100 நாட்களை தாண்டி நடைபெறும் ஹைடிரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்

 

100 நாட்களை  தாண்டி நடைபெறும்  ஹைடிரோ கார்பன்  எதிர்ப்பு போராட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு எதிராக நெடுவாசல் கிராமத்தில் நடந்து வரும் போராட்டம் 100 நாட்களை தாண்டி நடந்து வருகிறது. சாகும் வரை இந்த போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

Farmer-protest_20170302_600_855

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கும் என்பதாலும், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்பதாலும், அந்த திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமைதியாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இவர்களின் போராட்டம் 100–வது நாளை தாண்டிள்ளது. சாகும் வரை இந்த போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

100–வது நாள் போராட்டத்தில், நடிகர் மயில்சாமி, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன் உள்ளிடோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், இத்திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் பகுதி மக்கள் அகிம்சை வழியில் போராடி வரும் நிலையில், அவர்களை தேசத்துரோகிகள் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பது கண்டிக்கதக்கது என்றார்.

பின்னர் பேசிய நடிகர் மயில்சாமி, நடிகர் கமல் கூறிய கருத்திற்கு போட்டி போட்டு கொண்டு பதில் கூறும் தமிழக அமைச்சர்கள், முடிந்தால் நெடுவாசல் கிராமத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இம்மக்களை சந்தித்து விட்டு, பின் கருத்துகளை சொல்லட்டும் என்று கூறினார். மேலும் நடிகர் கமலை விமர்சித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, முடிந்தால் அடுத்த தேர்தலில் நிற்க்கட்டும் என்றும், அவர் நிற்கும் தொகுதியில் கமலை நிறுத்தி ஜெயிக்க வைப்போம் என்றும், அப்போது யார் தேசத்துரோகி என்று தெரியும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் குடிநீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அங்கிருந்து வெளியேற வலியுறுத்தி, கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர்.

இவர்களுக்கு இரண்டு முறையாக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் கதிராமங்கலத்தில் உள்ள அய்யனார் கோவில் திடலில், தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்ட களத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரடியாக சென்று, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். “கதிரா மங்கலத்தில் ஓ.என். ஜி.சி.யின் செயல்பாடுக்களுக்கு எதிராக தேமுதிக போராட்டம் நடத்தும்” என்று கிராம மக்களிடம் உறுதி அளித்தார். விஜயகாந்துடன், அவரது மனைவி பிரேம லதாவும் சென்றிருந்தார்…!!!.

 
 
 
 

This post has been viewed 160 times