மன அமைதி….!!!

 

மன அமைதி….!!!

இந்த வார வாலிப முத்து பகுதியில், “ மன அமைதி” என்ற தலைப்பின் கீழ் சில கருத்துக்களை பார்க்க இருக்கிறோம். வாலிப பிள்ளைகளே ! உங்கள் வாழ்க்கையில் தீயவர்களை தவிர்த்து, நல்ல நண்பர்களை நட்பாக கொள்ளுங்கள்.

1

தீயவர்களுடன் நீங்கள் உறவு வைத்துக் கொண்டால், உங்கள் மனதிலும் தீய எண்ணங்கள்தான் உதயமாகும். ஆனால் நல்லவர்களுடன் உறவு வைத்துக் கொண்டால், உங்கள் உள்ளத்திலும் நல்ல சிந்தனைகள் பிறக்கும்.

தீயோரை காண்பதும் தீது….

தீயோர் சொல் கேட்பது தீது….

தீயோருடன் இணங்கி இருப்பதும் தீது….

நல்லோரை காண்பதும் நன்று….

நல்லோர் சொல் கேட்பதும் நன்று ….

நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று….

நல்லோருடன் இணங்கி இருப்பதும் நன்று….

அடுத்து, வாலிபனே ! மனம் அமைதியாக இருந்தால்தான், நீ எந்த ஒரு பணியிலும் முழுமையாக ஈடுபட முடியும். அது கல்வியானாலும் சரி., தொழிலானாலும் சரி., எதுவென்றாலும், மன அமைதி ஏற்பட்டால்தான், எந்த ஒரு காரியத்தையும் இளைஞனாகிய நீ, வெற்றியுடன் சாதிக்க முடியும். அந்த சாதனையை நீ செய்ய வேண்டும் என்றால், தீயோர் நட்பு கூடாது. நல்லோர் நட்பு மிகவும் அவசியம். மன அமைதியை கொடுப்பதும், கெடுப்பதும் இந்த நட்புதான்.

மேலும் வாலிபர்களே! காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது, காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும். வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள். எந்த ஒரு காரியத்தையும், முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்து, அவசர அவசரமாக செயலாற்றுவதை தவிருங்கள்.

குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால், சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப்படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு, இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

சில மாற்று யோசனைகளை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால், அல்லது வராவிட்டால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல மாற்று வழி என்பதையும் முன் கூட்டியே சிந்தித்து வழிமுறைகளை தேர்ந்து எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். தவறாய் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால், வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம். சண்டை, சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். சளசளவெனப் பேசுவதைத் தவிருங்கள். அது உங்கள் சக்தியையும், நேரத்தையும் வீணாக்கி விடும். வீணான விவாதத்தில் உங்கள் நேரத்தைப் பாழ்படுத்தாதீர்கள். வீண் சர்ச்சை பகையை வளர்க்கும். உங்கள் தேவைகளைப் பெரிதும் குறைத்துக் கொள்ளுங்கள்.

இதிலுள்ள நல்ல காரியங்களை, உங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கும் போது, மன அமைதி கிடைக்கும். கடைபிடிக்க தவறினால் மன அமைதி கெட்டு விடும்

மேலும் வாலிபனே ! ஒரு போதும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்குத் தடை. உங்கள் மனத்திற்குச் சரி என்று பட்டதை உறுதியாகப் பின் பற்றுங்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் ஒரு போதும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் நேர்மையுடனும், மனச் சாட்சியுடனும் செயலாற்றுவீர்களேயானால் எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

“நீங்களே உங்களுக்கு உற்ற நண்பன்., நீங்களே உங்களுக்கு உற்றபகை” என்பதை ஒரு போதும் மறவாதீர்கள். மற்றவர்களது கண்டனத்திற்கோ, விமர்சனத்திற்கோ ஒரு போதும் செவி சாய்க்க வேண்டாம். “உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூடமுடியுமா?” உலகத்தார் எப்போதும் குறைசொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். பெயருக்கும், புகழுக்கும் ஒரு போதும் ஆசைப்படாதீர்கள். உங்கள் கடமையைச் செவ்வனே செய்து வந்தால் ஆண்டவன் உரிய பலனைத் தருவான்.

ஏனெனில் பலனை எதிர்பார்த்துக் கடமையைச் செய்யும் போது, எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை என்றால் ஏமாற்றத்தால் நாம் மனம் தளர்ந்து போவோம்.

எப்போதும் மகிழ்ச்சியாகவும், மனநிறை வுடனும் இருங்கள். கவலைப்படுவதை விட்டொழியுங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு போதும் துயரம் உங்களை வாட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. பிறரைக் குறைசொல்லிக் கொண்டே இருப்பதைத் தவிருங்கள். உங்கள் குடும்பத்தாரோடு அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்ளுங்கள். மனதாரப் பிறரைப் பாராட்டுங்கள். தூற்றுவதால் பகையும், மனக்கசப்பும் நேரிடும். மாறாக போற்றுவதால் உறவும் வளருமன்றோ!
மீண்டும் சொல்கிறேன் வாலிபா! தீயோர் நட்பு தவிர்த்து, நல்லோர் நட்பு கொண்டு மனஅமைதியுடன் வாழ பழகிக்கொள், வாலிபனே!.

 
 
 
 

This post has been viewed 248 times