இளைஞர் சக்தி…!!!

 

இளைஞர் சக்தி…!!!

maxresdefault (1)

இந்த வார “வாலிப முத்து” பகுதியில், “இளைஞர் சக்தி” என்ற தலைப்பில் சில கருத்துக்களை பார்க்க இருக்கிறோம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கூடிய “இளைஞர் சக்தி” வெற்றியை தேடித் தந்தது. இதன் மூலம், இளைஞர் சக்தி ஒன்று திரண்டால், எதையையும் செய்து முடிக்க முடியும் என்பது உறுதியாகிறது.

இளமைக்காலம் விதைக்கும் காலம். கவிஞர் கண்ணதாசன் இளமைக்காலத்தை “கற்பூரப் பருவம்” என்பார். அந்தப் பருவத்தில் எதுவும் சீக்கிரம் இளம் மனங்களில் பற்றிக் கொள்ளும். இளைஞர்கள் தங்கள் இதயங்களில் எதை விதைக்கிறார்கள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், எதை அடையப் பாடுபடுகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால் அதைப் பொறுத்தே அவர்கள் எதிர்காலத்தில் மாறுகிறார்கள்.
இளைஞர் சக்தி உலகில் பிரம்மாண்டமான சக்தி. அந்த சக்தி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறதா? அழிவை நோக்கிப் பயன்படுத்தப்படுகின்றதா? பயன்படுத்தாமலேயே புதைந்து போகிறதா? என்பதைத் தீர்மானிப்பதில் அவர்களுக்குக் கிடைக்கும் முன்மாதிரிகளுக்கும், அவர்கள் மனதில் பதியும் நிகழ்வுகளுக்கும் பெரும் பங்கு உண்டு. இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள், இராமேசுவரம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 16–8–1947 தேதிய தமிழ் நாளேட்டில் நாட்டு மக்களுக்கு பண்டித நேரு விடுத்த வரலாற்றுப் புகழ்மிக்க உரை பதிவானதை மிகுந்த ஆர்வத்தோடு படித்தார். அந்தச் செய்திக்கு அருகிலேயே இன்னொரு செய்தியும் இருந்தது. நவகாளியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக மகாத்மா காந்தி வெறும் காலுடன் நடந்து போய்க் கொண்டிருந்த செய்தி, படத்துடன் விவரித்திருந்தது. அந்த செய்தி, அப்துல் கலாமை மிகவும் நெகிழ வைத்து விட்டது. தேசத் தந்தை என்ற நிலையில் செங்கோட்டையில் முதன்முதலில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டிய மனிதர், அதை விட்டு விட்டு பொது சேவையில் தன்னை அந்தக் கணத்தில் ஈடுபடுத்திக் கொண்டது பள்ளி மாணவர் அப்துல் கலாம் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்ததாக அவரே ஒரு புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். தன்னலமில்லா ஒரு விஞ்ஞானியாகவும், தலைவராகவும் பின்னாளில் அவர் உருவானதற்கான விதை என்று கூட அதைச் சொல்லலாம்.
“ரோமானியப் பேரரசின் ஏற்றமும், வீழ்ச்சியும்” என்ற நூலில் உலக நாகரிகத்தின் சிகரத்திற்கே சென்ற ரோமாபுரி மக்கள் உயர்ந்த விதத்தையும், வீழ்ச்சி அடைந்த விதத்தையும் வரலாற்றாசிரியர்கள் மறைக்க வில்லை. வீழ்ச்சிக்கான காரணங்கள் பற்றி வரலாற்று அறிஞர்கள் கூறும் போது, முக்கியமான காரணமாக அந்நாட்டு இளைஞர்கள் மதுவிலும், ஆடம்பரங்களிலும், கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவு சார்ந்த சிந்தனைகளையும், உழைப்பையும் கைவிட்டதைக் குறிப்பிட்டுள்ளனர். எனவே இந்த இளைஞர் சக்தி இன்று எந்த நிலையில் இருக்கிறது? எப்படி பயன்படுத்தப் படுகிறது? எந்த திசை நோக்கி பயணிக்கிறது? என்பதில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் மனித குலம் மேம்பட பயன்படுத்தப்பட்ட கல்வி இன்று அந்த ஆரம்ப நோக்கத்திலிருந்து நிறையவே விலகி விட்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கும் விஷயம். இன்று கல்வி, வேலை வாய்ப்புக்கான சாதனமாக மட்டுமே மாறி விட்டது. ஏராளமான தகவல்களை மாணவர்களுக்குள்ளே திணிக்கிறதே யொழிய, அவர்களுடைய பண்புகளை வளர்ப்பதில் அலட்சியமே காட்டுகிறது. ஒரு காலத்தில் நல்ல விஷயங்களைச் சொல்ல நீதிப்பாடம் (விஷீக்ஷீணீறீ ஷிநீவீமீஸீநீமீ) என்று ஒரு பாடவகுப்பு இருந்தது. அதில் நீதிக்கதைகள், சான்றோர் பற்றிய செய்திகள், பெரியோர்களின் வாழ்க்கை வரலாறெல்லாம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இன்று அது போன்ற பாடவகுப்புகள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
எந்த அறிவும் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டுமென்றால், எது நன்மை? எது தீமை? என்ற சிந்தனை ஆழமாக இளைஞர்களின் மனதில் பதிந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அழிவே விளையும் என்பதற்கு இக்காலத்தில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அணுவைப் பிளந்து பெரும் சக்தியைக் கண்டு பிடிக்க விஞ்ஞானிகளால் முடிந்தது. ஆனால் அதை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்துவதை விட அதிகமாக அழிவுக்காக அல்லவா, இந்த உலகம் பயன்படுத்துகிறது? அணுகுண்டாக விழுந்து, அந்த அறிவு எத்தனை கோடி உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது.?
இளம் வயதிலேயே எத்தனையோ இளைஞர்களை, சிலர் ‘மதம்’ என்ற பெயரில் மூளைச்சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளாக உருவாக்கி அழிவை அரங்கேற்றுகிறார்கள். அந்த இளைஞர்களில் பலர் மிக நன்றாகப் படித்தவர்கள் என்பதை செய்தித்தாளில் படிக்கிற போது, நம் மனம் பதைக்கிறது. மனிதத் தன்மையைக் கூட அவர்கள் கற்ற கல்வியால் தக்க வைத்துக் கொள்ள முடிய வில்லையே…!
நம் முன்னோர் கல்வியை தகவல்களைச் சேர்க்கும் சாதனமாக நினைத்ததில்லை. ’கல்வி இரண்டாம் பிறப்பு போன்றது’ என்று நம் முன்னோர்கள் கூறுவர். கல்வியில் சிறப்பான இடத்தை பெறுவது, இன்னொரு முறை பிறப்பது போல், புதுப்பிறவி பெறுவது போல் மேன்மையானது என்று நம் முன்னோர் நினைத்தார்கள். கல்வி கற்றவன் தன்னை மேம்படுத்துவதுடன், மற்றவனையும் மேம்படுத்திட வேண்டும். அப்படிக் கல்வி கற்ற இளைஞர்களே, வரலாறு படைக்கும் நாளைய மன்னர்களாகப் பரிணாமிக்க முடியும்.
அப்படி இல்லாமல் வெறும் பட்டப்படிப்பு சான்றிதழுக்காகவும், வேலைக்காகவும் கற்கும் கல்வியை வைத்து நம் நாட்டில் இத்தனை பேர் கல்வி பெற்று விட்டார்கள் என்று புள்ளி விவரம் சொல்வது பேதைமை. கற்ற கல்வி நம்மைப் பண்படுத்தா விட்டால், சமூகத்திற்குப் பயன் தருவதாக இல்லா விட்டால், அந்தக் கல்வியால் என்ன பயன்?
இக்காலக் கல்விமுறை, பெரிதும் ஒருவரைப் பண்படுத்தப் பயன்படுவதில்லை என்ற போதும் நாம் மனம் தளர வேண்டியதில்லை. இக்காலக் கல்வியின் உதவியில்லா விட்டாலும் சிந்திக்க முடிந்த, நன்மை தீமை என்று பகுத்தறியக் கூடிய நல்ல இளைஞர்கள் இன்றும் கணிசமான அளவில் உள்ளார்கள் என்பது பாராட்டத் தகுந்த விஷயம். அவர்களுக்கு நல்ல முன்மாதிரிகள் இருந்தால், வழி நடத்தக் கூடிய பண்பாளர்கள் இருந்தால் அவர்கள் பெரும் சாதனையாளர்களாக கண்டிப்பாக மலர்வார்கள்.
நல்ல முன்மாதிரி என்று சொல்லும் போது, நமக்கு அப்துல் கலாம் நினைவு தான் வருகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று மாணவர்களை சந்திக்கும் வழக்கம் கொண்ட அவர், இளைய சமுதாயத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்து இருந்தார். அவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்ட அவருக்கு இளைய சமுதாயத்தின் நாடித் துடிப்பை உணர முடிந்தது. அவரது அனுபவத்தை பெற்ற இன்றைய இளைஞர்கள், நாளைய நல்ல மன்னர்களாக மாறுவது நிச்சயமே.
ஆனால், இன்று எத்தனையோ இளைஞர்கள் வேர்களை மறந்து அலைகிறார்கள். எந்திரம் போல வாழ்கிறார்கள். தீவிரவாதம் போன்ற அழிவுப் பாதையில் போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நம்மால் முடிந்த வரை, நல்ல முன்மாதிரிகளாக இருக்க முயற்சிக்க வேண்டும். வீட்டிலும், சமூகத்திலும் நாணயமான, பொறுப்புணர்வுள்ள மனிதர்களாக நாம் நடந்து கொண்டாலே போதும். நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்து வாழ்ந்தால் அது நல்ல சிந்தனை அலைகளை இளைஞர்களிடம் உருவாக்க முடியும். இப்படி ஒவ்வொரு மனிதராலும், நல்ல அலைகளை இளைய சமுதாயத்திடம் உருவாக்குவதுடன், நல்ல விதைகளை விதைத்து, அதன் அறுவடையாக இன்றைய இளைஞர்களை நாளைய வரலாற்றில், மேன்மையான மன்னர்களாக நாம் காண முடிவது நூறு சதவீதம் சாத்தியமே…!.

 
 
 
 

This post has been viewed 301 times