ஓமக்குட்டி

 

ஓமக்குட்டி

1.பனைமரக்காடு

( நெல்லை மாவட்டம் சுவாமி தோப்பு வாழ் லிங்கேஸ்வரி என்ற இளம் எழுத்தாளர் “லிங்கி” என்ற புனைப்பெயரில் எழுதிவரும் “ஓமக்குட்டி” என்ற தொடரை தொடர்ந்து படிக்கலாம்)

நெடு நெடுவென வளர்ந்த பனைமர உச்சியில், பனை மட்டையின் மேல் லாவகமாக அமர்ந்திருந்த தங்கபாண்டி தன் இடுப்பில் செருகியிருந்த துடிப்பு கம்பால், வெளியில் தள்ளியிருந்த நல்ல தரமான பாளையை தேர்வு செய்து பதமாக நசுக்கிவிட்டார்.

மண் கலயத்தை பதநீர் கொட்ட ஏதுவாகப் பாளையில் கட்டினார். அதற்குள் விழும் பதநீரை காக்கையோ, குருவியோ, ஈக்களோ குடித்துக் கெடுத்து விடாமல் இருக்க, பனை ஓலையைக் கிழித்து மடக்கி பாளையை சேதபடுத்தி விடாமல், கலய வாயை மூடிச் செருகினார். அப்படியே நிமிர்ந்து விழிகளால் சுற்றும் முற்றும் பார்த்தார்.
“ஆஹா… என்ன அற்புதமான காட்சி…!”

பூமிக்கு குடை பிடிக்கும் பனைமரங்கள், காற்றோடு தலையாட்டி ஏதோ ஒரு புது மொழியோடு தங்களுக்குள் பேசிக் கொள்வது போல ஒரு அழகான ரம்மியமான தோற்றம். சலிக்காமல் ரசித்து பார்த்தார்.

பனைமர மட்டையிலிருந்து இறங்கினார்.

ஒவ்வொரு மரமும் ஏறும் போதும், அவருள் இனம் புரியாத ஒரு இன்பம். பனைமரத்தைத் தன் தாயாகவே மதித்து வணங்குவார். அடுத்த மரத்தில் ஏறினார்.
ஏறும் போது அவருக்குள் திடுப்பென ஒரு மனக்குழப்பம். ஏதோ ஒரு அசம்பாவிதம் ஒன்று நடக்கப் போவது போல உள்ளுக்குள் உணர்ந்த அவர், பனை மரத்திலிருந்து ‘சரக் சரக்’ கென கீழ் இறங்கினார்.

அன்றைய கடைசிப் பனைமரம் ஏறி முடிந்தாயிற்று.
ஒரு பனைமரத்தடியில் சற்று நேரம் அமர்ந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்து வெற்றிலைக்குச் சுண்ணாம்புத் தடவி வாய்க்குள் திணித்தார்.
மெல்லிய இருள் படரத்துவங்கியது.

நடந்தார்… தூரத்தில் மண் மேட்டிலிருந்து குதிரைகளின் குளம்பொலி ஓசைக் கேட்டது. அவர் நினைத்தது போல ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவதற்கு அறிகுறி!
சட்டென நின்றார். நெஞ்சம் படபடக்க அவருக்குள் தன்னை அறியாமலே வியர்த்துக் கொட்டியது.

சங்கீதம் போல ஒலிக்கும் பனை ஓலைகளின் ஓசை கூட அவருக்கு நாரகாசமாக கேட்டது.

மேகத்தைக் கீறிப் பாய்ந்து வரும் மின்னல் போல, இருளை துளைத்துக் கொண்டு குதிரைகளின் கால் குளம்பொலி! கையில் தீவட்டி தாங்கிய கருத்த பருத்த உடல்களை சுமந்த முரட்டு உருவங்கள்.

குதிரைகளில் அதிவேகமாக அங்கே வந்துக் கொண்டிருந்தார்கள்.
தீவட்டிக் கொள்ளையர்கள் எதிர்பாராத விதமாக ஊருக்குள் புகுந்து அங்கே சென்று மக்களை அடித்து, அவர்களிடமிருக்கும் பொருள்களைப் பறித்தும், மறுப்பவர்களின் குடிசையை பிய்த்து எரிந்து நாசம் செய்துக் கிடைப்பதை அள்ளிக் கொண்டு செல்வதும், எதிர்ப்பவர்களை வெட்டி வீழ்த்துவதும் கொள்ளையர்களின் வழக்கம்.
“அய்யோ… கடவுளெ… இந்த சணடாளப் பாவி தீவட்டி கொள்ளையர்கள் இங்கு வந்து விட்டானுவளே… நம் ஊரில் எத்தனை பேரின் உயிரை பறிக்கப் போறானுவளோ…

நான் சீக்கிரம் ஊருக்குள்ள போயி பாவிங்க வரும் வெவரத்த சொல்லிடனும், முடிஞ்சளவு அவனுங்க கண்ணுல எந்த பொருளும் கெடக்காம மறச்சி வச்சிடனும்.”
வேக வேகமாக நடந்தாரா… இல்லை ஓடினாரா என கணிக்க முடியாத வேகம்.
மணல் மேட்டைக் கடக்கும் போது பாளை அருவாளை தொட்டு பார்த்தார். அவருக்குள் ஓர் உத்வேகம் கிளம்பியது. “என் பாளை அருவாளுக்கு வேல வந்துட்டது.

நம்மள பொட்டப் பயலுவயென நெனச்சிட்டானுவ போல… வரட்டும் இண்ணு ஒரு தலையாவது வெட்டிச் சாய்ச்சிடணும்.” அருவாளை அழுத்தமாக பிடித்தார்.
குதிரையின் வேகம் மிக அருகில் கேட்க ஆரம்பித்தது. நின்று விட்டார். அவர் கை அருவாளின் பிடியை இறுக்கியது.

தடிதடியான முரட்டு மனிதர்கள் கையில் தீவட்டி ஏந்தியபடி அவரை சூழ்ந்தார்கள். அவர்கள் கையில் ஈட்டி, கம்பு, கத்தி இருந்தது.

ஒரு கொள்ளையன் குதிரையிலிருந்து லாவகமாக ஒரே குதியாக குதித்தான்.
கணநேரம் தாமதிக்காமல் வேகமாக அரிவாளை வீசினார், தங்கபாண்டி. அவரின் எதிர்பாராத தாக்குதலில் எதிர்பட்ட கொள்ளையனின் தோளில், அரிவாள் இறங்கியது. அடுத்த வீச்சு ஓங்கினார்.

குதிரையிலிருந்தவனின் ஈட்டி அவர் கை புஜத்தில் இறங்கியது.
குபீர்ரென ரெத்தம் பீரிட்டது. தங்க பாண்டி நிலை தடுமாறி வீழ்ந்தார்.

 
 
 

2 Comments

  1. R.GOBI says:

    அருமை தங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்…..அடுத்த பாகத்தை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

  2. R.GOBI says:

    பதநீர் குடித்தது போல் ஒரு உணர்வு கதையை படித்ததில்……

 

This post has been viewed 281 times