மது ஆலைகள் நடத்தும் அரசியல்வாதிகள்….!!!

 

மது ஆலைகள் நடத்தும் அரசியல்வாதிகள்….!!!

தமிழ் நாட்டில், மதுக் கடைகளை அரசே முன்னின்று நடத்துவது ஏன்? மதுவிலக்கை ஏன் மீண்டும் நடைமுறைப் படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பினால் இதற்காக சொல்லப்படும் தலையாய காரணங்கள் (1) கள்ளச்சாராயமும் கள்ளச்சாராய சாவுகளும் அதிகரிக்கும் என்பதும் (2) குடித்துப் பழகியவர்கள் அண்டையில் உள்ள மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று குடிப்பதால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய வருமானம், அயல் மாநிலங்களுக்குச் சென்றுவிடுகிறது என்பதுமேயாகும்.

Tasmac

கள்ளச்சாரயத்தைக் கட்டுப்படுத்த அல்லது ஒழிக்க அதிகாரம் பெற்ற அரசு இயந்திரம், தனக்குத்தானே நாங்கள் ஒரு “வேஸ்ட்” என்று ஒப்புக் கொள்ளத்தான் இந்த விவாதம் உதவும். ஆட்சி அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் அரசு இப்படிச் சொல்வது கையாலாகதத் தனம் என்றுதான் வருத்தத்துடன் குறிப்பிடவேண்டி இருக்கிறது. கள்ளச்சாராயத்தை முழுதுமாக ஒழித்துவிட முடியாது என்று அரசே நினைத்து, மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது போல் கொலை, கொள்ளை குற்றங்களை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை என்பதால், இந்திய தண்டனை சட்டத்தை ரத்து செய்துவிட முடியுமா?

தமிழகத்துக்கு வரவேண்டிய வருமானம் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகிறது என்கிற வாதமும் பொருளற்றது. குடிக்கும் எல்லோரும் ஒரு டூரிஸ்ட் பஸ்ஸை எடுத்துக் கொண்டு அடிமடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு, அண்டை மாநிலங்களுக்கு தினசரி போய் குடிப்பதில்லை. அந்தந்த மாநிலங்களின் எல்லை ஓரங்களில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே போய் வர முடியும். மொத்த மக்கள்தொகையில், இப்படிப் போவோரின் எண்ணிக்கை, கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயத்தின் அளவே. மேலும் வருமானம் என்பதைப் பார்க்கும் அரசு, தனது மாநில மக்களின் மானம், உடல் நலம் போவதை ஏன் பொருட்படுத்த மறுக்கிறது? அரசு கூறுவது எல்லாம் கண்துடைப்புக் காரணங்கள்.

உண்மையான காரணம் என்னவாக இருக்கும்? என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் இரு அரசியல் கட்சிகளே முதன்மைக் கட்சிகள். இந்த இரு முதன்மைக் கட்சிகளில் மாறி மாறி, ஒன்று ஆளும்., மற்றது எதிர்க் கட்சியாக மக்கள் மன்றத்தில் இருக்கும். இந்த இரு கட்சிகளிலும் ஒரு குறிப்பிட்ட சமூக அல்லது சாதியைச் சேர்ந்த சக்தி படைத்தவர்கள்தான், மிகப் பெரிய அளவில் மதுபான ஆலைகளை நடத்தி வருகிறார்கள்.

மதுபான ஆலைகளாலும் மதுபானக் கடைகளாலும் அரசுக்கு வருவது ஒரு வகை வருமானமாகக் காட்டப்பட்டாலும், அரசுக் கணக்குக்கு வராமல், அரசாளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் நிதிகளுக்காக ஆலை அதிபர்களால் வழங்கப் படும் பெரும் தொகையான கட்சி நிதிகள், அந்த கட்சிகள் தேர்தல்களில் அதிகாரம் பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வர வாக்காளர்களுக்கு வழங்கவே பயன்படுகிறது என்பதும் சிந்திக்கப்பட வேண்டியதே.

அரசின் தரப்பில் வைக்கப்படும் மற்றொரு குறிப்பிடத்தக்க வாதம், அரசு ஏழைகளுக்கு வழங்கும் இலவசம் அல்லது விலை இல்லாப் பொருள்கள் மற்றும் இலவச சலுகைகளால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மதுக் கடைகளால் வரும் வருமானம், பொருளாதார ரீதியில் அரசின் கஜனாவுக்குத் தேவை என்று கூறப்படுகிறது. “கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் உலகம் கை கொட்டி சிரியாதோ?”

என்று பாரதியார் பாடிய வரிகளைத்தான் இந்த வாதம் நினைவூட்டுகிறது. குடிக்கு அடிமையாகிவிட்ட ஒரு ஏழைத் தொழிலாளி, ஒவ்வொருநாளும் ஒரு மது பாட்டில் வாங்கிக் குடித்தால், ஐந்து ஆண்டுகளில் அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகளில் செலவு செய்து இழக்கும் தொகை ஒரு இலட்சத்து இருபத்து ஆறு ரூபாய் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருட்களின் மொத்த மதிப்பு பதினாறு ஆயிரம் ரூபாய் மட்டுமே. இந்த அரசு, இலவசம் என்ற சின்ன மீனைப் போட்டு, ஏழைகளின் உழைப்பின் வருமானம் என்கிற பெரிய மீனை ஒரேயடியாக தட்டிப் பறிக்கின்றன.

குடிப்பவர்கள் தரப்பில் வைக்கப்படும் வாதம், குடிப்பது அவரவர் தனி மனித உரிமை. இதில் அரசு தலையிடக் கூடாது என்பதாகும். மக்களுக்கு நல்லதை கற்பித்து, தீயவற்றில் இருந்து விலகி இருக்கும்படி போதிப்பதும் அரசின் கடமை. குடிப்பது தனிமனித சுதந்திரம் என்றால் விபச்சாரம் செய்வது மட்டும் தனி மனித சுதந்திரம் இல்லை என்று ஆகிவிடுமா?

காசுவைத்து சூதாடும் உரிமையையும், இந்தப் பட்டியலில் சேர்த்துவிடலாமா? சுதந்திரம் கருதி அனுமதித்துவிடலாமா? பொது இடங்களில் புகைப் பிடிக்கக் கூடாது என்று அரசு போட்ட சட்டம் தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காதா? பூக்களைப் பறிக்காதீர்கள் என்று ஏன் பூங்காக்களில் எழுதிவைக்கவேண்டும்? இந்த இடத்தில் சிறு நீர் கழிப்பவர்கள் தண்டனைகுள்ளாவார்கள் என்று ஏன் அறிவிப்புகள் தொங்குகின்றன? மக்களின் வாழ்வை ஒழுங்கு படுத்துவது அரசின் கடமை. பொது அமைதிக்காக தனிமனித சுதந்திரத்தை கிள்ளிப் பார்ப்பது தவறில்லை.

அடுத்து அரசே நடத்தும் மதுக்கடைகளாக இருப்பதால், நல்ல சரக்கு கலப்படமில்லாமல் கிடைக்கிறது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. மது குடிப்பது, உடலுக்கு கேடு விளைப்பது என்பது மருத்துவம் நிருபித்த உண்மை. இதில், அரசு தரும் மது மட்டும் நன்மை பயக்கும் என்று எண்ணுவது, அறியாமையின் அரிச்சுவடி. அரசே தன் பொறுப்பில் நடத்துவதால் குடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அரசாங்கமே குடிக்கச் சொல்லி கடை நடத்துகிறது என்கிற ஒரு மன தைரியம் வருகிறது. இதனால் குடிப்பது சமுதாயத்தின் முன்னால் நல்ல மரியாதையைத் தராது என்று தெரிந்தும் புதிய புதிய குடிகாரர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

 
 
 
 

This post has been viewed 127 times