மது குடித்து ரகளை செய்த மகனை கொன்ற தாய்

 

மது குடித்து ரகளை செய்த

மகனை கொன்ற தாய்

தமிழ் நாட்டில், மதுக் கடைகளை அரசே முன்னின்று நடத்துவது ஏன்? மதுவிலக்கை ஏன் மீண்டும் நடைமுறைப் படுத்தக்கூடாது? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், குடிபோதையில் குடும்பத்தையே சித்ரவதை செய்ததை பொறுக்க முடியாமல் பெற்ற மகனை கொன்று சிறைக்கு சென்றுள்ளார், அவனைப்பெற்ற தாய்.

menu-drinks-background3

சென்னை திருவேற்காடு அன்பு நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகன் செந்தில், மருமகள் காமாட்சி. இந்த தம்பதிக்கு 3 மகன்கள். மூவரும் அருகே உள்ள கோலடி அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். மது போதைக்கு அடிமையான செந்தில் கடந்த 16 ஆண்டுகளாக மொத்தக் குடும்பத்தினரையும் சித்ரவதை செய்து வந்தார். மனைவிக்கு அரிவாள் வெட்டு, தாய்க்கு உருட்டுக் கட்டை தாக்குதல், குழந்தைகளைத் தூக்கிப் போட்டு பந்தாடுவது என தினம் தினம் செந்திலால் அந்தக் குடும்பம் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

மகனால் தனது மருமகளும், குழந்தைகளும் படும் சித்ரவதைகளைச் சகிக்க முடியாத சரஸ்வதி, போதையில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகனின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார். பின்னர் தாய்ப்பாசத்தால் துடித்த அவள், இறந்துபோன மகனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கதறி அழுதவர், பின்னர் திருவேற்காடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

போதையின் பிடியில் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் மொத்த நிலையையும் தனது ஒற்றைச் செயலால் உணர வைத்திருக்கிறார். இப்போது அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யுள்ளது.

இங்கே குற்றவாளி யார்? கொலை செய்த தாயா? மதுபோதையில் குடும்பத்தையே சித்ரவதை செய்த மகனா? இல்லை, வீதிதோறும் மதுக்கடைகளை திறந்துவைத்திருக்கும் தமிழக அரசா?
பல ஆண்டுகளாக சித்ரவதை செய்த கணவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். குடும்பத்துக்கு ஆதரவாக இருந்த மாமியார் சிறைக்குச் சென்றுவிட்டார். குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், செய்வதறியாது பரிதவிக்கும் மனைவி காமாட்சி, இன்று கண்ணீருடன் நிற்கிறார்.

இந்த நிலையில் தான் தமிழ் நாட்டில் கிராமங்களில் பல குடும்பங்கள் மதுவால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவேதான், தமிழ் நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும்., மதுக்கடைகளை மூட வேண்டும்., பூரண மது விலக்கை அமல் படுத்த வேண்டும் என்றெல்லாம் கோஷங்கள் எழுகின்றன. ஆனால், இப்போதெல்லாம் நமது சினிமா ஹீரோக்கள் வசனம் பேசும் காட்சிகளைவிட கையில் மது பாட்டிலோடு புலம்பும் காட்சிகள்தான் அதிகம் இடம் பெறுகின்றன.

அக்காட்சிகளுடன் கூட வரும் ‘மது அருந்துதல் உடல் நலத்துக்குக் கேடு’ என்ற எச்சரிக்கை வாசகமும் நமக்குப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. ஆனால், உண்மை நிலைமை மிகவும் மோசம். இந்தியாவில் சுமார் 75% ஆண்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் மது அருந்துகின்றனர். இதில் 20 முதல் 30% பேர் அதற்கு முழு அடிமையாகிறார்கள்.

குடிப்பழக்கம் பெரும்பாலும் 20 முதல் 25 வயதில்தான் ஆரம்பிக்கிறது. 50 முதல் 60% சாலை விபத்துகள் குடிபோதையினால்தான் ஏற்படுகின்றன.

மது குடிப்பது முதலில் சாதாரணப் பழக்கமாகத் தான் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் ஆல்கஹால் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் முழு பாட்டில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளி யாகவே மாறி விடுகிறார்கள்.

பொதுவாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் குடிப்பழக்கத்தைப் பற்றி விசாரித்தால் “நீங்க நினைக்கிற மாதிரி நான் மொடாக்குடிகாரன் கிடையாது, டாக்டர்” என்ற பதில்தான் முதலில் வரும். ஆனால், உண்மை வித்தியாசமானது. குடிப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையா?இல்லையா? என்பதை நிர்ணயிக்கச் சில வரைமுறைகள் இருக்கின்றன. இது தனிப்பட்ட நபரின் எண்ணத்தைப் பொறுத்தது அல்ல. கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் சில காரணங்கள் இருந்தாலே, அந்த நபர் போதைக்கு அடிமை என்றே அர்த்தம்.

தினசரி குடிப்பது, மற்ற விஷயங்களைவிட குடிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது. ஆரம்பத்தில் குடித்ததைவிட அதிகம் குடித்தால்தான் போதை ஏற்படுகிறது என்ற நிலை, பல முறை முயன்றும் குடியை முழுவதுமாக நிறுத்த முடியாமல் தோல்வியடைதல், உடல்நலத்துக்குக் கேடு என்று தெரிந்தும் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்ட பின்னரும் குடியை நிறுத்த முடியாமை, குடித்தால்தான் தூக்கம் வரும் அல்லது கைநடுக்கம் குறையும் என்ற நிலை போன்றவைகளை கொண்டவர்களை, மதுவுக்கு அடிமையானவர்கள் என்று கூறலாம்.

 
 
 
 

This post has been viewed 98 times