அ.தி.மு.க. இணைப்பு முயற்சியில் பா.ஜ.க. தீவிரம்

 

அ.தி.மு.க. இணைப்பு  முயற்சியில்  பா.ஜ.க. தீவிரம்

அ.தி.மு.க. இணைப்பு முயற்சியில், பாரதீய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சசிகலா அரசியலில் பிரவேசித்தார். அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் அமர்ந்தார். அதன் பின் அவர் முதல் அமைச்சராக ஆக வேண்டும் என்று காய் நகர்த்தியதால், முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வம், முதல்வர் பதவியில் இருந்து விலகி, தனி அணியாக செயல்பட தொடங்கினார்.

4456924-mgr-images

 

அவருக்கு ஆதரவாக 13 எம்.எல்.ஏ.க்களும், 12 எம்.பி.க்களும் இருக்கிறார்கள். அதன் பின் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சசிகலா, தினகரனால், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்து எடுக்கப்பட்டு, அவரும் பதவி ஏற்றார். பின்னர் காலப்போக்கில் அவர் , சசிகலா, தினகரை ஓரம் கட்டி விட்டு, தனியணியாக செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தது.இதற்கிடையில், தினகரன், இரட்டை இலை சின்னத்துக்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, பழனிச்சாமி அணியில் இருந்த 47 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்து அரசியல் நடத்தி வருகிறார். இப்போதுள்ள சூழலில், தனி மெஜாரிட்டி இல்லாமல் தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், எடப்பாடி அணியும், பன்னீர் செல்வம் அணியும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கை, இரு தரப்பிலும் எழுந்தது. இதற்காக இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. என்றாலும், இந்த இணைப்பு நடைபெற வில்லை. இதற்கிடையில், டி.டி.வி. தினகரன், சிறையில் இருக்கும் சசிகலாவை அடிக்கடி சந்தித்து அவரது ஆலோசனையின் பேரில் நடந்து வருகிறார்.

இன்றைய தமிழக அரசியல் சூழலில், எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு இணக்கமாகவே அனைத்து பிரச்சினைகளிலும் நடந்து வருகிறார். ஓ. பன்னீர் செல்வம், ஏற்கனவே நரேந்திர மோடியின் அறிவுரையின் பேரில்தான் தனியணியாக உருவெடுத்தார் என்பது தமிழக அரசியலாளர்கள் அறிந்ததே. சிறையில் சசிகலா இருக்கும் சூழலிலும், சிறைக்கு சென்று ஜாமீனில் தினகரன் வெளியே வந்திருக்கும் சூழலிலும், இந்த அணியினரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான போக்கையே கடைபிடித்து வருகிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை தங்களாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான், பாரதீய ஜனதா தலைவர்கள் நரேந்திர மோடி, அமித்ஷா போன்றவர்கள் செயல் பட்டு வருகிறார்கள். இப்போதுள்ள சூழலில் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் இருக்கும் அதிமுக ஆட்சிக்கு இன்னும் 4 ஆண்டுகள் பதவி காலம் இருக்கிறது. இந்த சூழலில், அதிமுக -பாஜக ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பதே, பாஜக மேலிட தலைவர்களின் நோக்கமாக இருக்கிறது. அதனை நோக்கியே, காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

இதற்கிடையில், அதிமுக-வின் மூன்று அணிகளையும் ஒன்றாக இணைத்த பின், தமிழகத்தில் அதிமுக- -பாஜக கூட்டணி ஆட்சியை மலரச்செய்ய பாரதீய ஜனதா தலைவர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். இதற்கிடையில் முதல்வர் பதவியை எடப்பாடி வைத்துக் கொள்ளவே விரும்புகிறார். அவர் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. “ பன்னீர் செல்வத்துக்கு 12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுதான் உள்ளது. எனவே அவர் முதல்வர் பதவி கேட்பதற்கே தகுதி இல்லாதவர். அவரது ஆதரவாளர்கள் இருவருக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுக்கிறோம்” என்று எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கூறி வருவதாக தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

மேலும் முதல்வர் பழனிச்சாமி டெல்லி சென்ற போதும், இணைப்பு முயற்சி பற்றி அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாகவும், இதே பேச்சு நரேந்திர மோடி தனுஷ்கோடிக்கு கலாம் நினைவு மண்டபத்தை திறந்து வைக்க வந்த போதும் நீடித்ததாகவும் தெரிய வருகிறது. இதற்கிடையில் பன்னீர் செல்வம் அணியினர் விரைவில் பாரதீய ஜனதாவில் சேருவார்கள் என்றும் தகவல்கள் கசிகின்றன.

பீகாரில் பாஜக -ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்ட பின் உள்ள நிலைமை படி, இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் 70 சதவீத மாநிலங்களில் பாரதீய ஜனதா மற்றும் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது என்ற நிலைப்பாடு உருவாகி விட்டது. எஞ்சியுள்ள 30 சதவீத மாநிலங்களையும் கைப்பற்ற பாரதீய ஜனதா மேலிட தலைவர்கள் விரும்புகிறார்கள். இதற்காகவே அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகின்றனர். இதில் ஒரு கட்டமாகவே, தமிழகத்தை கையில் எடுத்துள்ளனர், பாஜக மேலிட தலைவர்கள். இதற்கிடையில் புதுச்சேரியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியை எப்படி கலைக்கலாம் என்பதும், பாஜக-வின் குறிக்கோள்களில் ஒன்றாக உள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது…!!!

அ.தி.மு.க.வை கைப்பற்ற
தினகரன் – திவாகரன் அதிரடி வியூகம்

அ.தி.மு.க-வை கைப்பற்ற தினகரன் -திவாகரன் அதிரடி வியூகத்தை வகுத்து வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் இந்த வியூகம் என்னவென்று வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தற்போது கட்சி நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்து வருகிறார். இதற்கிடையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.அவருக்கு 47 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதை குறைந்த பட்சம் 50 ஆக உயர்த்த அவர் அதிரடி திட்டங்களை வகுத்து வருகிறார்.

இந்த நிலையில், தஞ்சையில் சசிகலாவின் தம்பி திவாகரனும், டி.டி.வி. தினகரனும் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளிப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு, சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தர வதனத்தின் மனைவி சந்தான லட்சுமியின் உடல், சென்னையில் இருந்து தஞ்சைக்கு கொண்டு வந்து, அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த போது நடந்துள்ளது. பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, “அதிமுக-வுக்கு இப்போது சோதனையான கட்டம். அதிலிருந்து எப்படியும் மீண்டெழந்து விடுவோம். எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுக-வில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறினர்.

தனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களை வைத்து, எடப்பாடி அரசை ஆட்டம் காண வைக்கலாம் என்பது தினகரனின் புதிய திட்டமாக இருக்கலாம் என்று அரசியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி மாவட்ட நிர்வாகிகள் சென்னை வர டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனைவரும் வர டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். அதன் பின் அவர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தினகரன் அறிவித்துள்ளார். இந்த சூழலில், பெங்களூர் சிறைக்கு சென்று, சசிகலாவை தினகரன் சந்தித்து பல்வேறு அரசியல் விஷயங்களில் ஆலோசனை பெற்று சென்னை திரும்பியுள்ளார்…!!!.

 
 
 
 

This post has been viewed 138 times