ஏற்கனவே உலக அதிசயமாக இருந்த பிரமிடை ஓட்டேடுப்பிற்க்குள் கொண்டு வர எகிப்திய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரமீடு மதிப்புமிக்க தளமாக கருதப்பட்டு ஓட்டெடுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து எஞ்சியிருந்த 20 முக்கிய அதிசயங்கள் மட்டும் மக்களின் ஓட்டெடுப்பிற்காக விடப்பட்டது. இதில் ஆறு இடம் தேர்வு செய்ய இருந்தது. 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் ஓட்டேடுப்பு முடித்துக்கொள்ளப்பட்டு 2007–ம் ஆண்டு ஜூலை 7–ம் தேதி போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள லிஸ்பன் நகரில் வெற்றி பெற்ற புதிய ஏழு உலக அதிசயங்கள் அறிவிக்கபப்ட்டது. அதன்படி மெக்சிக்கோவின் சிச்சென் இட்சா, பிரேசிலின் மீட்பர் கிறிஸ்து சிலை, ரோமின் கொலோசியம், சீனப் பெருஞ்சுவர், பெரு நாட்டின் மாச்சு பிச்சு, ஜோர்டான் நாட்டின் பெட்ரா, இந்தியாவின் தாஜ் மஹால் ஆகியவை புதிய உலக அதிசயங்களாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.
புதிய உலக அதிசயத்தில் முதலாவது சீனப் பெருஞ் சுவர் இடம் பெற்றது. கி.மு. 221-ம் ஆண்டு கால கட்டத்தில் சீனபெரும் சுவர் உருவானது. சின்-ஷி-ஹுவாங், தனது ஆட்சிக் காலத்தில் மங்கோலியர்கள் படையெடுப்பை தடுக்க இந்த சுவரைக் கட்டி முடித்தார். இதற்கு வான் லிகுவாங்கெங் என்று பெயரிட்டனர். 8850 கிலோ மீட்டர் நீளத்துக்கு விரியும் பெரும் சுவரைத் தனித் தனிப் பாதுகாப்புச் சுவர்களாக கட்டபப்ட்டது. இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை நீண்டு செல்கிறது. எதிரிகளின் நகர்வுகள்குறித்து, பாசறைகளில் இருந்த படைகளை எச்சரிக்க வேண்டியதும் இருந்ததால் இடை இடையே காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. உலகமே அதிசயிக்கும் இந்த சீன பெரும் சுவர் புதிய உலக அதிசயத்தில் முதலாவதாக உள்ளது.
பெட்ரா என்றால் கிரேக்க மொழியில் கல் என்று அர்த்தம். இது ஜோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று புகழ் மிக்க நகர். இது அதனுடைய பாறை வெட்டு சிற்பங்கள் மற்றும் அதன் கட்டடக்கலை முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு.6–ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. ஜோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது. ஓர் எனப்படும் மலைச் சரிவில் இந்நகரம் உள்ளது. புதிய உலக அதிசயத்தில் இரண்டாவதாக இது உள்ளது.!!!.

 
 
 
 

This post has been viewed 316 times