இளைஞர்களுக்கான “கிளினிக்”குகள்….!

 

இளைஞர்களுக்கான “கிளினிக்”குகள்….!

இந்த வார “வாலிப முத்து” பகுதியில், “இளைஞர்களுக்கான கிளினிக்குகள்” என்ற தலைப்பில் சில கருத்துக்களை பார்க்க இருக்கிறோம். கர்ப்பிணிகளுக்கு, தாய்மாருக்கு. குழந்தைகளுக்கு, முதியோருக்கு என தனித்தனியான மருத்துவ கிளினிக்குகள் உண்டு. இவை அவர்களுக்கு அரும் பணியாற்றி வருகின்றன. இவை நோய்களை தீர்ப்பது மட்டுமின்றி, வருமுன் காக்கவும் செய்கின்றன. அதேபோல இளமைப் பருவத்தினருக்கு என்று தனியாக விசேஷ கிளினிக்குகள் (Adolcent Clinic)  அமைப்பது நல்லது என சமீப காலமாக கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றன.

Porkka_terveys

இன்றைய இளைஞர்கள், தங்கள் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை தினமும் சந்திக்கிறார்கள். கல்வி, வேலை தேடும் படலம், வேலை தேடிய பின் வேலையில் ஏற்படும் பிரச்சினைகள், இதனையெல்லாம் விட, பாலுணர்வில் ஏற்படும் பிரச்சினைகள், அத்துமீறல்கள் போன்றவற்றில் இருந்தும் இவர்கள் மீண்டு வர வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

ஆண் பிள்ளைகளுக்கு, பள்ளிப்பருவத்திலும் பதின்ம வயதுகளிலும் பல்வேறுவிதமான உளநலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதை மருத்துவர்களாலும், அவர்களோடு அதிகம் பழகும் ஆசிரியர்களாலும் கண்டு பிடிக்க முடிகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம்.

1.குடும்ப அன்னியோன்யம் குறைந்து வருவதாகும். பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகிறார்கள். கூட்டுக் குடும்பமுறை சிதைவுறுவதால் உதவிக்கு தாத்தா, பாட்டி இல்லாமல் போவதால் குழந்தைகளின் மீதான அக்கறையும், அரவணைப்பும் நேச உணர்வும் குறைந்து போகிறது.

2.கல்வி ரீதியாக, பிள்ளைகளிடமிருந்து உயர் மதிப்பெண்கள் பெற்றோரால் எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாத பிள்ளைகள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். ஆசிரியர், பெற்றோருக்கு கீழ்ப்படியாமை, முரட்டுத்தன்மை, தவறான பழக்கங்கள் போன்ற நடத்தைப் பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

அதனால் மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கும் ஆளாகிறார்கள். தவறான பாலியல் பழக்கங்களுக்கும் ஆளாகி விடுகிறார்கள். போதைப் பொருள் பாவனையும் இதன் நீட்சியே ஆகும். எனவே பாடசாலை, பல்கலைக்கழகம், மற்றும் சமூக நிலைகளில் இளம் வயதினர் உளவியல் பாதிப்புக்கு ஆளாகுமிடத்து, அதனை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து நெறிப்படுத்துவது அரசின் கடமையாகும்.

இதற்கான அறிவையும் ஆற்றலையும் பெற்றோர் ஆசிரியர்களிடத்து வளர்ப்பது அவசியமாகிறது. இது சம்பந்தமாக தொழில் ரீதியான “இளைஞர் கிளினிக்”களை அமைத்து, மருத்துவ பணியாளர்களை பயிற்றுவித்து, சேவையில் ஈடுபடுத்துவது அவசியம். மது, போதைப் பொருட்கள், சிகரெட் போன்றவை எங்கும் தடையின்றி விற்பனையாவது ஆபத்தானதாகும். முக்கியமாக இளம் வயதினருக்கு அவ்வாறு கிட்டி விடக் கூடாது.

சட்டங்களால் மட்டும் இவற்றை அமுல் படுத்த முடியாது. சமூகத்தில் இவற்றிக்கு எதிரான உணர்வு வளர்க்கப்பட வேண்டியதும் அவசியமாகும். ரேடியோ, டி.வி., இணையம் போன்றவை ஊடாக வழிகாட்டலாம். இதற்கு மகிழ்ச்சியான குடும்பச் சூழலும், முதியவர்களின் வழிகாட்டலும் துணைநிற்கும். புகைத்துக் கொண்டிருக்கும் அல்லது போதையில் மிதக்கும் அப்பனால் குழந்தைக்கு நல்லவற்றைப் போதிக்க முடியாது. சட்டங்களாலும், கட்டாயப்படுத்துதலாலும் செய்ய முடியாதவற்றை புரிந்துணர்வுள்ள அணுகுமுறை மூலம் செய்ய முடியும்.

சும்மா இருப்பது வன்முறைக்கும் இட்டுச் செல்கிறது. அதேநேரம் சரியான வாழ்க்கை நெறிமுறைகளை புரிந்து கொள்ளாததும், பரந்த சமூக அக்கறை இல்லாமையும்தான், “நான்” என்ற அகந்தைக்கு காரணங்களாகின்றன.

“நான்”, “எனது சுகம்”, “எனது மகிழ்ச்சி”, “எனது குடும்பம்” என்பதற்கு அப்பாலும் சிந்திப்பது, இளம் வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும்.மாறாக “எமது சமூகம்”., “எமது நாடு” எனச் சிந்தனைகள் விரிந்தால், மற்றவர்களது தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டால் வன்முறை உணர்வு ஏற்படாது.

பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது? என்பது பற்றிய அறிவு ஒவ்வொரு வாலிபர்களுக்கும் தேவை. பிரச்சனை என்பது வீட்டுப் பிரச்சனையாக இருக்கலாம், வெளியே காதல் பிரச்சனையாக இருக்கலாம். அல்லது தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் சிக்கல்களாக இருக்கலாம். அல்லது கோவில், வாசகசாலை, சினிமா தியேட்டர் போன்ற பொது இடங்களில் ஏற்படும் சங்கடங்களாக இருக்கலாம். எதையும் திறந்த மனத்தோடும் விட்டுக் கொடுப்புகளுடனும் செய்து சுமுகமாக தீர்வு காண்பதற்கான பயிற்சியை கல்வி மட்டும் கொடுத்து விடாது.

இதற்கென சிறப்பு கிளினிக்-கள் அமைக்கப்பட்டால் வரவேற்கத் தக்கதே. எனவே இளைஞர்களே…! எதிர்காலத்தை ஒளிமயமாகவும், பொன் விளைவதாகவும், மகிழ்ச்சி நிறைவதாகவும் ஆக்க முயலுங்கள்., அதில் வெற்றியும் பெறுங்கள். அதற்கு ஏற்றவகையில் உங்கள் உடலையும், உள்ளத்தையும் நலமாகப் பேணிக் கொள்ளுங்கள்…!!!.

 
 
 
 

This post has been viewed 117 times