இளைஞர்களும், கம்ப்யூட்டர்களும்…!!!

 

இளைஞர்களும், கம்ப்யூட்டர்களும்…!!!

இந்த வார “வாலிப முத்து” பகுதியில் “இளைஞர்களும், கம்ப்யூட்டர்களும்” என்ற தலைப்பில் சில கருத்துக்களை பார்க்க இருக்கிறோம். இப்போதைய நவீன யுகத்தில், சிறுவர் – சிறுமிகள் கூட நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தத் தொடங்கி விட்டனர். கையடக்க செல்போனில், இந்த உலகத்தையே காண்கிறார்கள். கம்ப்யூட்டர்கள் முன் அமர்ந்து விட்டால், சிறுவர்களை அதில் இருந்து எழுப்ப முடிய வில்லை. சிறுவர்களை மட்டும் இன்றி, இளைஞர்களின் மனதை வடிவமைப்பதிலும் கம்ப்யூட்டர்கள் முக்கிய பங்காற்றி வருகிறது.

malware-spyware

“உலக அளவில் 70 சதவீத வீடுகளில் கம்ப்யூட்டர் நுழைந்துவிட்டது” என “பீடியாட்ரிக்ஸ்” பத்திரிகை குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் 6 முதல் 17 வயதுடைய மாணவர்களின் வீடுகளில் கம்ப்யூட்டர் பயன் பாடு அதிகரித்து வருகிறது. வேறு பல நாடுகளிலும்கூட கம்ப்யூட்டரின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு அசுர வேகத்தில் செல்கிறது.

என்றாலும், சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை வைத்திருந்தால்தான் அதைப் பயன்படுத்த முடியும் என்ற நிலையில், இன்றைய இளைஞர்கள் இல்லை. ஏராளமான இளைஞர்கள் இண்டர் நெட் சென்டர்களுக்கு சென்று தங்களுக்கு வேண்டியவற்றை பார்த்துக் கொள்கிறார்கள். அல்லது அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் இருக்கும் கம்ப்யூட்டர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வீடுகளில், சிறுவர்களும், வாலிபர்களும் பெற்றோரின் கண்காணிப்பின் கீழ் பொறுப்போடு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால், அது பயனுள்ளதுதான். ஆனால் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், கம்ப்யூட்டர்களை பயன்படுத்த அநேக பெற்றோர் அனுமதித்திருப்பது வருந்தத்தக்கது.

பல பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகளின் இன்டர்நெட் நடவடிக்கைகளைப் பற்றி அவ்வளவாக தெரியாது. அல்லது தெரியவே தெரியாது என்ற நிலைதான் தற்போது காணப்படுகிறது. வீடுகளில் இன்டர்நெட்டை உபயோகிப்பது சம்பந்தமாக பிரிட்டனில் நடத்தப்பட்ட சுற்றாய்வின்படி, ஏழு பெற்றோர்களில் ஒருவர், தங்கள் பிள்ளைகள் இன்டர்நெட்டில் எதைப் பார்க்கிறார்கள் என்பது, தங்களுக்கு சுத்தமாகவே தெரியாதென ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

பிள்ளைகள் இன்டர்நெட்டை உபயோகிப்பது கண்காணிக்கப்படாவிட்டால் அவர்கள் ஆபாசத்தைப் பார்க்கும் ஆபத்தும் உண்டு. இது மட்டுமல்லாமல், மற்ற ஆபத்துகளும் உண்டு. நம் பிள்ளைகள் பள்ளியிலும், கம்ப்யூட்டரிலும் புதிய புதிய நண்பர்களைத் தேடிக் கொள்கிறார்கள். ஆகவே, நம்மால் பெரும்பாலும் சந்திக்க முடியாத பிள்ளைகளோடு, அவர்கள் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.

நிச்சயமாகவே, இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்படும் அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் வேறெந்த முந்திய தலைமுறையினரும் எதிர்ப்பட்டதில்லை. இதனால், அநேக இளைஞர்கள் கவலைதரும் விதமாக நடந்து கொள்கிறார்கள். இது போன்ற நிலை நமது குடும்ப இளைஞர்களுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும்., மேலும் நம் இளைஞர்கள், “புளு வேல்” போன்ற உயிர்க் கொல்லி கம்ப்யூட்டர் விளையாட்டுகளிலும் சிக்கி விடவும் கூடாது. எனவே இளைஞர்களே, உங்களுக்கு நீங்களே நீதிபதி. கம்ப்யூட்டர்களை பயன்படுத்துதலில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், உங்கள் கையில்தான் உங்கள் வீட்டின் எதிர்காலம் மட்டும் அல்ல., இந்ந நாட்டின் எதிர்காலமே இருக்கிறது, இளைஞனே…!!!.

 
 
 
 

This post has been viewed 177 times