கவுரி லங்கேஷ் உயிர் வாழ்கிறார்…!!!

 

கவுரி லங்கேஷ் உயிர் வாழ்கிறார்…!!!

gauri-lankesh-06-1504707242

ஜனநாயகத்திற்கு 4 தூண்கள் என வர்ணிக்கப்படுகிறது. முதல் தூணாக அரசு நிர்வாக அதிகாரமும், இரண்டாவது தூணாக பாராளுமன்றமும், சட்டசபைகளும், மூன்றாவது தூணாக உச்சநீதிமன்றமும், நாலாவது தூணாக ஊடகமும் வர்ணிக்கப் படுகின்றன. 4–வது தூணாக உள்ள ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் ஜனநாயக நாடான இந்தியாவில் அடிக்கடி தாக்குதல் நடந்து வருவதை மறுக்க முடியாது.

கல்புர்கி, தபோல்கருக்கு பிறகு, இப்போது ஊடகலாளர் மீதான தாக்குதலுக்கு பலியானவர், கவுரி லங்கேஷ். பெங்களூர் நகரில் தனது சீர்திருத்த கருத்துகளை கொண்ட கவிதை, கட்டுரைகளை தனது பத்திரிகையான “லங்கேஷ்”-ல் எழுதி, சமூக நீதியை நிலை நாட்ட போராடியவர். திருமணமே செய்து கொள்ளாத அவர் தனது 55 -வது வயதில், எதிராளிகளின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டார். இது ஊடகத்துறையின் குரல்வளையை நெறிக்கும் செயலாகவே கருதப்படுகிறது.

ஜனநாயகத்தில் மிகப்பெரிய நாடான இந்தியாவில், பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரம் 138–வது இடத்தில்தான் இருக்கிறது. மேலும், 2012–ம் ஆண்டில் இருந்து 2017 வரை, இந்தியாவில் 22 பத்திரிகையாளர்கள் கொலையாகி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு எந்த அளவில் பாதுகாப்பு இருக்கிறது? என்பதுதான் கேள்வி.

பெண் பத்திரிகையாளர் கவுரியின் கொலையில் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்கள் சார்ந்திருக்கும் நிறம் என்ன? சிவப்பா? காவியா? எந்த நிறமாக இருந்தாலும், பத்திரிகையாளர்களின் உயிரை குறி வைப்பது தவிர்க்கப் பட வேண்டும். பொதுவாக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோரிடம், பணமும், ஆட்சியும், அதிகாரமும் இருப்பதால் தப்பி விடுகிறார்கள். உம்… என்றால் சிறைவாசம், ஏன்? என்றால்…வனவாசம் என்பது போல்தான், இந்தியாவில் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இது போன்ற நிலையை, 21–வது நூற்றாண்டின் “நவீன தீண்டாமை” என்று கூட சொல்லலாம்.

“காந்தியை போல, கர்புர்கியை போல என்னை கொன்றாலும், நான் எழுதுவதை நிறுத்தமாட்டேன்” என்று சபதமிட்டு வாழ்ந்து காட்டிய எழுத்தாளர் கவுரி இன்று நம்முடன் இல்லை., ஆனால் அவரது ஒவ்வொரு எழுத்தும் நம்மொடு பேசுகின்றன.அதன் மூலம், இன்றும் கவுரி லங்கேஷ், நம் உள்ளத்தில் உயிர் வாழ்கிறார்…!!!.

 
 
 
 

This post has been viewed 139 times