அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைய தினகரன் விதித்த 60 நாள் கெடு நிறைவு

 

அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைய
தினகரன் விதித்த 60 நாள் கெடு நிறைவு

அதிமுகவின் இரு அணிகளும் இணைய, துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் விதித்த 60 நாள் கெடு நிறைவடைந்து விட்டதால், அதிமுக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது.

din_3143774f

அதிமுகவின் இரு அணிகளும் இணைய டிடிவி தினகரன் 60 நாட்கள் கெடு விதித்திருந்தார். அந்த கெடு ஆக.4-ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் இதுவரை அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைப்புக்கு, முனைப்பு காட்ட துரும்பை கூட கிள்ளி போட வில்லை. இணைப்பு பேச்சு வார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறி வரும் நிலையில், இணைப்பு என்பது முடிந்து போன கதை, என வெட்டி பேசுகின்றனர், பன்னீர் செல்வம் தரப்பினர். இணைப்புக்கு சாத்திமில்லை என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்ட நிலையில், இனி தினகரன் என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு தான், அனைவரிடத்திலும் எட்டி பார்க்க தொடங்கியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அதிமுக கோஷ்டிகளும் இணைய டிடிவி தினகரன் கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில் ஆக.14–ம் தேதி முதல் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செல்ல உள்ளதாக தினகரன், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் 14–ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து சுற்றுப் பயணம் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில், “அரசனை நம்பி புருஷனை கைவிட்டுவிடாதீர்கள். அதிமுக இணைப்பு பற்றி விரைவில் நல்ல செய்தி வரும்” என்று அதிமுக அணிகளுக்கு அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், 64 பேர் கொண்ட அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை தினகரன் அறிவித்துள்ளார். அதில், கொள்கை பரப்பு துணை செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பிரிவு செயலாளராக தங்கதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர்களாக பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், ஜக்கையன், மேலூர் சாமி, சண்முகவேலு, கு.ப.கிருஷ்ணன், மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட 64 நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, செய்தியாளர்களை சந்தித்த தினகரன், 2019 மக்களவை தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்துடன் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதலோடு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினகரனின் அடுத்த கட்ட நகர்வு குறித்து அதிமுக-வின் அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டன் வரை உற்று நோக்கி வரும் நிலையில், இதற்கெல்லாம் பதில் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…!!!

தினகரன் அளித்த பதவிகளை
ஏற்க மறுக்கும் எம்.எல்.ஏ.க்கள்

டி.டி.வி.தினகரன் அறிவித்த கட்சிப் பதவிகளை ஏற்க 3 எம். எல்.ஏ.க்கள் மறுத்துள்ளனர். அ.தி.மு.க. அம்மா அணியில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளின் பட்டியலை, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த வெள்ளியன்று வெளியிட்டார்.

ஆனால்,அதன்படி மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பதவி தனக்கு வேண்டாம் என பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் மறுத்துள்ளார். அதேபோல், புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியை, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனியும், விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் பதவியை, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போசும் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், பெரியகுளம் எம்எல்ஏ கதிர்காமுவும், தனக்கு டிடிவி தினகரன் அளித்த கழக மருத்துவர் அணி இணைச் செயலாளர் பதவி வேண்டாம் என மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அனைவரிடமும் கலந்தாலோசித்தே கட்சிப் பதவி வழங்கப்பட்டதாக, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான பழனியப்பனும், செந்தில் பாலாஜியும் தெரிவித்தனர். இது, தினகரனுக்கு பின்னடைவாகவே கருதப்பட்ட நிலையில், தினகரன் வழங்கிய மருத்துவரணி இணை செயலாளர் பதவியை ஏற்க முடியாது என்று கூறிய பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமு மறுநாள், அந்த பதவியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள போவதாக அறிவித்துள்ளார்…!!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர்
யார் என்பது இன்னும்  முடிவாக வில்லை…!

“அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார்? என்பது இன்னும் முடிவாக வில்லை” என்ற அதிரடி தகவலை, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சுவாமிநாதன் கல்யாண சுந்தரம் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், “தற்போது அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் யார்? பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பதவி ஏற்றது ஏற்புடையதா? எந்த அதிகாரத்தின் கீழ் அவர்கள் பதவி ஏற்றனர்?“ என்பது உள்பட 5 கேள்விகளை கேட்டு கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கு தேர்தல் ஆணையம் பதில் அனுப்பியுள்ளது. அந்த பதிலில், “அதிமுக பொதுச் செயலாளர் யார் என்புது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்பட வில்லை. துணை பொதுச்செயலாளர் பதவிக்கும் இதே பதில்தான். அதிமுக-வில் தற்போது நிலவி வரும் உள்கட்சி பிரச்சினை காரணாக, மேற்கண்ட இரு பதவிகளில் இருப்பவர்கள் பற்றி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க முடிய வில்லை” என்று தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை பட்டினபாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பொதுச் செயலாளர் விவகாரம் தேர்தல் ஆணையத்தில் விசாரணையில் இருப்பதால், அதிமுக துணைபொதுச்செயலாளர் பதவி கேள்விக்குறியாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, “அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா இல்லை என்று கூற தேர்தல் ஆணையத்துக்கு உரிமையில்லை” என்று, அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில், அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை அக்கட்சியின் செய்தித்தொடர்பாள நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் கட்சி அலுவலகத்துக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், ஒருவரை நீக்கவும், சேர்க்கவும் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் படிக்க வேண்டிய பாடம் நிறைய உள்ளது என்றும் தெரிவித்தார். என்றாலும், இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையில், தினகரன், சசிகலாவின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை….!!!

“122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
எனக்கு இருக்கிறது”- தினகரன்…!

“122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எனக்கு உள்ளது. முதலமைச்சரின் செயல்பாடு குறித்து ஒருவாரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவேன்” என்று அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “துணை பொதுச்செயலாளராக இருக்கும் என்னை அ.தி.மு.க. தலைமையகத்திற்கு வரவிடாமல் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

கட்சி பணிக்காக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் செல்வேன். என்னை யாரும் தடுக்க முடியாது”என்று கூறினார். (ஆனால் அவர் சொன்னபடி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்ல வில்லை)

தனக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக கூறிய தினகரன், முதலமைச்சரின் செயல்பாடு குறித்து ஒருவாரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவேன் என்றும், அதுவரை காத்திருங்கள் எனவும் தெரிவித்தார். பெங்களூர் சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக கூறிய முன்னாள் சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா மீது வழக்கு தொடரப்போவதாகவும் அவர் கூறினார். மேலும் நல்ல சிந்தனையாளரான கமல் அரசியலுக்கு வர விரும்பினால் வரலாம் என்றும் ஊழல் தொடர்பாக அவர் தகுந்த ஆதாரத்துடன புகார் அளித்தால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தினகரன் தெரிவித்தார்…!!!.

 
 
 
 

This post has been viewed 148 times