உலக அதிசயங்கள் – 4.தாஜ்மகால்

 

உலக அதிசயங்கள் – 4.தாஜ்மகால்

(உலக அதிசயங்கள் பற்றி விரிவாக பார்த்து வருகிறோம். கடந்த இதழில் வெளியான பகுதியின் தொடர்ச்சியை பார்ப்போம்)
கொலோசியம் என்பது, போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம். பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம். இங்கு நடக்கும் பயங்கரமான சண்டையை பார்ப்பதற்காக மக்கள் இங்கு கூடுவர். அரங்கை சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை அம்ஃபி தியேட்டர் எனப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் வட்டவடிவ அரங்கம் என்ற பொருள் கொண்டது. பிளேவியன் அம்ஃபிதியேட்டர் என அழைக்கப்பட்ட கொலோசியம் முதலாம் நூற்றாண்டில் கட்டபப்ட்டது. அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள். இது புதிய உலக அதிசயத்தில் மூன்றாவது இது.
சிச்சென் இட்சா, மெக்சிகோ நாட்டின், யுகட்டான் என்னுமிடத்திலுள்ள, தொல்பொருளியற் களம். இது மாயன் நாகரிகக் காலத்தைச் சேர்ந்தது. கி.பி. 600 -ம் ஆண்டுக்கு முன்னர் பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987–ல், தொல்ட்டெக் அரசனான குவெட்சால்கோட்டில் என்பவர் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டார். அக்காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். 1221-ம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்று புகழ் மிக்க சிச்சென் இட்சா புதிய உலக அதிசயங்களில் நான்காவது.
மச்சு பிச்சு என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம். இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80கி.மீ. வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக “இன்காக்களில் தொலைந்த நகரம்” என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது. இது 1450-ம் ஆண்டில் கட்டப்பட்டு பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. அழகும், வரலாற்று பெருமையும் கொண்ட இந்த நகரம் புதிய உலக அதிசயத்தில் ஐந்தாவது.
தாஜ் மகால்: இந்தியாவிலுள்ள நினைவுச் சின்னங்களுள், ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 1654–ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இது ஆறாவது புதிய உலக அதிசயம்.
மீட்பர் கிறிஸ்து சிலை, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ளது. இது தேக்கோ கலையின் மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும். இச்சிலை உலகிலேயே 4–வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். இது 31 அடி உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து, 130 அடி உயரமும், 98 அடி அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 டன்கள். இது திசுகா காடுகளில் உள்ள கொர்கொவாடோ மலையின் மீது நகரினை நோக்கியவாறு அமைந்துள்ளது. கிறிஸ்தவ சின்னமான இது, ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டுக்கே சின்னமாக கருதப்படுகின்றது. இது 1922–ல் இருந்து 1931–குள் கட்டட்ப்பட்டதாகும். புதிய அதிசயப்பட்டியளில் இது ஏழாவதாக உள்ளது.
இவை கண்டுகளிக்க மட்டுமல்ல, இனி வரும் தலைமுறையினரும் காணும் வகையில் பாதுகாக்க படவும் வேண்டும் என்பது கோரிக்கை.!!!.

 
 
 
 

This post has been viewed 411 times