தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம்

 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர்களை, தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் அதிரடி நடவடிக்கை எடுத்து இருக்கிறார். இதனை எதிர்த்து தினகரன் அணியின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

201704191628238406_TTV-Dinkaran-calls-MLAs-meeting_SECVPF

தமிழக சட்டசபையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதனையடுத்து அரசு கொறடா ராஜேந்திரன், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். ஆனால் இதனை பொருட்படுத்தாத தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஜக்கையன், முதல்வருக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்து விட்டார்.

இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ,க்கள் 18 பேர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது? என்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அரசின் தலைமை வழக்கறிஞர் உள்ளிட்டவர்களுடன், சபாநாயகர் தனபால் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து, செப்.18-ம் தேதி, தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), ஆர்.முருகன் (அரூர்), சோ. மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), கே.கதிர்காமு (பெரிய குளம்), சி.ஜெயந்தி பத்மநாபன்( குடியாத்தம்), பி..பழனியப்பன் (பாப்பி ரெட்டி பட்டி), வி.செந்தில் பாலாஜி (அரவாக்குறிச்சி), எஸ். முத்தையா (பரமக்குடி), பி.வெற்றி வேல் (பெரம்பூர்), என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), மு.கோதண்டபாணி (திருப்போரூர்), டி.ஏ.ஏழுமலை (பூந்தமல்லி), எம். ரெங்கசாமி (தஞ்சாவூர்), ஆர்.தங்க துரை (நிலக்கோட்டை), ஆர்.பால சுப்பிர மணி (ஆம்பூர்), எஸ்.ஜி. சுப்பிர மணியம் (சாத்தூர்), ஆர். சுந்தர் ராஜ் (ஓட்டபிடாரம்), கே. உமா மகேஸ்வரி (விளாத்திக்குளம்) ஆகிய 18 பேர்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

இப்போதுள்ள நிலையில், தமிழக சட்டசபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. இதில் நியமன உறுப்பினர் மற்றும் மறைந்த ஜெயலலிதாவின் தொகுதி காலி இடம் 1 ஆகிய இரண்டு இடங்கள் போக மீது உள்ளது: 232. இப்போது தினகரனின் ஆதரவாளர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 232-ல் இருந்து 18-ஐ கழித்தால் மீதி இருக்கும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்: 215. இதன் படி பார்த்தால் மெஜாரிட்டிக்கு தேவை 108 எம்.எல்.ஏ.க்கள்தான்.

இப்படிப்பட்ட நிலையில், திமுக கூட்டணி உறுப்பினர்கள் 98 பேர் உள்ளனர்.
அதிமுக கூட்டணியில், 115 பேர் உள்ளனர். இவர்களில் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ்,, தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய மூன்று எம். எல்.ஏ.க்களும் உள்ளனர். மெஜாரிட்டியை நிரூபிக்கும் வாக்கெடுப்பின் போது சபாநாயகர் , தேவைப்பட்டால் வாக்களிக்கலாம் என்ற நிலைப்பாடும் உள்ளது. எப்படியும், மொஜாரிட்டியை நிரூபிக்கும் வாய்ப்பு, எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரகாசமாக இருக்கிறது என்றே, அரசியலாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடருவோம் என்று, டி.டி.வி.
தினகரன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யா சாகர் ராவ், மும்பையில் இருந்து டெல்லி சென்று, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து, தமிழக அரசியல் நிலை பற்றி ஆலோசனை நடத்தினார். 20-ம் தேதி ஆளுனர் சென்னை வருகிறார். அவர் 22-ம் தேதி அவர் “எடப்பாடி அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்” என்று உத்தரவிடுவார் என்று தெரிய வருகிறது . இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு எம். எல்.ஏ.க்கள் 18 பேர் சார்பிலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலாகி இருக்கிறது. இந்த வழக்கு அவசர வழக்காக செப். 20-ம் தேதி விசாரிக்கப்பட்டது. திமுக தாக்கல் செய்துள்ள மனுவோடு சேர்த்து இந்த மனுவும் விசாரிக்கப் பட்டது.

இந்த நிலையில், 18 எம்.எல்.ஏ.க்களும் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்? என்பது குறித்து சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார். “புதுச்சேரியில் தங்கிவிட்டு, கட்சி, நண்பர்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர்கள் கூறியுள்ளனர். அரசுக்கான ஆதரவை எம்.எல்.ஏக்கள் திரும்ப பெற்றதில் உள்நோக்கம் இருக்கிறது. முதலமைச்சர் ஊழல் புரிந்ததாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் 18 பேரும் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் அனைவரும், சசிகலா, தினகரன் ஆதரவாக இருப்பதாக காட்டவே ஊடகங்களில் 18 பேரும் தவறான தகவல் தெரிவித்துள்ளனர். கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் 18 பேரும் கட்சியிலிருந்து விலகியதாக கருத நேரிடுகிறது, கட்சியில் இருந்து விலகியதாக கருதப்படுவதால் கட்சித் தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்” என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது..!!!.

28 ஆண்டுகளுக்குப் பிறகு  தமிழக சட்டசபையில்
மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு?

தமிழக சட்டசபையில் 28 ஆண்டுகளுக்கு முன் ஆளும் ஒரு அரசு, தனது மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடப்பட்டு, பலப்பரீட்சை நடந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். கடந்த 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ல் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அ.தி.மு.க-வில் பெரும் சர்ச்சை வெடித்தது. ஆர்.எம். வீரப்பனின் ஆதரவுடன் முதல்வரானார், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன்.

132 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர். மீதமுள்ளவர்கள் ஜானகி அணியை ஆதரித்தனர். அப்போதைய சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியனும் ஜானகி அணியை ஆதரித்தார். மேலும், அவர் ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கினார். இந்தச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு 1986-ல் திமுகவின் 10 உறுப்பினர்கள் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியலமைப்பு சட்ட நகலை எரித்தற்காக அவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

எனவே சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 ல் இருந்து 191 ஆகக் குறைந்ததிருந்தது. ஜானகி தலைமையிலான அணியின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 1988-ம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் பங்குபெறவில்லை.

ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களும் வெளியேற்றப்பட்டதால், 111 எம்எல்ஏக்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஜானகி அணி வென்றதாக அறிவித்தார், சட்டப்பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன். இருந்தாலும், வாக்கெடுப்பின் போது அவையில் நடைபெற்ற குழப்பங்களை காரணம் காட்டி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மத்திய அரசு, ஜானகியின் அரசைக் கலைத்து, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது.

அதேபோல் 28 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க-வுக்கு தற்போது தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இ.பி.எஸ் ஓ.பி.எஸ் ஓரணியாகவும், சசிகலா, தினகரன் அணியினர் தனி அணியாகவும் இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்த நிலையில், எடப்பாடி அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுனர் உத்தரவிட்டால், அவர் தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும் நிகழ்வு, 28 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் தமிழக சட்டசபையில் அரங்கேறும் என்று எதிர்பார்க்கலாம்…!!!.

 
 
 
 

This post has been viewed 172 times