ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

 

ஜெயலலிதா மரணம் குறித்து  விசாரணை கமிஷன் -
முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று, முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

DCQ2bMTXcAALgkj

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, உடல் நலம் குன்றி சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர், கடந்த 2016–ம் ஆண்டு டிசம்பர்.5–ம் தேதி இறந்தார். அவரது மறைவுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்றார். அதன் பின் முதல்வர் பதவியையும் அவர் ஏற்பதற்கு வசதியாக, முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்தை பதவி விலக சசிகலா கூறினார். இதனால் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பன்னீர் செல்வம், நேராக ஜெயலலிதா சமாதிக்கு சென்று மவுன விரதம் இருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து சசிகலா இறக்கி விட்டு விட்டதாக குற்றம் சாட்டினார். இதன் பின் அவர் 10 எம். எ ல்.ஏ,க்களும், 8 எம்.பி.க்களையும் கொண்ட தனி அணியாக செயல்பட்டார்.

அந்த நிலையில் அவர் “ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும்., ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்., சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால்தான், இணைப்பு பற்றி பேச முடியும் என்றும் பன்னீர் செல்வம் ஆரம்பத்தில் இருந்தே திட்டவட்டமாக கூறி வந்தார்.

இந்த நிலையில், ஆக. 17–ம் தேதி தலைமை செயலகத்தில், அமைச்சர்களுடன் முதல்வர் பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர்அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும். அந்த நினைவு இல்லத்தை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். நீதிபதியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும். விசாரணை கமிஷனின் அறிக்கை கிடைத்த பின் அதன் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, போயஸ் இல்லத்தை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகச்சிறப்பான சிகிச்சை அளித்தும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாதது வருத்தம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து உலவும் வதந்திகளுக்கு விசாரணை கமிஷன் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தது, விசாரணை கமிஷனில் தெரியவரும் என்றும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அரசியல் கட்சிககள் மட்டுமல்ல., பொதுமக்களும் கூறிவந்த நிலையில், அனைவரின் சந்தேகத்திற்கும் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக அவரின் இறப்பு குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது என்று கூறினார். அதிமுகவின் குடுமிப்பிடி சண்டையால் தமிழக அரசியல் கேலிக்கூத்தாகி விட்டதால் இந்தியாவே தமிழகத்தை பார்த்து சிரிப்பதாகவும் வைகோ கூறியுள்ளார்…!!!

போயஸ் கார்டன்…  ஒரு பார்வை…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலில் கோலோச்சிய போயஸ் கார்டன் இல்லம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை பார்க்கலாம்…

27-Veda-Nilayam.jpg.image.975

1967 ஜூலை.15–ம் தேதி, சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1.32 லட்சம் ரூபாய்க்கு தன் பெயரில் வாங்கினார்.
24 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அந்த நிலத்தில், 21 ஆயிரத்து 662 சதுர அடிக்கு, கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

அந்த இடத்தின் மதிப்பு, சில ஆண்டுகளுக்கு முன், அரசாங்க வழிகாட்டு மதிப்பின்படி, 43.96 கோடி ரூபாய் என கூறிய நிலையில் தற்போது 100 கோடியை தாண்டும் என தெரிய வருகிறது.நடிகையாக இருந்ததில் இருந்து அரசியல் வாழ்க்கை வரை ஜெயலலிதா அங்குதான் வாழ்ந்து வந்துள்ளார். ஜெயலலிதா, சசிகலாவை தவிர வேறு யாரும் போயஸ் இல்லத்தில் தங்க அனுமதிக்கப்பட்டதில்லை.

சுமார் 49 ஆண்டுகள் போயஸ் கார்டனில் வசித்து வந்த ஜெயலலிதா, தனக்கு பின்னர் அது யாருக்கு சொந்தமாக வேண்டும் என உயில் வைத்ததாக எவ்வித தகவலும் இல்லை. ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அந்த இல்லத்துக்கு அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதி, சொத்து குவிப்பு வழக்கிலும் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. போயஸ் கார்டன் இல்லம் இளவரசியின் மகன் விவேக் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த வீட்டை நினைவிடமாக மாற்ற முதல்வர் பழனிச்சாமி அறிவித்த நிலையில், தற்போது வேதா இல்லம் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனை நினைவில்லமாக மாற்ற பல்வேறு சட்ட சிக்கல் நிலவி வந்தாலும், அதற்கு உரிய இழப்பீடு வழங்கபட்டு, வேதா இல்லம், ஜெயலலிதா நினைவிடமாக மாற்றபடும் என அரசு தரப்பில் உறுதியாக தெரிவிக்கபட்டுள்ளது…!!!

வேதா இல்லத்தை  நினைவு இல்லமாக மாற்ற
அரசு எதிர் நோக்கும் சிக்கல்கள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன் படி நினைவிடமாக மாற்ற முடியுமா? அதில் அரசு எதிர் நோக்கும் சிக்கல்கள் என்ன?என்பது குறித்து பார்ப்போம்…

1. ஜெயலலிதாவுக்கு குழந்தை இல்லாததால், அவர் வாழ்ந்த வேதா இல்லம், அவரது மறைவுக்கு பின் யாருக்கு சொந்தம்? என்பது குறித்து, ஜெயலலிதா ஏதும் உயில் எழுதி வைத்துள்ளாரா? அப்படி உயில் இருந்தால், இந்த விசாரணையின் போது அது வெளிப்பட வாய்ப்பு உள்ளது.

2. தற்போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, “போயஸ் இல்லம் எங்கள் குடும்ப சொத்து, அதனை யாருக்கும் விட்டு தர முடியாது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடுவேன்” என்று அறிவித்துள்ளார். எனவே அவர் நீதிமன்றத்தை நாடலாம் என்ற சூழ்நிலை உறுதியாக தெரிகிறது.

3. தினகரன் தரப்பு எம்.எல்.ஏ. வெற்றி வேல்,“ ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக ஆக்க கூடாது., ஆக்கினால் சட்ட சிக்கல் ஏற்படும்” என்ற கருத்தை தெரிவித்துள்ளார். எனவே அவர்கள் தரப்பு, இந்த விஷயத்தில் எப்படி செயல்படுவார்கள்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

4. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும், “போயஸ் இல்லம் எங்களுக்கே சொந்தம்” என்று கூறி முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் வீடு தனக்கும், தனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது என்றும், அதனை எங்கள் அனுமதியின்றி நினைவிடமாக மாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா எழுதிய உயிலின் படி, அந்த வீடு வாரிசுகளான எங்களுக்கே உரியது என்று தெரிவித்துள்ள அவர், தங்களின் ஒப்புதல் இல்லாமல் நினைவிடமாக மாற்ற நினைப்பது சட்டப்படி குற்றம் என்றும், போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா யாருக்கும் எழுதி வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி நிறைவடைவதற்கான
“கவுண்ட் டவுன்“ தொடங்கிவிட்டது

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி நிறைவடைவதற்கான “கவுண்ட் டவுன்” தொடங்கிவிட்டது என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழருவி மணியன், இரண்டு திராவிட கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்பது எனது சபதம் என தெரிவித்தார். ரஜினியை தவறவிட்டால், தமிழகம் வாழ்வதற்கும் எழுவதற்கும் வழியில்லை என்றும், ரஜினி அரசியலுக்கு வருவதை அவர் முடிவு செய்து விட்டார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தற்போதைய ஆட்சி நிறைவடைவதற்கான “கவுண்ட் டவுன்” தொடங்கி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்…!!!

 

 
 
 

1 Comment

  1. madhavaraman says:

    காலம் கடந்த அவ்வளவு சாமான்யத்தில் நிறைவேற்ற முடியாத விஷயத்தை முதல்வர் அறிவித்துள்ளார். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ஆர்.மாதவராமன்
    31 / 14 சி,தெற்கு மாடத் தெரு
    கிருஷ்ணகிரி-635001 .

 

This post has been viewed 140 times