தமிழக அரசியலில் தொடர்ந்து வரும் பரபரப்பு காட்சிகள்

 

தமிழக அரசியலில் தொடர்ந்து வரும்

பரபரப்பு காட்சிகள்

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அடுத்தடுத்து நடைபெறும் திருப்பங்களால், அரசியல் நிலைமை உச்சக்கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும்? என்ற வகையில் நகர்வுகள் இருப்பதால், பொதுமக்கள் தங்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் நிலையைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

AIADMK factions merged

திரைப்படத்தை மிஞ்சும் அளவில் அடுத்தடுத்த திருப்பங்களுடன் விறுவிறுவென சென்றுக் கொண்டிருக்கும் தமிழக அரசியல் நிலையை, இந்தியாவே பார்த்துக் கொண்டிருக்கிறது.

அடுத்து என்ன நடைபெறும்? என்ற கேள்விக்குறியுடன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அரசைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். முதலமைச்சரை மாற்றக்கோரும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை, பதவி நீக்கம் செய்வதா? அல்லது ஆட்சியை மட்டுமல்ல, கட்சியினையும் எதிர்ப்பின்றி ஆளுமை செய்வது எப்படி? என எடப்பாடியும், பன்னீரும் ஆராய்ந்து வருகின்றனர்.

மறுபக்கத்தில், கைவசம் இருக்கும் 22 விலிகி-க்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் பதவியை மட்டுமல்ல, கட்சியில் தனது செல்வாக்கையும் தக்க வைக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், தினகரன். அவருக்குப் பக்கபலமாக அவரது உறவினர் திவாகரனும் அவ்வப்போது, “அரசைக் கவிழ்ப்போம்,, 60 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்” என அதிரடி பேட்டிகளைக் கொடுத்து வருகிறார்.

ttv-story_647_081417022132_081417065252

இன்னொரு பக்கத்தில், மும்பையில் ஒரு கால், சென்னையில் ஒரு கால் என பறந்து பறந்து வந்துக் கொண்டிருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், “தற்போதைய தமிழக அரசியல் சூழலில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடிக்கு உத்தரவிடலாமா? அல்லது பொறுத்திருந்து பார்ப்போமா? என்ன செய்வது? என யோசித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே, மத்திய அரசின் ஆலோசனைகளையும் அவ்வப்போது கேட்டு அதன் படி நடந்து வருகிறார், ஆளுனர் வித்யாசாகர் ராவ். இந்த நிலையில் அவரது உத்தரவு என்னவாக இருக்கும் என தமிழக மக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

மற்றொரு பக்கத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. பிரதான எதிர்க்கட்சியான திமுக, “பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் உத்தரவிட வேண்டும்” என கோர ஆரம்பித்துவிட்டது. இல்லையென்றால், குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவோம் என மற்றொரு பக்கத்தில் ஆளுநருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. காங்கிரசும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை எப்படி தகுதி நீக்கம் செய்வது? பதில் நோட்டீஸ் வந்தால் என்ன நடவடிக்கை எடுக்கலாம்?என சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார், சட்டப்பேரவையின் சபாநாயகர் தனபால்.

இப்படி, அவர்களுடைய கட்சியின் காரியங்களிலும், ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதிலும் தான் அவரவர் தீவிரமாக இருப்பதால், நலத்திட்டங்கள் பெரிய அளவில் நடைபெறாமல், தமிழகத்தில் அரசு செயல்படுகிறதா? என்ற கேள்விக்குறியுடன் மக்கள் இருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ.க்களுடன்  எடப்பாடி பழனிசாமி  அவசர ஆலோசனை
4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேறின

தற்போதய அரசியல் சூழல் பற்றி ஆலோசிக்க, அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவது பற்றி, அமைச்சர்களுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின், அதிமுக கட்சி, சசிகலா தலைமையிலும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் மூன்று அணிகளாக பிரிந்தது. பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமி அணியும், பன்னீர் செல்வம் அணியும் இணைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இரு அணிகளும் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி விதித்த நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி அணி நிறைவேற்றியது.

இதனையடுத்து பிரிந்திருந்த இரண்டு அணிகளும் கடந்த வாரம் இணைந்தன. இதனால் அதிருப்தி அடைந்துள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநருக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று 19 எம்.எல்.ஏ.,க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடி–பன்னீர் அணியை சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும், அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் உள்ள டி.டி.வி. தினகரன் நீக்கி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அனைத்து அமைச்சர்களுடன் ஆக. 24–ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவை கூட்டும் தேதி பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆக.28-ம் தேதி அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை கூட்டி, அதில் பொதுக்குழு தேதியை முடிவு செய்வது பற்றி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:-

1.அ.தி.மு.க கட்சியின் இடைக்கால ஏற்பாடாக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவின் நியமனத்தை தேர்தல் கமிஷன் ஏற்காத நிலையில், அவரால் துணை பொது செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்ட தினகரனின் நியமனத்தை ஏற்க முடியாது.

2.“நமது எம்.ஜி.ஆர்.”, “ஜெயா டி.வி.” ஆகியவற்றை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுப்பது.

3.தினகரன் அறிவித்த நிர்வாகிகள் நீக்கம், நியமனங்கள் பற்றிய அறிவிப்புகள் செல்லாது. இது குறித்து தேர்தல் கமிஷனிடம் முறையிடுவது.

4.பொதுக்குழுவை செப். 12–ம் தேதி கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது.

இந்த நிலையில், பொதுக்குழுவில் எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை, அதிமுக தலைவர்களும், தொண்டர்களும் பரபரப்புடன் எதிர்பார்க்கிறார்கள்…!!!.

 
 
 
 

This post has been viewed 215 times