மது குடிக்கும் பழக்கத்தை மாற்ற முடியுமா?

 

“குடி குடியை கெடுக்கும்”

மது குடிக்கும் பழக்கத்தை மாற்ற முடியுமா?

மது குடிக்கும் சிலர் காலையில் எழுந்ததும், மனைவியின் தலையில் சத்தியம் செய்து சென்ற பின்னரும், மாலையில் போதையோடுதான் வீடு திரும்புவார்கள். சிலர் “பெட் காபி” போல் காலையில் கண் விழிப்பதே மது பாட்டில் முன்புதான். மது வீட்டில் இல்லை என்றால், மதுக்கடைகளை நோக்கி காலையிலேயே ஓடுவோரும் இருக்கிறார்கள். இந்த இரண்டு நிலையுமே, தீவிரமான மது அடிமைத்தனத்தின் அறிகுறிகள். தான் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை ஒருவர் உணர்ந்து ஒத்துக்கொள்வதுதான் மாற்றத்தின் முதல் படி.

alcohol-06

பெரும்பாலும் குடிப்பவர்களைக் கேட்டால் தாங்கள் குடிப்பதற்கு, ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள். கூலி வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் உடல்வலியை போக்கக் குடிப்பதாகவும், இளம் வயதினரைக் கேட்டால் நண்பர்கள் கட்டாயப்படுத்துவதால் அல்லது ஜாலி மூடில் இருந்ததால் குடிப்பதாகவும், சிலர் கவலையை மறக்கக் குடிப்பதாகவும் காரணம் சொல்வார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சாக்குப் போக்குகள்தான், நாளடைவில் குடியைத் தொடர்வதற்குக் காரணமாகிவிடும்.

தீவிர குடிப்பழக்கம் இல்லாதவர்கள், மது குடிப்பதை எப்போது நிறுத்தினாலும் பிரச்சினை இல்லை. ஆனால், தினசரி ஆல்கஹாலுக்குப் பழகிப்போன மூளை நரம்புகள், திடீரென குடியை நிறுத்தும்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சில தொந்தரவுகளைத் தருவது உண்மைதான். எனவே, அதிகப் போதைக்கு அடிமையானவர்கள் குடியை நிறுத்திய சில மணி நேரத்தில் கை, கால் நடுக்கம், தூக்கமின்மை, பதற்றம், வாந்தி, எரிச்சல் உணர்வு போன்றவை ஏற்படலாம். சிலருக்கு நிறுத்திய ஓரிரு நாட்களில் வலிப்பு அல்லது யாரோ பேசுவது போல் குரல் கேட்பது, உருவங்கள் தெரிவது, அதீத பய உணர்வு போன்றவை ஏற்படலாம். மதுவை திரும்பக் குடித்தால்தான் இவை சரியாகின்றன என்ற காரணத்தைக் காட்டியே, குடியைத் தொடர்வது ஆபத்தையே விளைவிக்கும்.

தொடர் குடியால் நாளடைவில் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான உடல் நலப் பாதிப்புகளைவிட மேற்கூறிய தொந்தரவுகள் மிகச் சாதாரணமானவை. மேலும் மருந்துகளால் கட்டுப்படுத்தக் கூடியவை. தினசரி 500 மி.லி. குடித்தால்தான் போதைவரும் என்ற நபருக்கு, 200 மி.லி. குடித்தால் போதை ஏற்படாது. இப்படிப் பட்டவர்கள் படிப்படியாகக் குடியை நிறுத்துவது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, அதிக அடிமைத்தனத்துக்கு ஆளானவர்கள், மருத்துவ உதவியுடன் உடனடியாக, முழுவதுமாக நிறுத்தும் முறையே சிறந்தது.

மேற்கண்ட குடிபோதை நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் ‘சுயக் கட்டுப்பாடு வேண்டும்’, ‘உன்னால் முடியும்’ என்பது போல இலவசமாகக் கிடைக்கும் அறிவுரைகள் எந்தப் பலனையும் தராது. ஏனென்றால், மூளை நரம்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஏற்படும் மேற்குறிப்பிட்ட தொந்தரவுகளைச் சரி செய்ய மனநல மருத்துவரின் உதவி அவசியம்.

ஆல்கஹால் உடலில் சேரும் இடம் கல்லீரல்தான். இதனால் நாளடைவில் மஞ்சள் காமாலையில் ஆரம்பித்து, கல்லீரல் செயலிழந்து போவது வரை உடல் நலப் பிரச்சினைகள் தோன்றலாம். அல்சர், இதய வீக்கம் மற்றும் செயலிழப்பு, நரம்பு கோளாறுகள், கணைய வீக்கம், வைட்டமின் குறைபாடுகள், உணவு மண்டலத்தில் புற்றுநோய் போன்றவை மற்ற முக்கியப் பாதிப்புகள்.

பாதிக்கு மேற்பட்டோர் மனக்குழப்பங்கள், மனப்பதற்றம், மன அழுத்தம், தூக்கம் சம்பந்தப்பட்ட நோய்கள், செக்ஸ் பிரச்சினை போன்ற மனநலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். இது தவிர சமுதாயத்தில் சுயகௌரவத்தை இழத்தல், குடும்பப் பிரச்சினைகள், பணவிரயம் மற்றும் கடன், தனிமனித உறவு பாதிப்பு, விபத்துகள், தற்கொலை எனப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

வாழ்க்கையின் எத்தனையோ முக்கியமான சந்தோஷங்களை இழந்துள்ளோம் என்பதை, இப்போதுதான் உணர்கிறோம்’ என்பதுதான் குடிபோதையிலிருந்து மீண்டவர்களில் பெரும் பாலோர் சொல்லும் கருத்து. காலம் கடந்த பின் வருந்துவதைவிட, விழிப்புடன் போதையை எதிர்த்துச் செயல்பட்டால் தனிநபருக்கு மட்டுமல்ல., நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்வாழ்வுதான்.

இந்த நிலையில், கணவன் மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி விட்டதால், அவரை விட்டு பிரிந்து தாய்வீட்டுக்கு சென்று விட்டாள் மனைவி. பின்னர் கணவன் சென்று, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவள் மறுத்து விட்டதால், அவளை மதுவின் போதையில் இருந்த கணவன் கத்தியால் குத்தி கொன்று விட்டான்.

இந்த சம்பவம், காஞ்சீபுரத்தை அடுத்த காவேரிப்பாக்கத்தில் நடந்துள்ளது. போதை கணவனால் உயிர் பறிக்கப்பட்ட அந்த மனைவியின் பெயர் ராஜேஸ்வரி. போலீசார், ராஜேஸ்வரியை கொலை செய்த லட்சுமணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராஜேஸ்வரி போல எத்தனையோ பெண்கள், இன்றும் கணவனின் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டு, வருகின்றனர். இது போன்ற நிலை மாற வேண்டும் என்றால், மது விலக்கு கண்டிப்பாக அமல் படுத்தப்பட வேண்டும்…!!!.

 
 
 
 

This post has been viewed 125 times