குடி குடியை கெடுக்கும்

 

“குடி குடியை கெடுக்கும்”

மது விலக்கை அமல் படுத்த என்ன வழி?

தமிழ் நாட்டில் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் காந்தீய வாதி சசிபெருமாள், செல்போன் டவரில் ஏறி உயிர் தியாகம் செய்தார்.
தன் குடும்பத்தைப் பற்றிக் கூட கவலைப்படாமல், செல்போன் டவரில் ஏறி உயிரை இழந்துவிட்டார்.

1_1466981661

அவர் இறந்துவிட்டாலும், டாஸ்மாக் கடைகள் முன் ஆர்பாட்டம் நடந்தாலும், முழு பாதுகாப்புடன் தமிழக அரசே மது விற்பனை கடைகளை நடத்துகிறது. ஒரு தேசிய அளவிலான புள்ளி விபரம், நூற்றுக்கு தொண்ணூறு ஓட்டுனர்கள் குடிப்பழக்கம் உடையவர்கள் என்று கூறுகிறது.

அரசு நினைத்துத்தான் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்த ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது; இராஜ மானியம் ஒழிக்கப் பட்டது; வங்கிகள் தேசியமயமாகப்பட்டன. தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நிறுத்தப் பட்டது. கந்துவட்டியில் இருந்து மக்களை காப்பாற்ற சட்டம் இயற்றப்பட்டது. கட்டைப் பஞ்சாயத்துக்கள் காவல் நிலையத்தில் கூட நடைபெறக்கூடாது என்று சட்டம் அமலானது அது போல, மதுவுக்கு ஒரு முற்று புள்ளியை அரசு நினைத்தால் வைக்க முடியும்.

தற்போது தமிழகமே மதுவிலக்கு பற்றி பேசுகின்றது. எல்லா நாளேடுகள், டி.வி.கள், மீடியாக்கள் எல்லாவற்றிலும் மதுவிலக்கு பற்றிய செய்திகள், தலைவர்களின் அறிக்கைகள், மாணவர்களின் போராட்டங்கள் என்று ஒரே அல்லோகலப் படுகிறது.

மது ஓரு தீமையான அரக்கன். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இத்தனை நாள் அவனை நாட்டில் நடமாடவிட்டு, மது குடிக்கும் இனத்தைப் பெருக்கிவிட்டு, கல்லூரி பிள்ளைகள் வரை அவனுக்கு அடிமையாக்கி விட்டபின், திடீரென தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஞானோதயம் உருவாகி மதுவிலக்கு செய்ய வேண்டும் என்று போராடத் துவங்கியுள்ளதும் வரவேற்கத் தக்கதுதான்.

தமிழக அரசியல் கட்சிகளுக்கு இதில் அரசியல் ஆதாயம் இருக்கிறது. பெண்களின் வாக்குகளை அள்ளி அடுத்த ஆட்சியை பிடித்துவிடலாம்., முதல்வர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். இத்தனை நாள் இவர்களுக்கு இந்த மதுவின் தீமை கொடூரம் எல்லாம் தெரியவில்லை போலும்.

ஒரு பொருளை தடை செய்ய வேண்டுமெனில் உற்பத்தியை தடை செய்ய வேண்டும். இல்லை அதன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும். மதுவை பொருத்தவரை உற்பத்தியை தடை செய்வது என்பது பெரும் கஷ்டம். எனவே பயன் பாட்டை தடை செய்ய தீவிரமான, கடுமையான சட்டங்கள் இயற்றினால், மதுவிலக்கில் வெற்றி பெறலாம்.

பூரண மது விலக்கு கோருவோர், முதலில் தங்கள் போராட்டத்தை தங்கள் இல்லங்களில் தொடர வேண்டும். குடிக்கும் தந்தை, அண்ணன், நண்பன் இவர்களை குடிக்காதீர்கள் என்று அறிவுறுத்த வேண்டும். மறுப்பவர்களுடன் உறவை துண்டிக்க வேண்டும். இதற்கு முதலில் மாணவர்கள், குடிக்காமல் இருக்க வேண்டும். அந்த துணிச்சல் இருந்தால், ஒரு வீட்டில் ஆரம்பிக்கும் மாற்றம் அப்படியே தெரு, ஊர், நகரம் என விரிவடையும். சில மாதங்களில் ஓரு மாநிலமே திருந்த வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலை உருவாக வேண்டும் எனில் ஒவ்வொரு வீட்டிலும், மதுவுக்கு எதிரான புரட்சி வெடிக்க வேண்டும்.

குடிக்கும் கணவருடன் மனைவியும், அவர்களின் பிள்ளைகளும் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த வேண்டும். இது நல்ல பலன் தரும் என்றே தோன்றுகிறது. இப்படி செய்யாமல் எத்தனை சசி பெருமாள்களை நாம் “பலி” கொடுத்தாலும், மதுவை ஒழிக்க முடியாது என்றுதான் கூறத் தோன்றுகிறது.

அரசியல் கட்சிகளும், ஆட்சியும் குடிப்பவர்களுக்கு , தேர்தலில் போட்டியிட “சீட்” தர முடியாது என்று தைரியமாக அறிவிக்க வேண்டும். வாக்காளர்களும், குடிப்பவர்களுக்கு வாக்களிக்க மறுக்க வேண்டும். இப்படியெல்லாம் நடந்தால் மது ஒழியும் என்று கூறலாம். இதெல்லாம் தமிழகத்தில் நடக்குமா? கனவு காண்போம்! மெய்ப்படும் என்று நம்புவோம்…!

நாம் சுதந்திரம் பெற்ற காலத்தில், குடிப்பழக்கம் என்பது அறுவறுக்கத்தக்கதாய் இருந்தது. மது குடிப்போர், சமூகத்தில் மதிக்கப்பட வில்லை. அவர்களது குடும்பங்களில் பெண் கொள்ளவோ, மாப்பிள்ளை எடுக்கவோ கூட தயங்கினார்கள். ஆனால், இன்று அனைத்துமே மாறி விட்டது.

டாஸ்மாக் மது, தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் ஏராளம். ஒரு தலைமுறையையே சமூகப் பொறுப் பற்றவர்களாகவும், கிரிமினல்களாகவும் மெல்ல மெல்ல மாற்றி வருகிறது. மொத்த சமூகத்தையும் துருவாக அரித்துத் தின்னும் மதுவை அரசே தடுக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். டாஸ்மாக்கை மூடுவது என்பது மக்கள் கையில் மட்டுமே உள்ளது…!!!.

 
 
 
 

This post has been viewed 117 times