துளிர் செய்திகள்
on August 24, 2017 1:12 pm / no comments
துளிர் செய்திகள்
3 எம்.எல்.ஏ.க்களின் நிலை என்ன?
தமிழகத்தில் இரு அணிகள் இணைந்து தினகரன் ஓரங்கட்டப்பட்டதால் தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் முதல் அமைச்சரை மாற்ற கோரியும், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்ற கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் அசாதரண சூழல் நிலவி வரும் வேளையில் ,ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த முறை எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்த தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தோப்பு வெங்கடசலமும் நடுநிலையில் உள்ளார்.
கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார், வைகோ…
வயது மூப்பு காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும் திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கருணாநிதியை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
கருணாநிதியை வைகோ சந்தித்த போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர். பூரண குமணமடைந்து மேலும் பல ஆண்டுகள் வாழ தனது வாழ்த்துகளை கருணாநிதியிடம் வைகோ தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “எனது மனதின் அடி ஆழத்தில் கருணாநிதி இருக்கிறார். என்னை முதன் முதலாக வைகோ என்று அழைத்தவர் கருணாநிதி தான். நான் முரசொலி பவள விழாவில் கலந்து கொள்வேன்”என்று கூறினார்.
தினகரன்-வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் மோதல்
அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வைத்திலிங்கம் எம்.பி. நீக்கப்படுவதாக தினகரன் அறிவித்தார்.
இதையடுத்து தன்னை நீக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்று வைத்திலிங்கம் பதிலளித்தார். இந்நிலையில் தஞ்சை ரயில் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தினகரன் உருவ பொம்மையை எரித்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த தினகரன் ஆதரவாளர்கள், வைத்திலிங்கம் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் வலுத்து மோதல் ஏற்பட்டது.இதற்கிடையே, வைத்திலிங்கத்தின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின்னர் போலீசார் சென்று அமைதி ஏற்படுத்தினார்கள்.
“முத்தலாக்” விவாக ரத்து முறைக்கு
உச்சநீதிமன்றம் 6 மாதம் தடை
முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இதில் முஸ்லிம் மத பெண் ஒருவர் தொடுத்துள்ள 5 ரிட் மனுக்களும் அடங்கும்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இது முக்கியமான பிரச்சனைகள் என்றும், இதுகுறித்த மனுக்களை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி, முத்தலாக் முறை அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டதா? என்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையில், அகில இந்திய முஸ்லிம்கள் தனிநபர் வாரியம், அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, “முத்தலாக் முறைக்கு 6 மாதங்கள் மட்டும் தடை விதிக்கப்படுகிறது. முத்தலாக் பற்றி நாடாளுமன்றம் முடிவெடுத்துக் கொள்ளலாம். முத்தலாக் முறையில் நீதிமன்றம் மேலும் தலைவிட போவதில்லை” என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
“புளு வேல்” விளையாட்டில் கல்லூரி மாணவர் தற்கொலை
“புளூவேல்” ஆன்லைன் விளையாட்டால் கேரள கல்லூரி மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஆஷிக் என்பவர், அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவர் திடீரென தனது படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த போலீசார் விசாரணையில் தற்போது உலகத்தையே உலுக்கிப்போட்டு கொண்டிருக்கும் “புளூவேல்” என்ற “ஆன்லைன்” விளையாட்டை விளையாடி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதன் காரணமாக அவர் தனது கையில் ரத்தத்தில் திமிங்கலம் படத்தை வரைந்து இருந்தார்.
இந்த விளையாட்டின் முடிவில், அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த “ஆன்லைன்” விளையாட்டால் இதுவரை கேரள மாநிலத்தில் 3 கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திரா காந்தி உணவகத்தை “அம்மா உணவகம்”
என்று கூறிய ராகுல் காந்தி
தமிழ்நாட்டில் இயங்கும் அம்மா உணவகத்தை போல பெங்களூருவில் அரசால் நடத்தப்படும் இந்திரா காந்தி உணவகத்தை ராகுல்காந்தி தொடங்கி வைத்துள்ளார்.
மிகக்குறைந்த விலைவில் தரமான உணவு, சுகாதாரமான முறையில் இந்த உணவகத்தில் வழங்கப்படுகிறது. பெங்களூரு நகரில் உணவு இல்லாமல் ஒருவர் கூட பசியுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த உணவகம் உருவாக்கப்படுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, இந்திரா காந்தி உணவகத்தை, “அம்மா உணவகம்” என்று இரண்டு முறை தவறாக உச்சரித்தார். பின்னர், சுதாரித்துக்கொண்ட ராகுல் காந்தி.
”இந்திரா காந்தி உணவகம்” என்று பேச்சைத் தொடர்ந்தார்.
This post has been viewed 97 times
சமீபத்தில்
-
“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”
/
-
தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது
/
-
ஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி
/
-
தமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”
/
-
நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்
/
நேயர் கருத்துக்கள்