அன்பின் வலி

 

அன்பின் வலி

இந்த வார “இனியவளே உனக்காக” பகுதியில், “அன்பின் வலி” என்ற தலைப்பில் சில கருத்துக்களை பார்க்க இருக்கிறோம். உங்கள் குழந்தைக்கு, அது பிறந்த நாள் முதல், உங்கள் அன்பையும், அரவணைப்பையும் கொடுக்க வேண்டும்.

Mom-and-baby-Monkey-Dance-pillow

அப்போதுதான், அந்த குழந்தைக்கும், உங்களுக்கும் நெருங்கிய உறவின் பாசம் வளரும். இல்லையேல், உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் காலப்போக்கில் இடைவெளி ஏற்பட்டு விடும். இந்த இடைவெளி உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை கூட பாதித்து விடும். இதற்கு உதாரணமாக, நான் இணையத்தில் படித்த ஒரு உண்மை சம்பவத்தை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…

சௌதி அரேபியாவில் ஒரு அரபி வாலிபருக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர், பல கம்பெனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ? என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிஷமாக பிறந்தது, அந்த குழந்தை.

அந்த பணக்காரரின் வீட்டில் ஸ்ரீலங்காவை சேர்ந்த ஒரு தமிழ் பெண்மணி வேலை செய்து வந்தார். அவளுக்கு 3 குழந்தைகள். இலங்கையில், சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வந்தார், அவரின் கணவர். இந்த வீட்டுவேலை செய்த பெண்மணி தான், இந்த அரபு தொழில் அதிபரின் குழந்தைக்கு எல்லாமே. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தது இவள் தான். தூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது. தூங்கிய பின்பு, தூக்கிக்கொண்டு அவர்களின் ரூமுக்கு கொண்டு செல்லுவார்களாம் ,பெற்றோர்.

குழந்தைக்கு 2 வருடம் ஆகி இருக்கும். வீட்டுவேலை செய்த அந்த பெண்மணி விடுமுறைக்கு ஊர் செல்ல பலமுறை அனுமதி கேட்டும், முடியாத சூழ்நிலையில் தள்ளிக்கொண்டே போனது. மிகுந்த போராட்டத்திற்குப் பின்பு 3 மாதம் விடுமுறையில் ஸ்ரீலங்கா சென்றார், அந்த பெண்மணி. அவளைப் பிரிந்த அடுத்த நிமிடத்தில் அழ ஆரம்பித்து விட்டது, அந்த குழந்தை.

சிறிது நேரத்தில் அந்த குழந்தை அழுகையை நிறுத்தி விடும் என்று, அதன் பெற்றோர் நினைத்தார்கள். ஆனால், அந்த குழந்தை இரவு உணவு உண்ணவில்லை. ஒரே அழுகை…..அழுது.. அழுது.. துவண்டு தூங்கி விட்டது. “அப்படியே தூங்கட்டும். காலையில் விழித்ததும் பசிக்கும், சாப்பிடும்.” என்று விட்டு விட்டார்கள்.

காலையில் விழித்ததும் ஈனக்குரலில் அழ ஆரம்பித்து விட்டது. அப்போதும் சாப்பாடு சாப்பிட வில்லை. அருகில் இருந்த பொருட்களை, கையால் தூக்கி எறிவதும், துவண்டு விழுவதுமாக இருந்தது. சில மணித்துளியில் மயங்கி விழுந்து விட்டது. பயந்து போன பெற்றோர்கள் மருத்துவமனையில் அட்மிட் பண்ணி விட்டார்கள். அனைவர்களுக்கும் ஒரே கவலை. மூன்று நாட்களாக “ட்ரிப் “மூலம் தான் அனைத்தும் நடந்து வருகிறது. டாக்டர்களுக்கு ஒன்றும் ஓடவில்லை. எந்த மருத்துவமும் கைகொடுக்க வில்லை. மூன்று நாட்களாக கண் திறந்து பார்க்கவில்லை. மருத்துவர்கள் கையை விரித்து விட்டார்கள்.

ஒரே மருந்து…! “அந்த வேலைக்கார பெண் இங்கு வந்தே ஆகனும். இல்லை என்றால் இப்படியே கோமாவில் தான் குழந்தை இருக்கும். அதன் பின்பு ஒன்றும் நல்லது சொல்ல இயலாது” என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். உடனே, இலங்கையில் இருந்த அந்த பணிப்பெண்ணை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியாமல், ஒட்டு மொத்த குடும்பமும் உருக்குலைந்து இருந்தது. பலகோடிக்கு சொந்தக்காரரான, அந்த குழந்தையின் தந்தை எவ்வளவோ முயன்றும், இலங்கைக்கு சென்ற அந்த பெண்ணை கண்டு பிடிக்க முடிய வில்லை.

குழந்தை போல அழுதார். ஒரு மல்டி மில்லினர், பல நிறுவனங்களுக்கு அதிபதி, குறைந்தது 15 ஆயிரம் நபர்களாவது இவரிடம் பணி புரிகிறார்கள். கூடவே மன்னர் குடும்பத்தில் பெண் எடுத்தவர்…!! இதனால். சவுதி அரசு மூலம் முயற்சி எடுத்து, அந்த பெண்ணை கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் அந்த வேலைக்கார அம்மணியோ, “நான் வந்து 4 நாட்கள் தான் ஆகிறது, கணவனுக்கு இளைப்பு நோய் வந்து மருத்துவமனையில் அட்மிட் பண்ணி இருக்கிறோம். நான் எப்படி வர இயலும்?” என்று தன்னுடைய இயலாமையை கூற, அவள் வளர்த்த குழந்தையின் நிலைமையை சொல்ல, அவள் அழுக, அவளின் சூழ்நிலையை சொல்ல. அங்கு அழுகைதான் மிச்சம்.

அந்த பணக்கார சவுதி ஷேக்கோ, தேம்பி தேம்பி அழுது கொண்டு, “என் சொத்து அனைத்தும் போனாலும் பரவாயில்லை. எனக்கு என் குழந்தை வேண்டும் “என்று கூறினார். அந்த இடத்தில், அந்த தந்தை “அன்பின் வலி”யால் துடித்தார். இதனைத்தொடர்ந்து அந்த இலங்கை பெண், தனது குடும்பத்தினர் அனவைவருடன் சவுதிக்கு விமானத்தில் திரும்பி வந்தார். மருத்துவ மனையில், குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கசக்கி போட்ட சிறு துண்டு போல கிடந்தது. ஒரு சிறு அசைவு கூட இல்லை. நேராக, அந்த இலங்கை பணிப்பெண்ணை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள்.

மருத்துவமனையே பரபரப்பாக ஆகிவிட்டது. குடும்பத்தார்கள் கூட்டம் ஒருபக்கம்., நண்பர்கள், நிறுவனத்தில் முக்கிய ஆட்கள் என்று பெரும் கூட்டம் கூடி விட்டது. குழந்தை இருந்த அந்த அறைக்குள் சென்ற அந்த இலங்கை பெண், குழந்தை இருந்த நிலையை பார்த்ததும் கதறி அழுது விட்டார். அவளை தேற்றி ஆறுதல் படுத்தி, குழந்தைக்கு அருகில் அழைத்துச் சென்றார்கள். அந்த இலங்கை பெண், அரபு ஷேக்கின் குழந்தையிடம், ராஜா…ராஜா என தமிழில் கூறக் கூற…காலின் பெருவிரல் அசைய ஆரம்பித்தது. இங்கிலாந்து மருத்துவர் சைகை காட்ட காட்ட, அந்த அம்மணி ராஜா.. ராஜா.. என் ராஜா.. என்று கூறக் கூற, ஒரே நிசப்தம்.

சிறிது சிறிதாக குழந்தையிடம் அசைவு தெரிய.. அனைவர்களின் முகத்திலும் பிரகாசம் தெரிய ஆரம்பித்தது. 20 நிமிடத்தில் குழந்தை கண்ணை திறந்தான், அருகில் இருப்போரை கண் விழித்து பார்த்தான். “அவன் உடலில் இவ்வளவு சக்தி எப்படித்தான் வந்ததோ., தெரியவில்லை” என மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். இந்த நிலையில், அந்த குழந்தை , அந்த இலங்கை தமிழ் பெண்ணை நோக்கி கைகளை நீட்ட, அவளுடைய முகத்திலும், கழுத்திலும், முத்தங்கள் பொழிய அனைவர்களுடைய கண்களிலும் கண்ணீர் உருண்டு ஓடியது. அந்த ஷேக்கின் குழந்தை பிழைத்து விட்டது. அனைவரும் இலங்கை தமிழ் பெண்ணுக்கு நன்றி கூறினார்கள். அந்த மருத்துவ மனை முழுவதும், குதூகலமாகவும், சந்தோஷமாகவும், ஒரு பார்ட்டி ஹால் மாதிரி உருமாறி விட்டது.

அப்புறம், அந்த பெண்ணின் கணவருக்கும் அதே மருத்துவமனையில், அதே சூட்டில் மருத்துவம், பார்த்து அவரும் குணமானார். பின்னர் அந்த அரபு ஷேக்கின் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலையும் கொடுத்தார்கள். இலங்கை பெண்ணின் குழந்தைகளுக்கு நம்ப முடியாத பள்ளியில் உயர்ந்த கல்விக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இனியவளே! இந்த உண்மை சம்பவத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்வது, நமது குழந்தைகளுக்கு நாம் பாசம் கொடுத்து வளர்க்க வேண்டும். உங்கள் அன்பை, உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். உங்கள் குழந்தையை “அன்பின் வலி” தெரியாமல் வளருங்கள். உங்கள் உதவிக்கு வேண்டுமானால், ஒரு பெண்ணை வேலைக்கு வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால், உங்கள் குழந்தையை கவனிப்பதில் இருந்து, அதற்குரிய எல்லா காரியங்களை செய்வது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். “அன்பின் வலி” தெரியாமல் உங்கள் குழந்தையை நீங்கள் வளர்த்தால்தான், அந்த குழந்தை உங்களுடையதாக வளரும்., பிற்காலத்தில் அன்பும், பாசமும், நேசமும் உங்கள் மீது கொண்டிருக்கும். எனவே குழந்தை வளர்ப்பில் நீ மிகவும் கவனமாக இருந்து,. உன் குழந்தையை நீயே பேணி வளர்த்து மிகப்பெரிய ஆளாக மாற்ற வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது என்பதை மறவாதே, பெண்ணே…!!!.

 
 
 
 

This post has been viewed 58 times