மத்திய அரசுக்கு சூடு வைத்த ஆதார் கார்டு தீர்ப்பு

 

மத்திய அரசுக்கு சூடு வைத்த  ஆதார் கார்டு தீர்ப்பு

முந்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டதுதான், ஆதார் கார்டு திட்டம். அப்போதைய ஆட்சியின் போது, ஆயிரக்கணக்கான பேர்,வங்காள தேசத்தில் இருந்து, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கு, எல்லை தாண்டி வந்து குடியேறினர்.இதனை தடுப்பதற்காகவே, ஆதார் கார்டு திட்டத்தை அப்போதைய அரசு கொண்டு வந்தது.

aadhaar_559_122616050554

 

இந்த கார்டு வைத்திருப்போர், இந்திய குடிமகனாக கருதப்படுவர். இந்த அட்டையை பெற, இந்திய குடிமகனின் கைவிரல் ரேகைப்பதிவு, மற்றும் கண்ணின் விழிப்படலம் ஆகியவை போட்டோ மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அறிமுகப்படுத்திய இந்த திட்டத்துக்கு, அப்போது பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்தது.

பின்னர் அதே தேசிய ஜனநாயக கூட்டணி, 2014–ல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த போது, அதே ஆதார் கார்டு திட்டத்தை ஆதரித்து, அதனை பல்வேறு கட்டங்களுக்கு விரிவு படுத்தியது. ரேஷன் கார்டு, கியாஸ் இணைப்பு, மற்றும் மத்திய–மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெற, கட்டாயமாக ஆதார் எண்ணையும், அதன் நகலையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின் ஆதார் கார்டு திட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு மாநில உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் ஒன்று சேர்க்கப் பட்டு, உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு, முந்திய தலைமை நீதிபதி ஜே.எஸ். ஹெகர் தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

நீதித்துறையில், மிகவும் பலமான அமர்வாக கருதப்பட்ட இந்த அமர்வு, தனது தீர்ப்பை ஆக.24-ம் தேதி வழங்கியுள்ளது. இந்த அமர்வில் இடம் பெற்ற எல்லா நீதிபதிகளும் ஒரே விதமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதாவது, “ஆதார் கார்டு மூலம், தனி நபர் அந்தரங்கம் வெளியே வருகிறது. தனி நபர் அந்தரங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பது, அரசியல் சாசனத்தில் பிரிவு 21–ல் வழங்கப்பட்டுள்ள சுதந்திரம். இதற்கு பங்கம் ஏற்படக்கூடாது. இந்திய பிரஜையின் அடிப்படை உரிமை பாதிக்க படக்கூடாது” என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், 9 நீதிபதிகளின் தீர்ப்பை ஆதரித்து பேசி இருந்தாலும், இந்த தீர்ப்பு, மத்திய அரசுக்கு பெரிய அடியாக கருதப்படுகிறது. இதற்கிடையில், மத்திய சட்டத்துறை, இந்த தீர்ப்புக்கு அப்பீல் செய்யலாமா? என்று ஆலோசித்து வருகிறது. இந்த அப்பீலில் இதே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், அது, மத்திய அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி விடும். எனவே, மத்திய சட்டத்துறை, இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வதில், மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது…!!!.

 
 
 
 

This post has been viewed 159 times