“நீட்” தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் அனிதா தற்கொலை

 

“நீட்” தேர்வுக்கு  எதிராக வழக்கு தொடர்ந்த
அரியலூர் அனிதா தற்கொலை

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ “சீட்” கிடைக்காத வேதனையில் தூக்கில் தொங்கி உயிர் நீத்தார். அவரது மருத்துவ கனவு, காற்றில் கலந்து விட்டது.

Anithajpg

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த குழுமூரை சேர்ந்த அனிதா, பிளஸ்-2 தேர்வில் 1178 மார்க் எடுத்திருந்தார். அதன்படி அவருக்கு கட்ஆப் 196.5 இருந்தது. நீட் தேர்வில் ரு.700–க்கு 86 மார்க் மட்டுமே எடுத்திருந்தார். பிளஸ்-2 மார்க் அடிப்படையில், மருத்துவ தேர்வை நடத்தும் படி,. உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், “நீட்” தேர்வு முடிவுகளின் படி மருத்துவ தேர்வை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அனிதாவுக்கு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்க வில்லை.

அதன் பின், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அனிதா, மனம் நொந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில், அனிதா, தனது வீட்டில் செப். 1–ம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை, கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண விவசாய தொழிலாளி சண்முகத்தின் மகளான அனிதா, “நீட்” தேர்வு அமலுக்கு பலியாகி விட்டார். தாயார் அமுதா, சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் இறந்து விட்டார். தாயில்லா பிள்ளையாக வளர்ந்து வந்த அவள், தனது தாயிடமே போய் சேர்ந்து விட்டாள்.

Radical Students' Youth Front (RSYF)  staged state-wide protests

அனிதாவுடன் பிறந்த 4 சகோதரர்களும் கண்ணீரும்-கம்பலையுமாக காணப்பட்டனர். அனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக, போலீசார் எடுத்துச்செல்ல முயன்றனர். அப்போது அனிதாவின் குடும்பத்தினரும், ஊர் மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை மாவட்ட ஆட்சியர் சமாதானப்படுத்தினார். பின்னர் அரியலூர் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அனிதவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செப்.3–ம் தேதி அனிதாவின் உடல், அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது போன்ற முடிவுகளை மாணவர்கள் எடுக்க கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில், அரசு அறிவித்த ரூ.7 லட்சம் நிதி உதவியை ஏற்க மாட்டோம் என்றும், தமிழ் நாட்டுக்கு “நீட்” தேர்வில் இருந்து தமிழக அரசு விலக்கு பெறவேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியரிடம் அனிதாவின் தந்தையும், உறவினர்களும் உறுதிபட கூறினர்.

BJP511

“அனிதா தற்கொலைக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மாணவி அனிதாவின் மரணம் மிகவும் வேதனை அளிப்பதாக கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். மேலும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டமும் நடந்தது. தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அனிதா தற்கொலைக்கு பொறுப்பேற்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த கமலஹாசன், ”மருத்துவராக வலம் வந்திருக்க வேண்டிய அனிதாவின் மரணம் வேதனைக்குரியது. “நீட்” தேர்வுக்கு எதிராக வாதம் செய்ய வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசிக்கொண்டிருந்ததால் ஏற்பட்ட விளைவு இது. மாணவி அனிதாவின் மரணத்தை கேட்டு, கோபத்துடன் கண்ணீரும் சேர்ந்துதான் வருகிறது” என்று கூறினார். நடிகர் ரஜினி தனது டுவிட்டரில், “மாணவி அனிதாவின் முடிவு மிகவும் துரதிருஷ்டமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“மாணவி அனிதாவின் சோக மரணத்திற்கு மத்திய அரசே குற்றவாளி” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். அனிதாவின் உடலுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனிதாவின் இறப்பிற்கு நீதிகேட்டு போராட்டம் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளுடன் கலந்தாய்வு செய்து அறிவிக்கப்படும். அனிதாவின் இறப்பு, தற்கொலையல்ல. மத்திய–மாநில அரசுகளுக்கு எதிரான யுத்தம்” என்று அவர் தெர்வித்தார்.

இந்த நிலையில், “அனிதா மரணத்தை முன்வைத்து கொடூர அரசியல் செய்கிறார்கள்” என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், அரியலூர் மாணவி அனிதா உயிர் இழப்பைக்கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வேதனையையும் அடைந்தேன் என்றும் அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லி துக்கத்தை பகிர்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மாணவச் செல்வங்கள் இதுபோன்ற வருத்தமான முடிவுகளை எடுக்கவேண்டாம் என வேண்டுகிறேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். “நீட் தேர்விற்கு எதிராக போராட மக்கள் அனைவரும் களத்திற்கு வரவேண்டும் “என்று தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் தோழி பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்ற அனிதாவின் கனவு காற்றில் கரைந்து விட்ட நிலையில், சமூக வலை தளங்களில் டாக்டர் அனிதா என்கிற பெயரில் நெட்டிசன்கள் உருவாக்கிய ஹேஷ்டேக் ட்ரெண்டாகி உள்ளது. அத்துடன் தனது குடும்பம் மற்றும் எதிர்கால கனவு குறித்து அனிதா பேசிய வீடியோ பதிவும் சமூகவலை தளங்களில் அதிகமாக பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது…!!!

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு

தமிழகம் முழுவதும் போராட்டம்

அனிதாவின் மரணத்தையடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. சாலை மற்றும் ரெயில் மறியலும் நடந்தது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

பிளஸ்-2 தேர்வில் 1178 மார்க் எடுத்தும், எம்.பி. பி.எஸ். படிக்க இடம் கிடைக்காத்தால், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டாள். அனிதாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் நடந்தது. அத்தியாவசிய சேவைகளான பெட்ரோல் பங்குகள் மற்றும் மருந்துக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன.

“நீட்”டை எதிர்த்து போராடி உயிர்நீத்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். இதில் மத்திய–மாநில அரசுகளுக்கு எதிராக மாணவர்கள் கோஷங்களும் எழுப்பினர். போராட்டத்தை போலீசார் தடுக்க முயற்சி செய்ததால், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழக அமைச்சர்கள் பதவி விலக கோரியும், மெரினா இளைஞர் எழுச்சி அமைப்பினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகள் பதவி விலக கோரி, கோட்டையை நோக்கி பேரணியாக சென்ற அவர்கள், தலைமை செயலக பின் வாயில் அருகே ,சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தந்தை பெரியார் திராவிடர் கழக மாணவர் அமைப்பினர், கோவை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை பாளையங்கோட்டையில், நாம் தமிழர் மகளிர் அணியை சேர்ந்த சுதா, குயிலி ஆகியோர், தாங்கள் பெற்ற குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டது போல் பாடையில் படுக்க வைத்து மாலை போட்டு ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்புடன் காணபட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அனிதாவின் மரணம்
கற்பிக்கும் பாடம் என்ன?

17 வயது இளம்பெண் அனிதாவின் மரணம், நீட் தேர்வை மட்டுமல்ல,,, நம்மை சுற்றியுள்ள கல்விச்சூழல் குறித்து பல அதிர்வுகள் அனைவரிடமும் எழுப்பியுள்ளது. அவரது மருத்துவ கனவு, அவரது மரணத்துடன், காற்றோடு கலந்து பறந்து போய் விட்டது.

சிறு வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற இலக்குடன், படித்து, அதிக மதிப்பெண்கள் வாங்கியும், நீட் தேர்வு என்ற பெயரில் 17 வயது இளம் மாணவியின் மருத்துவக் கல்வி கனவுடன், அவரையும் சேர்த்துக் கொன்றதற்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள் என்ற கேள்வி தமிழ் சமூகத்தில் பெரிதாக எழுந்துள்ளது.

“பிளஸ்-2” தேர்வில், ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூற்று எழுபத்தி ஆறு மதிப்பெண்கள் பெற்று, 98 சதவீத மதிப்பெண்கள் பெற்றதை விட, மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு வேறு என்ன தகுதி வேண்டும்? இத்தனை சிறந்த மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவக் கல்வி எட்டாக்கனியாக போனதற்கு யார் பொறுப்பு.?
நீட் தேர்வை இந்த ஆண்டே தமிழகத்தில் கொண்டு வருவது குறித்து, தெளிவில்லாமல் மத்திய, மாநில அரசு குழப்பியதால், அனிதா போன்ற பலருடைய மருத்துவக் கனவு சிதைந்து போனதற்கு யார் பொறுப்பு?

அரசின் முடிவு மற்றும் கல்விச் சூழலில் உள்ள குளறுபடிகளால் மூட்டைத் தூக்கும் கூலித் தொழிலாளி சண்முகத்தின் 17 வயது பெண் அனிதா உயிரிழந்ததற்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்?

வழக்கமான அரசியலுடன், அனிதாவின் மரணம் முற்றுப்புள்ளி அடைந்துவிடுமா? அல்லது உறுதியான முடிவை யாராவது எடுப்பார்களா?

இறந்த பிறகு உதவி செய்வதை விட, அவர் உயிரோடு இருந்த போதே, யாராவது உதவி செய்து இருந்தால் ஒரு உயிரிழப்பை தடுத்திருக்கலாமே – இதற்கு யார் பொறுப்பு?
இனியாவது மத்திய – மாநில அரசுகள் விழித்துக் கொண்டு, மேலும் பல அனிதாக்களின் மரணங்கள உருவாக்காமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

அனிதாவின் மரணம், பிற மாணவர்களுக்கு கற்பிக்கும் பாடம், “சோர்ந்து போகாதீர்கள்., என்னைப்போல் முடிவு எடுத்து விடாதீர்கள். இந்த உலகில் வாழ்ந்து கொண்டே போராடுங்கள்., வெற்றி பெறுங்கள்” என்பதே. ஒரு தோல்விக்காக உயரையே விடுவது என்பது சரியான முடிவு அல்ல., எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. எனவே, மாணவர்களே…! எதையும் தைரியமாக ஏற்றுக்கொள்ளுங்கள்., தற்கொலைக்கு ஆளாகாதீர்கள் என்று மாணவ சமுதாயத்துக்கு சத்தியம் மின்னிதழ் வேண்டுகோள் விடுக்கிறது…!!!.

 
 
 
 

This post has been viewed 239 times