துளிர் செய்திகள்

 

“எடப்பாடி பழனிசாமி அணியில் எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் உள்ளனர்”- தினகரன் கூறுகிறார்

“எடப்பாடி பழனிசாமி அணியில் எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் உள்ளனர். மேலும் பலர் தொடர்பில் இருக்கின்றனர்”என்று. அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எப்போது தேர்தல் வந்தாலும் சசிகலா தலைமையில் இயங்கும் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் நீதிமன்றத்தை நாடி உள்ளதாகவும், தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி அணியில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் உள்ளதாகவும், மேலும் பலர் தொடர்பில் இருப்பதாக கூறிய தினகரன், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் வீட்டிற்கு செல்ல நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால் தாங்கள் யார் என்பதை காட்டுவோம் எனவும் அவர் கூறினார்.!!!..

பா.ஜ.க-வின் புல்லட் ரெயில் திட்டத்துக்கு
சிவசேனா எதிர்ப்பு

குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் இருந்து, மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு “புல்லட் ரயில்” திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமரும் அடிக்கல் நாட்டியுள்ளனர். இந்த திட்டத்தால், எந்த பயனும் ஏற்படாது என்று, பாஜக-வின் தோழமைக் கட்சியான சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வமான நாளேடான “சாம்னா”வில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அகமதாபாத்–மும்பை இடையே தற்போது நடைபெற்று வரும் ரயில் சேவையே தடுமாறி வருகிறது என்றும், இதே மார்க்கத்தில் இயக்கப்பட உள்ள புல்லட் ரயில் திட்டம் தேவையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விவசாயிகள் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது என்றும், அவர்களது குறைகளை தீர்க்காத நிலையில், புல்லட் ரயில் திட்டத்தால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.!!!..

தமிழ்நாட்டில் ஜப்பானிய தொழிற்சாலை நகரம்

ஜப்பான் பிரதமர் ஷின்சோ இந்தியா வந்த போது, பொருளாதரம், வணிகம், விமான போக்குவரத்து, தொழில் முதலீடு உள்ளிட்ட 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் காந்திநகரில் நடைபெற்ற இந்திய – ஜப்பான் வர்த்தக மாநாட்டில் இருநாட்டு பிரதமர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் தமிழகம் ஆகிய 4 மாநிலங்களில், ஜப்பானிய தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள திறமை வாய்ந்த பணியாளர்கள் ஜப்பானுக்கு உதவுவார்கள் என்றும், 21-வது நூற்றாண்டு என்பது ஆசியாவின் நூற்றாண்டு என தெரிவித்துள்ளார். உலக வளர்ச்சியில் ஆசியாதான் இப்போது மையப்புள்ளியாக உள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.!!!.

2-ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அக், 25-ம் தேதி தீர்ப்பு

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அக் -25-ம் தேதி தனது தீர்ப்பை அறிவிக்கிறார்.

தகுதியற்ற நிறுவனங்களுக்கு முறைகேடாக 2-ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி.கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த தவறான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகத் தொடரப்பட்டிருந்த இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்தது. இந்த வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அக் -25 ம் தேதி தனது தீர்ப்பை அளிக்க இருக்கிறார்.!!!.

மு.க. ஸ்டாலினை சந்தித்தார், எச். ராஜா

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா தனது 60–வது ஆண்டு திருமண விழாவிற்கான அழைப்பிதழை திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலினுடனான சந்திப்பு அரசியலையும் தாண்டி, நட்பு ரீதியான ஒன்று என்று கூறினார். இந்த சந்திப்பில் எந்த வித அரசியலும் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சாரணர் இயக்கத்தில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சாரண – சாரணியர் இயக்கத்தில் என் அப்பா காலத்தில் இருந்தே போட்டியிட்டு வருவதாக கூறினார்.!!!.

சிலை கடத்தல் வழக்கில்
டி.எஸ்.பி.காதர் பாட்ஷா கைது

2008ம் ஆண்டு அருப்புக்கோட்டையில் உள்ள ஆலப்பட்டியில் சிலை கடத்தல் காரர்களிடம் 6 பஞ்சலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வேறு ஒருவருக்கு15 லட்சம் ரூபாய்க்கு டி.எஸ்.பி. காதர் பாட்ஷா விற்றுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக திருவள்ளூர் டி.எஸ்.பி. காதர் பாஷாவை போலீசார் கடந்த 3 மாதங்களாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கும்பகோணத்தில் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி. காதர் பாஷாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு காவல்துறையினர் காதர் பாஷாவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கைதான காதர் பாஷா மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காதர் பாட்ஷா மீதான வழக்கு விருதுநகர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சென்னை கோயம்பேடு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.!!!.

 
 
 
 

This post has been viewed 138 times