கவிஞர் வாலி

 

கவிஞர் வாலி

3. கண்ணதாசனின் தாசன் வாலி

( கவிஞர் வாலி பற்றி கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை பார்ப்போம்)

ஒரு நாள் கவிஞர் வாலி ,எம்.ஜி.ஆரிடம், ‘அண்ணா நீங்கள் பின்னாளில் அவரைப் (ஜெயலலிதா) பாட வைக்கப் போறீங்க என்று தெரிவித்தார். அன்றே ஒரு பாடலை எழுதிவிட்டேன் என்றார், வாலி. அந்தப் பாடல் ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன்., என்பாட்டுக்கு அவன் தான் தலைவன் .,ஒரு குற்றமில்லாத மனிதன் கோயில் இல்லாத இறைவன்” இதை ‘அரசகட்டளை’ படத்தில் ஜெயலலிதாவே பாடி நடித்திருப்பார். அதைக் கேட்டு எம்.ஜி.ஆர் தன்னை மறந்து சிரித்துவிட்டார். அதே போன்று ‘அன்னமிட்டகை’ படத்தில் ‘அன்னமிட்ட கை இது ஆக்கிவிட்ட கை’ உன்னை என்னை உயர வைத்து, உலகமெல்லாம் வாழவைத்த அன்னமிட்ட கை’ என்று எழுதியிருந்தார், வாலி. இந்தப் பாடலின் கருத்துப்படி எம்.ஜி.ஆர். முதல்வரானதும் குழந்தைகளுக்கு சத்துணவு போட்டார்.

18-1374152655-vaali-lyricist

அவருடைய கை எத்தனையோ பேருக்கு அன்னமிட்ட கையாகத் திகழ்ந்தது. ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி’ என்று ஒரு பாடலை எழுதினார், வாலி. எம்.ஜி.ஆர் புதிய கட்சி ஆரம்பித்ததும்,நல்ல நல்ல பிள்ளைகள் கட்சியில் வந்து சேர்ந்தார்கள். அவரை நாடாள வைத்தார்கள். ‘காவல்காரன்’ படத்தில் ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது, கேட்டேன் தந்தாய் ஆசை மனது…’ என்ற பாடலை எழுதியிருந்தார் கவிஞர் வாலி.

அப்பொழுது எம்.ஜி.ஆர் குண்டடிப்படிருந்தார். அவர் உடல் நலம் பெற்று வந்து, இந்தப் பாடல் காட்சியில் பாடி நடித்தார். நடிகர் பிரபு நடித்த ‘ராஜா கைய வெச்சா’ என்ற படத்திற்கு, ‘மழை வருது மழை வருது., குடை கொண்டுவா., மானே உன் மாராப்பிலே…’ என்று கவிஞர் வாலி ஒரு பாடலை எழுதியிருந்தார்.

இந்தப் பாடலை படமாக்கும்போதெல்லாம் ஊட்டியில் மழை வந்து படப்பிடிப்பை தடைசெய்தது. இப்படி பதினாறாயிரம் பாடல்களுக்கு மேல் ஓய்வின்றி எழுதி சாதனைப் புரிந்தவர், வாலி. எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு மட்டும் நான்காயிரம் பாடல்கள் எழுதியவர், கவிஞர் வாலி. ரஜினி, கமல், அஜீத், விஜய் என்று எல்லா தலைமுறையினருக்கும் பாடல்கள் எழுதிய ஒரே பாடலாசிரியர் கவிஞர் வாலி மட்டும்தான். இவர் ஒரு முருக பக்தர் .

பாடலாசிரியராக மட்டுமல்ல.. ஒரு எழுத்தாளராக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றவர். நடிகராக அவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர். “பொய்க்கால் குதிரை”யில் நடித்ததோடு, கதை வசனத்தையும் எழுதினார். கமல் ஹாஸனுடன் சத்யா, ஹே ராம் படங்களில் நடித்தார். 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர் கவிஞர் வாலி. சொந்தப் பெயர் ரங்கராஜன். இவருக்கு வாலி என்று புனைப்பெயர் வைத்தவர் பாபு என்ற பள்ளி நண்பர். தந்தை ஸ்ரீனிவாச அய்யங்கார், தாய் பொன்னம்மாள். தனது நாடகத்தில் நடிக்க வந்த ரமணதிலகம் என்ற பெண்மணியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர், கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, இசைஞானி இளையராஜா ஆகியோருடன் பணியாற்றிய, பழகிய நாட்களை வாலி நினைவு கூறும் விதம், அத்தனை ஈர்ப்புடன், உயிர்ப்புடன் இருக்கிறது. . 24 மணி நேரமும் ஊண், உறக்கமின்றி கேட்டுக் கொண்டே இருக்கலாம். இதை மிகையாகச் சொல்லவில்லை… சொல்வதெல்லாம் உண்மை. வாலியின் வார்த்தைகள்…..!

“எம்ஜிஆருக்காக நான் எழுதினேன், ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்று. அப்படியே நடந்தது.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்று எழுதியது என் பேனா… அவர்தான் அசைக்க முடியாத முதல்வராக இருந்தார்…

‘இறைவா நீ ஆணையிடு… இந்த ஓருயிரை வாழ வை’, என்று எழுதினேன். மறுஜென்மம் எடுத்து வந்தார் மக்கள் திலகம்.
ஆனால், எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான், என்றெழுதியதை மட்டும் அந்த கருணாமூர்த்தி கண்டுக்காம விட்டுட்டானே.. அதுதான் என் வாழ்க்கையில் பெரிய வருத்தம்,” என்றார்.

வாலி கோபக்காரர். தனக்கு சீதக்காதியாய் திகழ்ந்த எம்ஜிஆரிடமே கோபத்தைக் காட்டியவர். ஆனால் கவிஞர்களின் கோபம் குழந்தைகளின் கோபத்துக்கு சமம் என்பதை உணராதவரா, அந்த ராமச்சந்திர மூர்த்தி? அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கூட கருதாமல், வாலியை உடன் வைத்து வேண்டியன செய்து ராஜகவியாக வைத்திருந்தார். எம்ஜிஆரின் அரசவைக் கவியரசு கண்ணதாசன் மட்டுமல்ல, வாலியும்தான்!

கவியரசரைப் பற்றி வாலி அளவுக்கு உயர்வாக யாரும் எழுதி – பேசிக் கேட்டிருக்க முடியாது. “கண்ணதாசனுக்கு நான் தாசன்.. அவருக்கு நான் கூடப் பிறக்காத தம்பியாகத்தான் இன்னிக்கு வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் தன் இளவல் என்று சொன்ன மாபெரும் கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் சொன்ன அறிவுரைகளை இன்னைக்கும் நான் கடைப்பிடிக்கிறேன். சொந்தப் படம் எடுக்காதேன்னார்.. நான் அதைச் செய்யவே இல்ல,” என்றார்.

ஒரு கட்டத்தில் வறுமை மிஞ்சி தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்கியபோது, அவரை மீண்டும் வாழச் செய்தது கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா பாட்டுத்தான்.

கண்ணதாசனின் நடையை நீங்கள் பின்பற்றி எழுதியதாகக் கூறப்பட்டபோது எப்படி உணர்ந்தீர்கள் என்று கேட்டதற்கு, “அதுல என்னய்யா தப்பு… என்னை தங்கத்தோடுதானே ஒப்பிடுகிறார்கள்…தகரத்தோடு இல்லையே.. நான் கேட்டது, படிச்சதெல்லாம் கண்ணதாசனைத்தானே. அந்த பாதிப்பு இருக்கத்தானே செய்யும். கண்ணதாசனைப் போலவே நான் எழுதுகிறேன் என்ற ஒப்பீடு எனக்கு சிறுமை அல்ல… பெருமை,” என்றார்.

கவிஞர் வாலிக்கு ரஜினி எப்போதுமே ஸ்பெஷல். அன்றைக்கு அவர் எம்ஜிஆருக்கு எழுதியதையெல்லாம் நவீன தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு எழுதினார். ‘எம்ஜிஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவர் அவர்தான். நண்பர் ரஜினியும் அப்படித்தான். அவருடனும் யாரையும் ஒப்பிட முடியாது. அந்த மனுஷன் மனசு வச்சா… இந்த தமிழ்நாடே வேற மாதிரி இருக்கும்,’ என்பார். கருணாநிதியை பக்கத்தில் வைத்துக்கொண்டே இப்படிச் சொன்னவர் வாலி!

ரஜினிக்காக வாலி எழுதிய ஒவ்வொரு பாட்டும் முத்துப் பாட்டு. பாபாவில் ராஜ்யமா இல்லை இமயமா என்று ஒரு பாடல்… கேட்டுப் பாருங்கள்… அங்கே ரஜினியை அப்படி ரசித்து, உணர்ந்து வார்த்தைகளை வடித்திருப்பார் கவிஞர்
18.07.2013 அன்று கவிஞர் வாலி காலமானார். அவருக்கு பிறந்த ஒரேஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார்
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார்.!!!.

 
 
 
 

This post has been viewed 219 times