அ.தி.மு.க-வின் இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்தன…

 

அ.தி.மு.க-வின் இரு அணிகளும்

அதிகாரப்பூர்வமாக இணைந்தன…

அ.தி.மு.க-வின் இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் 6 மாத பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

603274-palaniswami-panneerselvam-pti

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக கட்சி எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி, தினகரன் அணி என மூன்று அணிகளாக பிரிந்து இருந்தன. இந்த நிலையில், எடப்பாடி அணியும், பன்னீர் செல்வம் அணியும் இணைய வேண்டும் என்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன் படி, ஆக.21–ம் தேதி காலையில், பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அதன் பின் பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு அவசர தகவல் கொடுக்கப்பட்டது. அதாவது, “ பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கான நகலை எனக்கு அனுப்பினால் மட்டுமே இணைப்பு பேச்சு வார்த்தைக்கு வருவேன்” என்ற தகவலை, எடப்பாடிக்கு, பன்னீர் அனுப்பினார்.

இது பற்றி எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 7 அமைச்சர்கள், பன்னீர் செல்வம் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முதல்வர் பழனிச்சாமி, தனது அமைச்சர்கள் வேலுமணி, தங்க மணி, எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோரை பன்னீர் செல்வம் இல்லத்துக்கு, சமரச பேச்சு நடத்த அனுப்பி வைத்தார். அவர்கள், பன்னீர் செல்வத்தை சந்தித்து, எடப்பாடி கூறிய விவரங்களை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, பன்னீர் செல்வம் தனது காரில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும், நிர்வாகிகளும், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கு பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் கை குலுக்கிக் கொண்டனர். பின்னர் இரு அணிகளும் ஒன்றாக இணைந்து விட்டதாக அறிவித்தனர். “நாம் எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகள்.” என்று இருவரும் கூறினார்கள்.

இரு அணிகள் இணைந்த பிறகு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்தக் கட்சி மீண்டும் இணைய வேண்டும் என்ர உயர்ந்த எண்ணத்தில் ஈடுபட்டோம் என்றும், நாங்கள் உறுதியாக இருந்ததால் இணைப்பு சாத்தியமாகியுள்ளது என தெரிவித்தார். அனைத்துத் தொண்டர்களின் எண்ணத்தின் விருப்பத்தை ஏற்று இணைந்துள்ளோம் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் பிரிந்த பின்னர் இணைந்த வரலாறு கிடையாது என்ற அவர், அதிமுக மட்டும்தான் மக்களோடு மக்களாக இருந்து, கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், அவற்றைப் பேசி தீர்த்து, ஒற்றுமையை ஏற்படுத்தி கட்சியை வலுவாக்கியுள்ளோம் என தெரிவித்தார். “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை., நிரந்தர எதிரிகளும் இல்லை” என்ற பழமொழியை இருவரும் உறுதி படுத்தியுள்ளனர்.

“ என் மனதில் இருந்த பாரம் குறைந்து விட்டது” என்று பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்தார். இதன் படி அதிமுக அம்மா அணியும், அதிமுக புரட்சிதலைவி அம்மா அணியும் ஒன்றாக இணைந்து விட்டன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.
இந்த நிலையில், மும்பையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு அவசரமாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வந்தார்.

அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிதி மற்றும் வீட்டு வசதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மாஃபா பாண்டியராஜனுக்கு தொல்லியல் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளுநர் மாளிகையில் ஆக.21 மாலை நடைபெற்ற விழாவில், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பதவியேற்றார். துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திட்டம்,, சட்ட பேரவை, தேர்தல், பாஸ்போர்ட் ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்றும், தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார் எனவும் பதிவிட்டுள்ளார். பன்னீர் அணியில் இன்னும் சிலருக்கு மேலும் சில பதவிகள் வழங்கப்பட இருக்கிறது…!!!

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு
தினகரன் ஆதரவு வாபஸ்

டி.டி.வி. தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள், ஆளுனரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அப்போது, ”முதல்வர் பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம்., சட்டசபையை உடனே கூட்ட உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

அதிமுக ஓ.பி.எஸ் அணியும், இ.பி.எஸ் அணியும் ஓரணியாக சேர்ந்தது. அதே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். மேலும் சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து டி.டி.வி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று சுமார் 20 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை போவதாக தெரிவித்தனர்.

அதன் படி, ஆக.22–ம் தேதி காலையில் ஆளுனரை சந்திக்க, தினகரன் ஆதரவாளர்கள் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன், பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ பழனியப்பன்,தஞ்சை எம்.எல்.ஏ ரெங்கசாமி, சாத்தூர் எம்.எல்.ஏ சுப்பிரமணியன், மானாமதுரை எம்.எல்.ஏ கென்னடி மாரியப்பன், கம்பம் எம்.எல்.ஏ எஸ்.டி.கே.ஜக்கையன், ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ சுந்தர்ராஜ், வெற்றிவேல் எம்.எல்.ஏ பெரம்பூர், டாக்டர்.முத்தையா எம்.எல்.ஏ பரமக்குடி, பூந்தமல்லி எம்.எல்.ஏ எழுமலை, திருப்போரூர் எம்.எல்.ஏ கோதண்டபாணி, அரூர் எம்.எல்.ஏ முருகன், ஆம்பூர் எம்.எல்.ஏ பாலச்சுப்புரமணியன், பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு, நிலகோட்டை எம்.எல்.ஏ தங்கதுரை, குடியாத்தம் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபன், சோளிங்கர் எம்.எல்.ஏ பார்த்திபன் மற்றும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரி ஆகியோர் ஆளுனர் வித்யாசாகர் ராவை சந்தித்து, “தினகரன் அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு, எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடையாது.முதல்வருக்கு ஏற்கனவே அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம்.

முதல்வர் பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்து விட்டோம். சட்ட சபையை உடனே கூட்ட உத்தரவிட வேண்டும்” என்று மனு அளித்தனர். முன்னதாக, தனது இல்லத்தில், தனக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடனும் தினகரன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தங்க தமிழ்ச்செல்வன், மாரியப்பன், கென்னடி பழனியப்பன், ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அடுத்து என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது? எவ்வகையில் எடப்பாடி–பன்னீரை எதிர் கொள்வது? என்பது குறித்து பல்வேறு வியூகங்கள் குறித்து பரிசீலிக்கப் பட்டது.

இந்த நிலையில், “எடப்பாடி அணியும், பன்னீர் அணியும் இணைந்தது, இணைப்பு இல்லை., இது வணிக ரீதியான உடன்படிக்கை” என்று டி.டி.வி. தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், “சில நபர்களின் சுயலாபத்திற்காகவும், பதவி ஆசைக்காகவும், பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கே உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா தலைமையில் ஒன்றிணைந்தவர்களாலேயே ஏற்று கொள்ளப்பட்ட பொதுச்செயலாளர் சசிகலாவை, பதவியில் இருந்து நீக்குவோம் என்ற அறிவிப்பு,எந்த ஒரு அதிமுக தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வத்தையும், பழனிச்சாமியையும் முதலமைச்சராக்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்த நபர்களை, அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். நேற்று வரை. எடப்பாடி தலைமையில் ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன ஓ.பன்னீர்செல்வத்தோடு எப்படி இன்று அவரால் கைக்கோர்க்க முடிகிறது ?என கேள்வி எழுப்பினார். இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, எனது அரசியல் பயணம் தொடரும் எனவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், “எடப்பாடி தலைமையிலான அரசு 4 ஆண்டு ஆட்சி காலத்தை பூர்த்தி செய்வது சந்தேகம்“ என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்கள்டம் பேசிய அவர், அணிகள் இணைப்பு என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மிகப்பெரிய துரோகத்தை அரங்கேற்றம் செய்துள்ளதாக கூறினார். அணிகள் இணைப்பு நிகழ்ச்சிக்கு சென்றவர்களில் 6 எம்எல்ஏக்கள் தனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது துரோகத்துக்கு துணை போக மாட்டோம் என உறுதி கூறியதாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஊழல் நிறைந்த அரசாக மாறிவிட்டதாக கூறிய திவாகரன், ஆட்சி கவிழ்ந்தால் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் தற்போதய தமிழக அரசு 4 ஆண்டு ஆட்சி காலத்தை பூர்த்தி செய்வது சந்தேகம்தான் எனவும் தெரிவித்தார். தமிழக அரசு பல்வேறு விஷயங்களில் மக்களுக்கும் துரோகம் இழைத்து வருவதால், இதனை கண்டித்து எதிர்கட்சிகள் போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேகதாதுவில் அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் அறிவித்தால் அதில் தான் முதல் ஆளாக பங்கேற்பன் எனவும் திவாகரன் தெரிவித்தார் இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் அணிகள் இணைந்த பின், அந்தஅணியில் இருக்கும் முக்கியமானவர்களை , அதிமுக துணை பொதுச்செயலாளராக இருக்கும் டி.டி.வி. தினகரன்,நீக்கும் படலத்தை தொடங்கி விட்டார். இதன் படி அமைச்சர்கள் ஆர். பி. உதய குமார், எம். ஆர். விஜய பாஸ்கர் ஆகியோரிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியை தினகரன் பறித்து விட்டார்.மேலும் திருவள்ளூர், புதுக்கோட்டை, வேலூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட சில மாவட்ட செயலாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டு, தினகரனின் ஆதரவாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டதால், அடுத்த கட்ட நகர்வை, எப்படி நகர்த்துவது என்பது குறித்து சசிகலாவின் ஆலோசனையை கேட்க, தினகரன் பெங்களூர் செல்ல இருக்கிறார்….!!!.

 
 
 
 

This post has been viewed 159 times