சசிகலா, தினகரன் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கம்

 

சசிகலா, தினகரன்

அ.தி.மு.க-வில் இருந்து நீக்கம்

எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வத்துக்கு
கூடுதல் அதிகாரம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்பட்டதால், அவரால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனும் பதவி இழக்கிறார்.

21_12504

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கூடுதல் அதிகாரம் அளித்து, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழலில், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் செப். 12-ல் நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு முதலில் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, “பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதிக்காதது, நமக்கு கிடைத்த முதல் வெற்றி. ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள் நாம்தான். ஆயிரமாயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுக கட்சியையும், ஆட்சியையும் அசைக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக தினகரன் எங்கே இருந்தார்?” என்று கேள்வி எழுப்பினார்.

General_Secretary_15005

பொதுக்குழுவில் 12 முக்கிய தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலாவை தற்காலிக பொதுச் செயலாளராக ஏற்கனவே பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட நியமனத்தை ரத்து செய்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக-வின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்றும், அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலாவலின் பதவி ரத்தாகியதால், அவரால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனின் நியமனமும் ரத்தாகியதாக கூட்டத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டது. சசிகலா, தினகரனின் அறிவிப்புகள் எதுவும் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேறியது. பொதுச்செயலாளரின் அதிகாரம் இனி ஒருங்கிணைப்பு குழுவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேறியது.

இதன் படி, இந்த அதிகாரம் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்துக்கும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்ளது. இதன் படி, ஒருவரை கட்சி நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கும் அதிகாரமும், சேர்க்கும் அதிகாரமும், நியமிக்கும் அதிகாரமும் இவர்கள் இருவருக்கும் உள்ளது. இதற்காக அதிமுக கட்சியின் சட்ட விதிகள் 19-ல் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வழிகாட்டும் குழுவின் ஒருங்கிணைப்பாளரக ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் செயல்படுவதற்கான தீர்மானம் நிறைவேறியது. இந்த குழுவில் இடம் பெறும் கே.பி. முனுசாமி, வைத்தி லிங்கம் உள்பட 11 பேர்களின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டது.

உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவிக்கும் அதிகாரம், ஒருங்கிணைப்பு குழுவுக்கு உண்டு. அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு, தலைமை கழகத்தால் வழங்கப்படும் அங்கீகார கடிதத்தில் கையெழுத்திடும் அதிகாரம், பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உண்டு என்றும் ஒரு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்குழு, பொதுக்குழுவின் உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் கலந்து கொண்டனர். தினகரனின் ஆதரவாளர்களான புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களான அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகிய நான்கு பேரும் பொதுக்குழுவை புறக்கணித்துள்ளனர். இந்த பொதுக்குழுவில் டிடிவி தினகரன் ஆதரவாளர் தளவாய் சுந்தரம் உள்ளிட்ட பல ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேடையில் “அம்மா–புரட்சி தலைவி அம்மா அணியின்” அதிமுக பொதுக்குழு என்று பேனர் வைக்கப்பட்டு இருந்தது. பொதுக்குழு மேடையில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். உள்பட 45 பேர் அமர்ந்திருந்தனர். பொதுக்குழு தொடங்கியதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இந்த பொதுக்குழுவில் 2 ஆயிரத்து140 பேரும், செயற்குழுவில் 296 பேரும் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பொதுக்குழு கூட்டத்தையொட்டி, ஈகா தியேட்டர் பகுதியில் தொடங்கி வானரகம் பகுதி வரை அதிமுக-வினர் மிக பெரிய பேனர்களை சாலையோரத்தில் நிறுவி இருந்தனர். இந்த நிலையில், திடீரென சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அந்த பேனர்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, “ 2011-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், போக்குவரத்துக்கு இடையூறாக அரசியல் கட்சிகள் சார்பில், பொது சாலையில் பேனர்கள் வைக்க கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால் அதிமுகவினர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி, ஏராளமான பேனர்களை ரோட்டின் இரு புறமும் வைத்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்…!!!.

அடுத்து தினகரன்
என்ன செய்யப்போகிறார்?
ஆட்சியை கவிழ்க்கப் போகிறாரா?

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், தினகரனை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கிய நிலையில், தினகரன் அடுத்து என்ன செய்யப் போகிறார்? இந்த ஆட்சியை கவிழ்க்கப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கி இருக்கிறது. என்றாலும், இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என நீதிபதிகள் ஏற்கனவே தங்கள் உத்தரவில் குறிப்பட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு பிறகுதான், இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உயிர் பெறும்.

இப்படிப்பட்ட சூழலில் தற்போது தினகரனுக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை, தினகரன் பக்கம் தொடர்ந்து நீடித்தால், எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது. குறைந்த பட்சம் 10 ஓட்டுகள் எடப்பாடி அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், மதுரையில் தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் கூட்டிய பொதுக்குழு செல்லத்தக்கது அல்ல. அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லாது. சசிகலாவையும், என்னையையும் நீக்கியது செல்லாது.

தேர்தலை சந்திக்க எடப்பாடியும், பன்னீர் செல்வமும் தயாரா? தேர்தல் வந்தால், எங்களுக்கும், திமுக-வுக்கும் தான் போட்டி. இரட்டை இலை சின்னம் முடங்க காரணமாக இருந்தவர், பன்னீர் செல்வம்.” என்று கூறினார்.

“எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக சசிகலா தேர்ந்து எடுத்த போது, இப்போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் 5 அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை நான் சமாதானப்படுத்தினேன் என்பதெல்லாம் முந்திய வரலாறு” என்றும் தினகரன் குறிப்பிட்டார்…!!!.

 
 
 
 

This post has been viewed 183 times