புல்லட் ரெயிலா? பயணிகளுக்கு பாதுகாப்பா

 

புல்லட் ரெயிலா?
பயணிகளுக்கு பாதுகாப்பா?

இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆகிறது. இந்த நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்த போது, நீராவி என்ஜினால்தான் ரெயில்கள் இயக்கப் பட்டன. அந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகளின் ஆடைகள் கூட நிலக்கரியின் தூசியால் கறுப்பு நிறமாகி விடும். இப்படிப்பட்ட நிலை தற்போது மாறி, டீசல் என்ஜின்கள் மற்றும் மின்சார என்ஜின்கள் போன்றவற்றை இப்போது பயன்படுத்துவதால், பயண நேரமும் குறைகிறது., பயணிகளின் உடைகளும் பாதிப்பு அடைவதில்லை.

Hokuriku-Shinkansen-Train

இப்போதும் கூட சாதாரண கிராமங்களில் வசிக்கும் ஏழை விவசாய தொழிலாளியால், நம் நாட்டில் ஓடும் சாதாரண பாசஞ்சர் ரெயிலில்தான் செல்ல முடிகிறது. முன் பதிவு செய்த பெட்டிகளில், 2–வது வகுப்பில் கூட அவனால் பயணம் செய்ய முடிய வில்லை. அந்த ஏழை விவசாயி, முன்பதிவில்லா பெட்டியில்தான் தன் மனைவி, மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்யும் காட்சியை இன்றும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இந்த நிலை ஒரு புறம் நீடிக்க, மறு புறத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையும் நடந்து வருகிறது. சென்னை மெட்ரோ ரெயிலில் கட்டணம் அதிகம் என்பதால், சாதாரண விவசாயி அல்ல., நடுத்தரவாசி கூட மெட்ரோ ரெயில் பயணத்தை தவிர்த்து விடும் நிலைதான் இருந்து வருகிறது. புற நகர் ரெயில் சேவை, அல்லது நகர பேருந்துகளில்தான் நடுத்தர வாசிகள் பயணம் செய்கிறார்கள். ஏனென்றால் அவனது பொருளாதாரம், அதற்குதான் தகுதியாக இருக்கிறது.

இதற்கிடையில், சமீபத்தில் புல்லட் ரெயில் திட்டத்தை இந்தியாவில் முதல் முறையாக கொண்டு வர, ஜப்பான் நாட்டுடன், பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் படி, மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு மிக விரைவாக சென்று விடலாம். ஆனால் கட்டணமோ, விமான கட்டணத்துக்கு சரிசமமாக இருக்கும்.

அப்படிப்பட்ட நிலையில், இந்த புல்லட் ரெயிலில் ஏழை விவசாயி பயணம் செய்ய முடியுமா? அவனுக்கு தகுதியானது, முன் பதிவில்லாத சாதாரண ரெயில் பயணம்தான்.

இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவில் ரெயில் பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விட்டது. செப்.28–ம் தேதி மும்பை ரெயில் நிலையத்தில் பயணிகள் செல்லும் மேம்பாலத்தில் நெரிசல் ஏற்பட்டு, 27 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 100 பேர் வரை காயம் அடைந்துள்ளனர்.

இப்படி நிலைமை இருக்கும்போது, இந்தியாவில் ரெயில் பயணிகளுக்கு, உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. முதலில் ரெயில் பயணிகளுக்கு உயிர் பாதுகாப்பு அளியுங்கள். அதன் பின் புல்லட் ரெயிலை ஓட்டலாம்…!!!.

 
 
 
 

This post has been viewed 135 times