எதுவும் நிரந்தரம் இல்லை…!!!

 

எதுவும் நிரந்தரம்  இல்லை…!!!

இந்த வார “வாலிப முத்து” பகுதியில், ”எதுவும் நிரந்தரம் இல்லை” என்ற தலைப்பில் சில கருத்துக்களை பார்க்க இருக்கிறோம். சிலரது வாழ்க்கை ஒரே சீராக இருக்கிறது. அதாவது சிலர் பிறந்தது முதல் மறைவு வரை ஒரே சீரான வாழ்க்கை வாழ்கிறார்கள். சிலரது வாழ்க்கை, ஏற்றமும், இறக்கமும் உள்ளதாக இருக்கிறது. இதற்கு உதாரணாக ஹாலிவுட் ஹீரோ அர்னால்டினை எடுத்துக் கொள்ளலாம்.

repentance

ஹாலிவுட்டில், சினிமாத்துறை நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருந்த போது, தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில், ஒரு ஆடம்பர ஹோட்டலை அர்னால்ட் திறந்து வைத்தார்.

அந்த ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் “அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்” என்று அறிவித்தார்…

நாட்கள் நகர்ந்தன… பதவி போனது…

புகழ் போனது…

அந்த நிலையில், சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது….

“ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது. தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை” என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே, அதிர்ச்சியில் உறைந்து போனார், ஹாலிவுட் முன்னாள் ஹீரோ… கலிபோர்னியா முன்னாள் கவர்னர்… அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்…
மனமுடைந்த அர்னால்ட்,

தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார்
இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அப்படியே தூங்கி விட்டார். அந்த காட்சியை புகைப்படம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொன்னார் அவர்……

“நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்…….

எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம்…..

நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்…..

எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல…..

அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது…….

“உங்கள் புகழை,
உங்கள் பதவியை,
உங்கள் அதிகாரத்தை,
உங்கள் அறிவை ஒரு போதும் நம்பாதீர்கள்….

“இது எதுவுமே நிரந்தரம் கிடையாது…

இவை அர்னால்ட் தன் கடைசி காலத்தில் உதிர்த்த வார்த்தைகள்….

எனவே வாலிபா…! நீயும் உன் வாழ்க்கையில் இவற்றை கற்றுக்கொள். அர்னால்ட் போல், நீ புகழின் உச்சியில் இருக்கும் போது உனக்கு கொடுக்கப்படும் மரியாதையே தனி. அப்போது உன்னைச்சுற்றி ஆயிரம் பேர் இருப்பார்கள். புகழ்ந்து புகழ்ந்து உன் முன் பேசுவார்கள். ஆனால், பதவி, காசு உன்னை விட்டு கடந்து சென்று விட்டால், உன்னை மதித்தவர்கள் எல்லாம், மிதிப்பார்கள். உன்னை மதிக்க மாட்டார்கள்., உன்னை போற்ற மாட்டார்கள்., தூற்றுவார்கள்.

இதுதான் உலகம். ஆகவே, இளைஞனே! நீ உன் வாழ்க்கையில் மிகவும் எச்சரிக்கையாக இரு., உயரத்தில் இருக்கும் போது நீ ஆணவம் கொள்ளாதே., அது போல் தாழ்வில் இருக்கும் போது துவண்டு போகாதே., மீண்டும் எழுந்து நிற்க முயற்சி செய்., அது உன்னை சாதனையாளராக மாற்றும். இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை வாலிபனே…!!!.

 
 
 
 

This post has been viewed 283 times