குறிப்பறிந்து நட பெண்ணே…!

 

இந்த வார “இனியவளே உனக்காக” பகுதியில், “குறிப்பறிந்து நட பெண்ணே’’ என்ற தலைப்பில் சி ல கருத்துக்களை பார்க்க இருக்கிறோம். கணவனின் குறிப்பறிந்து மனைவியும், மனைவியின் குறிப்பறிந்து கணவரும் நடக்க வேண்டும். அப்போது அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்., அப்படிப்பட்ட குடும்பத்தில் சோகத்துக்கும், துக்கத்துக்கும் இடம் இல்லை.
வாழ்க்கையில், முக்கியமான கட்டம் திருமணம். மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பல கணவன்மார்களுக்கு தெரியாததால், அவ்வப்போது, குடும்பத்தில் பிரச்சினைகள் வெடிக்கின்றன. கணவனிடம் மனைவிக்கும், மனைவியிடம் கணவனுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தன்னுடைய செயல்களை பாராட்ட வேண்டும்., தான் கூறுவதை காது கொடுத்து கேட்கவேண்டும் என்ற எண்ணமும் மனைவிக்கு இருக்கும். மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வது, கணவனுக்கு முக்கியமானது. மனைவியிடம் எதற்கெடுத்தாலும் கோபப்படக் கூடாது. மனைவியின் மனது புண்படும்படி கணவன் பேசக்கூடாது., அன்பாய் பிரியமாய் நடந்து கொள்ள வேண்டும். முக்கியமாக, பிறர் முன்னிலையில் மனைவியை திட்டக்கூடாது.
தன்னுடைய சொந்தங்களை, ஒரு நொடியில் விட்டு, கணவரை நாடி வந்திருப்பவர்தான், மனைவி. அவரை, எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்து கணவன் பேசக்கூடாது. முக்கிய விழாக்களுக்கோ, சொந்த பந்தங்களின் வீட்டுக்கோ செல்லும் போது, மனைவியையும் அழைத்துக் கொண்டு போக வேண்டும். தன்னுடைய சமையலை கணவன் பாராட்ட வேண்டும் என்று, மனைவி நினைப்பார். நன்றாக இருந்தால் பாராட்ட கணவன்மார்கள் தயங்க கூடாது. கொஞ்சம் குறை இருந்தால், இதை இப்படி செய்திருக்கலாம் என்று, மனைவியின் மனம் நோகாமல் சொல்ல வேண்டும். இது, மனைவிக்கு மிகவும் பிடித்துப் போகும். அம்மா, சகோதரியின் சமையலோடு, தயவு செய்து மனைவியின் சமையலை ஒப்பிட்டு கணவன்மார்கள் பேசக் கூடாது; அது அவர்களை காயப்படுத்தக் கூடும்.
எப்போதும், பணத்தின் பின்னாலேயே கணவன் சென்று கொண்டிருக்கக் கூடாது; வீட்டில் இருக்கும் நேரங்களிலும், பணம் சம்பாதிப்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால், குடும்ப சூழல் மாறிப் போகும். நேரம் கிடைக்கும் போது, குடும்பம், குழந்தைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தலாம். மனைவியிடமும், குழந்தைகளிடமும், கணவன்மார்களே மனம் விட்டு பேசுங்கள்; கிடைக்கும் நேரங்களில், எல்லோரையும் வெளியில் அழைத்து செல்லலாம்.
முக்கியமான நேரங்களில், மனைவிக்கு என்ன தெரியும் என்று நினைத்து விட வேண்டாம். அவர்கள் சொல்லும் வழிமுறைகள், நம்மை அடுத்த கட்டத்துக்கு கூட கொண்டு செல்லும். எனவே, அவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. நமக்கு தான் எல்லாம் தெரியும் என்ற சிந்தனை இருந்தால், உடனடியாக அகற்றி விடுங்கள்.
மனைவியை வைத்து கொண்டு, அடுத்த பெண்ணை பற்றி உயர்வாக சொல்லி விட வேண்டாம். அம்மாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ, அதே போல, மனைவிக்கும் கொடுக்க வேண்டும். மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்றால், உடனிருந்து கவனிக்க வேண்டும். நம்முடைய தாயார், அவர்களின் தாயார் கவனித்து கொள்ளட்டும் என்றிருக்க வேண்டாம். சந்தோஷத்தையும், துக்கத்தையும் சரிசமமாக பிரித்துக் கொள்வது தான், தம்பதியின் முக்கிய கடமை.
எப்போதும் மனைவியர், தங்கள் கணவன்களை சிணுங்கலோடு செல்லப்பெயர் வைத்து அழைப்பார்கள், ஆனால் பொதுவாக “என்னங்க” என்றுதான் அழைப்பார்கள். இந்த “என்னங்க” என்ற வார்த்தைக்கு மனைவியரின் அகராதில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.
* பாத்ரூமில் நின்று ‘என்னங்க’ என்று அழைத்தால் சோப்பு, ஷாம்பு, டவல் வேண்டும் என்று அர்த்தம்.
* சாப்பிடும் ஓட்டலில் “என்னங்க” என்று அழைத்தால் “பில்லை கட்டுங்கள்” என்று அர்த்தம்.
* கல்யாண வீட்டில் “என்னங்க” என்றால் “தெரிந்தவர் வந்திருக்கிறார்., வாருங்கள்” என்று அர்த்தம்.
* துணிக்கடையில் நின்று “என்னங்க” என்றால் “தேடிய புடவை கிடைத்து விட்டது” என்று அர்த்தம்.
* வண்டியில் செல்லும் போது “என்னங்க” என்றால் “வண்டியை நிறுத்துங்கள்., ஏதேனும் வாங்க வேண்டும்” என்று அர்த்தம்.
* வெளியே பார்த்து “என்னங்க” என்றால் “அறியாத ஆள் வாசலில் வந்திருக்கிறார்” என்று அர்த்தம்.
* பீரோவின் முன் நின்று “என்னங்க” என்று அழைத்தால் “பணம் வேண்டும்” என்று அர்த்தம்.
* சாப்பாட்டை எடுத்து வைத்து “என்னங்க” என்றால் “சாப்பிட வர்றீங்களா?” என்று அர்த்தம்.
* சாப்பிடும்போது “என்னங்க” என்றால் “சாப்பாடு சுவைதானா?” என்று அர்த்தம்.
* கண்ணாடி முன் நின்று ‘என்னங்க’ என்றால் ‘நகை அழகாக இருக்கிறதா?” என்று அர்த்தம்.
* நடக்கும்போது “என்னங்க” என்றால் “என் விரலை பிடித்துகொள்ளுங்கள்” என்று அர்த்தம்.
* கடைசி மூச்சின்போது “என்னங்க” என்றால் “நான் இவ்வுலகை விட்டு, உங்களை பிரிந்து, இறைவனிடம் போகிறேன்” என்று அர்த்தம்.
இப்படித்தான் குடும்ப பெண்கள், தங்கள் கணவரை நோக்கி கேட்கும் ஒரே ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள். இருக்கும். இது போல கணவன்மார்களும், தங்கள் மனைவியை செல்லப் பெயர் வைத்து அழைப்பார்கள். சிலர் தங்கள் மனைவியை, “செல்லம்…” என்றோ, “சுவீட்டி…” என்றோ, அல்லது தங்கள் மனைவியின் முழுப்பெயரை சுருக்கி இரண்டெழுத்து அல்லது மூன்றெழுத்தில் ஒரு வார்த்தையை கொண்டு அழைப்பார்கள்.இந்த செல்ல பெயர் கொண்டு கணவன் அழைப்பதற்கும் ஒவ்வொரு நேரத்திலும், காலத்திலும், சூழ்நிலைக்கு ஏற்ப அர்த்தங்கள் உண்டு. இது அந்தந்த கணவருக்கும், மனைவிக்கு மட்டுமே புரியம் ரகசியம். இது போன்ற அன்பான வார்த்தைகளை பறிமாறிக் கொண்டு, நீயும் உன் கணவரின் குறிப்பறிந்து நடந்து, உன் வாழ்க்கையை சந்தோஷமாக்கிக் கொள், இனியவளே…!!!.

ti_725_7604.0438323741 copy

 
 
 
 

This post has been viewed 206 times