புற்று நோயை உருவாக்கும் பிளாஸ்டிக் பைகள்

 

புற்று நோயை உருவாக்கும் பிளாஸ்டிக் பைகள்

பிளாஸ்டிக் பைகள் உள்பட பிளாஸ்டிக் பொருட்கள், புற்று நோயை உருவாக்குகின்றன. எனவே, “நெகிழி” என அழைக்கப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது. பைகளானவை எளிதில் மட்கும் தன்மை அற்றவை. ஒரே ஒரு நெகிழி பையானது மட்குவதற்கு பல ஆண்டுகளாகும். மண்ணின் திறன் அமைப்பிற்கும், மற்றும் மண் சத்துக்களுக்கும் நெகிழியானது கெடுதல் புரிகின்றது. பிளாஸ்டிக், நாட்டின் சூழ்நிலைகளையும் மாசுப்படுத்துகின்றன.

0af66c85026643bd95b7bd946919d170_18

நெகிழி என்பது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்று. பிளாஸ்டிக் பைகளே நமது அன்றாட வாழ்வில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் இன்று மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. பிளாஸ்டிக் என்பது, செயற்கை மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டவை. இவை கிரேக்க மொழியில் “பிளாஸ்டிக் கோஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பெட்ரோலியம் வகையை சார்ந்தது.

நெகிழி வகைகள் தயாரிப்பு:-

· அதிக அடர்த்தி உள்ள பாலி எத்திலின்கள், குளிர்பானங்கள் அடைக்கப்பட்ட பாட்டில்கள்,

· குறைந்த அளவு அடர்த்தி உள்ள பாலி எத்திலின்கள், கேரி பைகள்.

· குளிர்பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள்.

· குளிர்பானம் உறிஞ்சும் குழாய்கள்.

· மின்சார ஒயர்கள். கார் வாகனங்கள் பொருட்கள் தயாரிப்பு.

· பிளாஸ்டிக் குறுந்தகடு போன்றவையும் தயாரிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் இன்று நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒன்றாக திகழ்கிறது. இவை காய்கறி, பால், துணிக்கடைகள், மருந்துக்கடைகள், மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள், தேனீர் கடைகள், வாகனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்ற எண்ணற்ற முறையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் பிளாஸ்டிக்கின் நன்மைகள் அல்லது தீமைகள் பற்றி யாரும் சிந்திப்பது இல்லை. குறைந்த விலையில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் கிடைப்பதாலும் வசதியாக இருப்பதாலும் மக்கள் அவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

பிளாஸ்டிக்கின் தீமைகள்:-

· பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது.

· வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கிறது.

· நெகிழி குடிதண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்து கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.

· நம் அன்றாட வாழ்வில் தூக்கியெறியப்படும் பிரிக்காத குப்பைகளினால் கொசுக்களால் பரவும் கொடிய நோய்கள் உருவாக காரணமாகிறது.

· பிளாஸ்டிக் உறைகளால் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உணவுப்பொருட்களால் உடலுக்கு பல ஊறு விளைகிறது.
· சுகாதாரக் கேடு உருவாகவும், பிளாஸ்டிக் காரணமாகிறது.

· பிளாஸ்டிக் பைகள் மற்றும் தூக்கி எறியப்பட்ட “பிளாஸ்டிக் பேக்கேஜிங்” பொருட்கள், மழை நீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளது.

· மக்கள் பண்டைய காலங்களில் இருந்து வாழை இலையில் சாப்பிடுவதும் துணிப்பைகளில் தாம்பூல பைகள் தருவதும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். பித்தளை, சில்வர் போன்றவைகளில் தண்ணீர் சேமித்தல், நீர் அருந்துதல், போன்ற முறைகளில் இருந்தவர்கள் தற்போது பிளாஸ்டிக் மோகத்தில் இயற்கை வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள் போன்ற எண்ணற்ற வடிவில் செயற்கையை நாடிச் செல்கின்றனர். ஆனால் பிளாஸ்டிக்கால் உருவாகும் பொருட்கள் அனைத்தும் வேதிமுறையில் தயாரிக்கப்பட்டவை.

இந்த பிளாஸ்டிக்கில் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ, வெகு நாட்களாக வைக்க கூடாது. பிளாஸ்டிக்கானது நம் உடலில் தேவையற்ற கொடிய வேதிப்பொருட்கள் சேர்த்து பல நோய்களுக்கு காரணமாவும், கேன்சர் போன்ற வியாதியை உருவாக்கும் தன்மையையும் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது வளரும் நமது சந்ததியினரையும் வெகுவாகப் பாதிக்கிறது. கடைகளில் உணவுப்பொருள் வாங்கும் போதும், பிளாஸ்டிக் தாளில் உணவு பொருளை வைத்து பார்சல் செய்து கொடுக்கிறார்கள். மேலும் சட்னி, சாம்பார், கூட்டு போன்றவற்றை பிளாஸ்டிக் தாளில் பொதிந்து கொடுக்கிறார்கள். இது போன்று பிளாஸ்டிக் தாள் அல்லது பைகளில் வைக்கப்பட்ட உணவு, மற்றும் சட்னி, சாம்பாரை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு, கேன்சர் உருவாகலாம் என்று மருத்துவ துறை அறிக்கை தெரிவிக்கிறது.

பிளாஸ்டிக் மட்குவதற்கு ஆகும் காலம்:-

· பிளாஸ்டிக் பைகள் (100–1000 ஆண்டுகள்)

· பஞ்சுக் கழிவுகள் (1–5 மாதங்கள்)

· காகிதம் (2–5 மாதங்கள்)

· உல்லன் சாக்ஸ் (1–5 ஆண்டுகள்)

· டெட்ரா பேக்குகள் (5 ஆண்டுகள்)

· தோல் காலணி (25–40 ஆண்டுகள்)

· டயபர் நாப்கின் (500–800 ஆண்டுகள்)

பிளாஸ்டிக்கை தவிர்த்தல்

* மளிகைப் பொருட்கள், பால், காய்கறி, துணிக்கடை, மருந்து கடை, மின்னணு சாதனக் கடைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போது தனிஒரு சேமிப்பு துணிப்பையை வைத்துக் கொள்ள வேண்டும்.

* பதப்படுத்தப்பட்ட மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.

* அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.

* காப்பர் ஒயர்கள் போன்றவைகளை கண்ட இடத்தில் எரித்தல் கூடாது.

* பிளாஸ்டிக் பாட்டில்கள், பேக்கேஜிங் பைகள், தொழிற்சாலை லைனர்கள், சுருள்கள், வணிகக் குப்பைகள், மளிகை பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் போன்றவைகளும் மனிதனுக்கு பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

* பிளாஸ்டிக்கை தவிர்க்கும் போது விவசாய நிலம், மணல், நீர்நிலைகள், விலங்கினங்கள், சுற்றுச்சூழல் மேம்பாடு அடைதல், தட்பவெப்ப நிலையை சமன்படுத்துதல் போன்றவைகள் மூலம் நம் நாடு தூய்மையாகவும், பசுமையாகவும் இருக்க உதவும்.
சுற்றுச்சூழல் பாதிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பொருள்களும், அதன் கழிவுப் பொருள்களுமே. எனவேதான் அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

குறிப்பாக பாலிதீன் பைகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. பாலிதீன் பைகளுக்கு மாற்றாக பிற வகையாலான பைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

உலகளவில் ஆண்டுக்கு 50,000 கோடியிலிருந்து ஒரு லட்சம் கோடி வரையிலான அளவுக்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு சராசரியாக ஒவ்வொரு தனிமனிதனும் தலா 150 பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாகவும், இவற்றில் பெரும்பாலானவை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படுபவை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை மொத்த பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டில் 50 சதவீதத்துக்கும் அதிகமானது பாலிதீன் பைகள் தான். ஒரு பிளாஸ்டிக் பை பயன்படுத்தப்படும் நேரம் சராசரி 20 நிமிடங்கள்தான். ஆனால் அவை மக்குவதற்கு 500 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும்.

பிளாஸ்டிக் கழிவுகள் நிலவளத்தை பாதிக்கின்றன. குறிப்பாக விவசாய நிலங்களில் பரவிக் கிடக்கும் பாலிதீன் கழிவுகளானது, மண்ணில் நீர் இறங்குவதைத் தடுப்பதுடன், காற்று பரவுவதையும் தடுக்கின்றன. இதன் காரணமாக மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.

மண்வளத்தை பாலிதீன் பைகள் கெடுப்பதுடன், மழை, பெய்யும்போது நீரை மண்ணுக்குள் உறிஞ்ச விடாமலும் தடுக்கின்றன.கடற்கரை நகரங்களில் வசிப்பவர்களாலும், கடற்கரை பகுதிக்கு சுற்றுலா வருவோராலும் வீசியெறியப்படும் பாலிதீன் பைகள் கடலுக்குள் சென்று சேருகின்றன. நீர்நிலைகள் கடலில் வந்து சேரும்போதும் அவற்றின் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்கு வருகின்றன.

பிளாஸ்டிக் பைகள் காற்றின் மூலமும் கடலில் சேர்கின்றன. இவற்றை உட்கொள்ளும் மீன்கள், கடல் ஆமைகள், திமிங்கலங்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பெயின் நாட்டு கடற்கரை பகுதி ஒன்றில், 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. உயிருடன் இருந்த அத்திமிங்கலத்தை, மீண்டும் கடலுக்குள் விட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடியாமல் போனது. திமிங்கலமும் இறந்து போனது.அந்த திமிங்கலத்தின் உடலை பரிசோதித்தபோது, அதன் குடல் பகுதியில் சுமார் 50 கிலோ எடை அளவுக்கு பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பிளாஸ்டிக் பைகளில் இருக்கும் டையாக்சினால் ஆண்மைக்குறைவு, மலட்டுத் தன்மை, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். உலகப் புற்றுநோய் ஆய்வுக் கழகம் டையாக்சினை ஒரு புற்றுநோய் காரணி என அடையாளம் கண்டுள்ளது.

கால்வாய்களில் அடைத்துக் கொள்ளும் கழிவுப் பொருள்களில் பெரும்பாலானவை பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்கள், டம்ளர்கள் இவைதான். முறையாக அப்புறப்படுத்தப்படாத இந்த பாலிதீன் பைகளால் மழைநீரும், கழிவுநீரும் சாலையில் குளம்போல் தேங்கும் நிலை உள்ளது.

தற்போதுகூட பாலிதீன் பைகளுக்கு மாற்றாக, துணிப்பை, சணல் பைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதுபோல் கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ள பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்கின்றனர்.

பாலிதீன் பைகளை பறிமுதல் செய்யும் அதிகாரிகள், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீதோ, அவற்றை கடைகளுக்கு விநியோகிக்கும் மொத்த விற்பனையாளர் மீதோ நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. உற்பத்திக்குத் தடைவிதித்தால் மட்டுமே பாலிதீன் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும்…!!!.

 
 
 

1 Comment

  1. Bala says:

    Good article. Goverment should take strict action against plastic usage and production. Everyone should avoid/reduce the usage of plastic. I do it.
    This to save our children and other lives in the world.
    Except us (selfish) no other lives damage the environment this much.

 

This post has been viewed 778 times