பெண்களை தாக்கும் மனச்சோர்வு…!!!

 

பெண்களை தாக்கும் மனச்சோர்வு…!!!

இந்த வார “இனியவளே உனக்காக“ பகுதியில் “பெண்களை தாக்கும் மனச்சோர்வு” என்ற தலைப்பின் கீழ் சில கருத்துக்களை பார்க்க இருக்கிறோம். பெண்களுக்கு மனச்சோர்வு என்பது, குழந்தை பருவத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. எப்போதெல்லாம் மனச்சோர்வு ஏற்படுகிறது? என்றால், முதலில் சிறுமியாக பள்ளிக்கு செல்லத் தொடங்கியதில் ஆரம்பித்து, பின் மார்க் குறைவாக எடுத்தால், மனச்சோர்வு ஏற்படுகிறது. பின்னர் விளையாட்டுகளில் வெற்றி பெற வில்லை என்றாலும், மனச்சோர்வு ஏற்படுகிறது.

sad-girl

பின்னர் பேரிளம் பெண்ணாக வளரும் போதும் மனச்சோர்வு ஏற்படுகிறது. அதன் பின் காதல் போன்ற ஈர்ப்புகளில் சிக்கி, பின் ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழவும் முடியாத நிலை ஏற்படும் போது, உறவுகளாலும், பெற்றோர்களாலும் வரும் கடும் எதிர்ப்புகளினால் மனச்சோர்வு அடைந்து விடுகின்றனர். பின்னர் கல்லூரி படிப்பு முடிந்து, ஒருவழியாக திருமணமும் ஆகிறது. இதில் ஒன்றிரண்டு வருடங்கள் கழிந்து விட்டால், ‘இன்னும் தொட்டில் ஆட வில்லையே?’ என்ற கேள்வி அம்புகள் போல் தினமும் பாயும்.

இது போல இந்த கேள்வி, பெண்களின் மனதில் ஆணி எடுத்து குத்தியது போலவும் இருக்கும். இந்த வலியையும் தாங்கிக் கொண்டு, சுற்றி இருப்போர் பேசும் பேச்சையும் கேட்டு, ஒவ்வொரு நாளையும் அவள் நகர்த்துவதற்குள் படும் பாடு இருக்கிறதே., அதை வார்த்தையால் சொல்ல முடியாது. இப்படியாக பல நிலைகளில் அவள் வாழக்கையில் வரும் சோர்வு அவளது வாழ்க்கையையே தாக்குகிறது. இதனை எதிர் கொள்ளும் தைரியமும், பக்குவமும் அநேக பெண்களுக்கு இருப்பது இல்லை. இந்த வாரம் அதைப்பற்றித்தான் கீழ் வரும் பகுதியில் விளக்கமாக பார்க்க இருக்கிறோம்.

முதலாவதாக குழந்தை இன்மையால் இன்று பல பெண்கள் எவ்வாறு அவதியுறுகிறார்கள் என்பது பற்றி பார்ப்போம். ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை இன்மை பற்றிய விழிப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும். இன்று அநேக பெண்கள் குழந்தை பேற்றை தள்ளி வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு காரணம், குழந்தை பெற்றால் அழகு குறைந்து விடும் என்ற எண்ணம் ஒன்று. இரண்டாவதாக, குழந்தை பெற்றுக்கொண்டால், ஜாலியாக இருக்க முடியாது என்ற எண்ணமும்தான். பெண்ணே…! நீ அவ்வாறு செய்யாதே. காலா காலத்தில் குழந்தையை பெற்றுக் கொள்வது உன் உடல் நலத்துக்கும் நல்லது. ஏனென்றால், தள்ளிப் போடுவதால் சில பெண்கள், குழந்தை பெற்றெடுக்கும் பாக்கியமே இல்லாமல் போய் விடுகிறார்கள்.

குழந்தை இல்லை என்றால், சிலர் கேட்கும் கேள்விகள் உன்னை மனச்சோர்வு அடையச் செய்து விடும். ஆனால், இன்றைய காலத்தில் குழந்தை இல்லையே என்று அதிக அளவில் வருந்த வேண்டியது இல்லை., மனச்சோர்வு அடைய வேண்டிய அவசியமும் இல்லை. இன்றைய நவீன மருத்துவத்தின் மூலம் குழந்தை இன்மை என்ற பெயரை எளிதில் மாற்றி விடலாம். அது போல, குழந்தையின்மையை பற்றிய கேள்விகள் எழுப்பப்படும்போது, பெண்கள் தடுமாறாமல் நிதானமாக பதிலளிக்கலாம். “தாய்மையடைதலை இன்னும் ஒன்றிரண்டு வருடங்கள் தள்ளிவைத்திருக்கிறோம்” என்றோ, “தாய்மையடைய தயாராகிக் கொண்டிருக்கிறேன்’” என்றோ, “நாங்களும் உங்களைப்போல ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றோ தைரியமாக சொல்லுங்கள்.

அடுத்ததாக, மாறிவரும் எந்திரத்தனமான வாழ்க்கை முறை, குழந்தைகளின் உள்ளத்திலும் சுமைகளை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வு சற்று வித்தியாசமானது. குழந்தைப் பருவமே மகிழ்ச்சி நிறைந்தது என்பது பெரியவர்களின் எண்ணம். ஆனால், பல்வேறு நிகழ்வுகள், குழந்தைகளுக்கும் மனச்சுமைகளை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகளின் மனச்சோர்வு 10 ஆண்டுகளுக்குள்ளாக இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ‘டிப்ரஸ்ஸன்’ எனப்படும் மனச்சோர்வு, குழந்தை பருவத்தை பெரிதும் பாதிப்படையச் செய்து விடுகிறது.

மனச்சோர்வு என்பது ஒருவகை மனப் பிறழ்ச்சி நோய். மனச்சோர்வால் பாதிக்கப்படுவோரில் சுமார் 20 முதல் 25 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவார்கள். குழந்தைகளுக்கு 80 சதவீத மனச்சோர்வு, நண்பர்கள் மற்றும் உறவுகளாலேயே ஏற்படுகிறது. மனச்சோர்வு, குழந்தைகளை பல விதங்களில் பாதிக்கும். உணவு, கல்வி, பழக்க வழக்கங்கள், நடத்தைகள், சமூகத்துடன் இணக்கமாக பழகுதல் ஆகிய அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். இவர்கள், கல்வியில் பின்தங்கும் நிலையும், மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கும் நிலைக்கும் தள்ளப்படுவார்கள்.

மனச்சோர்வு அதிகரிக்கும் போது மற்ற மன பாதிப்புகளும் தொற்றத் தொடங்கிவிடும். தற்கொலையை தூண்டும் கொடிய வியாதி இது என்பது குறிப்பிடத்தக்கது. கேளிக்கையில் விருப்பமின்றி இருப்பது, சுறுசுறுப்பு, உற்சாகமின்றி செயல்படுவது, கவலை ரேகைகள் முகத்தில் தெரிவது, தூக்கம் குறைந்து தவிப்பது, பசியின்மை, குற்ற உணர்வுடன் தவித்தல், மனம் அலைபாய்தல், தன்னம்பிக்கையின்றி பேசுதல், நினைவாற்றல் தடுமாற்றம் மற்றும் கவனக்குறைவு போன்றவை மனச்சோர்வு பாதிப்பின் அறிகுறிகளாகும்.

சாதாரணமாக தோன்றும் இந்த அறிகுறிகள் விபரீத விளைவுகளை உருவாக்கும் மனநோயாக மாறலாம்.
இவ்வாறாக மனச் சோர்வால் பாதிக்கப்படும் குழந்தைகளிடம் அன்பு பாராட்டுதல் மிக முக்கியமானது. அவர்களை மனதுக்குப் பிடித்த இடங்களுக்கு சுற்றுலாவாக அழைத்துச் சென்று வரலாம். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம். சிரிப்பு-வேடிக்கை நிகழ்ச்சிகளை பார்க்க வைக்கலாம்.

இப்படியாக பெண்ணே…! குழந்தை முதல் முழுமையாக வளர்ச்சி அடைந்த பெண் வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மனச்சோர்வு, உன்னையையும், உன்னை சார்ந்த குழந்தைகளையும் பாதித்து விடாமல் பார்த்துக் கொள்வது உனது கடமையாகும். அப்போதுதான் நீ, உன் வாழ்வில் உன் கடமைகளை முழுமையாக செய்ய முடியும். உன் குடும்பத்தையும், சிறப்பாக கட்டி அமைத்து சாதனை புரிய முடியும். எனவே பெண்ணே..! நீ உன் மனதை எப்போதும் சந்தோஷமாகவே வைத்துக்கொள். மனச்சோர்வை வென்று, வெற்றிப்படிக் கட்டுகளின் மீது ஏறி, வீறு நடை போடு, இனியவளே…!.

 
 
 
 

This post has been viewed 483 times