கவலையும் கவலையின்மையும்

 

கவலையும்
கவலையின்மையும்

இந்த வார “வாலிப முத்து” பகுதியில், “கவலையும், கவலையின்மையும் ”என்ற தலைப்பில் சில கருத்துக்களை பார்க்க இருக்கிறோம்.

keanu_is_sad_png_template_by_frixosisawesome2002-d9o1bb4

ஏனென்றால், சில வாலிபர்கள் தங்கள் இளம் வயதில், எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்கிறார்கள். ஆனால், சில விஷயங்கள் பற்றி அவர்கள் கவலைப்படாமல் வாழ்ந்தாலும், சில விஷயங்களுக்காக அவர்கள் கவலைப்பட்டே ஆக வேண்டும்.

இருபது வயது என்ற வாலிப வயதை, சிலர் கவலையிலேயே தொலைத்து விடுகின்றனர். கல்லூரி, நண்பர்கள், அரட்டை, “அவுட்டிங்” என்று ஜாலியாக இருக்க வேண்டிய வயதில் தேவையில்லாதவற்றை எல்லாம் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருப்பது சரிதானா? என்பது ஒரு சாராரின் கேள்வியாக இருக்கிறது.

எனவே, “கவலையும், கவலையின்மையும்” என்பதில், முதலில் வாலிபர்களே, நீங்கள் எதைப்பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்…

1. நாம் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது நம் நினைவுக்கு முதலில் வருவது, அடுத்தவர்களை பற்றி தான். இதை செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்.? என்று நினைத்து கவலைப்பட வேண்டாம்.

2. உங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லாம் “எனக்கு திருமணம் ஆகப்போகிறது…திருமணம் ஆகிவிட்டது,, குழந்தை பிறந்துவிட்டது” எனக்கூறும் போது, நமக்கு இன்னும் இது எல்லாம் நடக்கவில்லையே? என்று நினைத்து கவலைப்பட வேண்டாம். எதற்கும் ஒரு வயது வரம்பு உள்ளது.

3. காதல் தோல்வி எல்லாம் இந்த வயதில் சாதாரணம். கொஞ்ச நாட்கள் போனால் அது தானாகவே மறந்துவிடும். நீங்களே ஒரு நாள் நல்லவேளையாக தப்பித்தோம் என நினைத்து சிரிப்பீர்கள். அதற்காக எல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

4. எல்லோரும் காதலிக்கிறாங்க..! எனக்கு மட்டும் இன்னும் காதல் செட் ஆகலயே அப்படின்னு கவலைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டாம். வாழ்க்கையில் காதலை விட அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சரியான வயதில் வரும் காதல் நிலையாக இருக்கும். எனவே நம்பிக்கையுடன் இருங்கள், தவறானவரிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

5. இதுவரை நெருங்கிய நண்பனாக இருந்தான். இப்போது என்னுடன் சண்டை போடுகிறான். வேறு பிரண்ட்ஸ் அவனுக்கு கிடைத்துவிட்டார்கள் என்று நினைத்து மனதை வருத்திக்கொள்ள வேண்டாம்.

6. நீங்கள் வேலைக்காகவோ அல்லது மேல் படிப்பிற்காகவோ உங்களது சொந்த வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டியிருக்கும். பெற்றோர்களிடம் பேச பல தொழில் நுட்பங்கள் இருக்கின்றன. விடுமுறையில் வீடு சென்று பார்த்துக் கொள்ளலாம். அதற்காக பெரிதாக கவலை வேண்டாம்.

வாலிபர்களே, மேற்கண்டவை அனைத்தும் நீங்கள் கவலைப்படாமல் இருக்க வேண்டிய விஷயங்கள். ஆனால், நீங்கள் கவலைப்பட வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன. அது பற்றி பார்ப்போம்…

1. இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியவில்லை. ஊழலில் பல வகைகள் உள்ளன. அத்தியாவசிய ஊழல், ஆசை ஊழல், அராஜக ஊழல், அநியாய ஊழல், அறிவியல் ஊழல், அஞ்ஞாத ஊழல், அசிங்க ஊழல் உள்ளிட்ட பல வகையான ஊழல்கள் இருக்கின்றன. “ஊழலை ஒழித்து விடுவேன்” என்று கூறும் ஒவ்வொரு அரசியல்வாதியும், மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று அர்த்தம். இன்றைய அரசியல் சூழலில், இது போன்ற பேச்செல்லாம், மக்களை வசீகரப்படுத்த பயன் படும் அடுக்கு மொழி சொற்றொடர்கள்தான். இதனை ஒழிப்பது பற்றி கவலைப்படு வாலிபனே…!

2. குரலுக்கும், கூத்துக்கும் நாம் கொடுத்த முதலிடத்தை, கல்விக்கும், குடும்பத்துக்கும் கொடுத்திருந்தால், இந்த தமிழகமும், இந்திய திருநாடும் எப்போதோ முன்னேறி இருக்கும். இதனை எப்படி சரி செய்வது என்பது பற்றி கவலைப் படு வாலிபனே…!

3. தமிழனின் கலாச்சாரம், சுயமரியாதையோடு தலை நிமிர்ந்து வாழக்கூடிய கலாச்சாரம். ஆனால் இன்று எல்லாமே மாறிக்கொண்டு இருக்கிறது. காலில் விழுந்து வணங்குவது, சங்க தமிழனின் கலாச்சாரம் இல்லை. தமிழன் தன்மானம் உள்ளவன். இதனை நிலை நிறுத்துவது பற்றி கவலைப்படு வாலிபனே…!

4. உங்கள் தாய் தந்தைக்காக, உடன் பிறந்த சகோதர- சகோதரிகளின் முன்னேற்றத்துக்காக கவலை கொள்ளுங்கள். உங்கள் சொந்த குடும்பத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை செயல்படுத்துவது பற்றி கவலைப்படு வாலிபனே…!

5. நீங்கள் பிறந்த கிராமத்துக்காக, அந்த ஊரை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த கிராமத்தில் நல்ல கல்விச்சாலையை அமைக்க வேண்டும் என்பதற்காக கவலைப்படு, அடுத்து உன் நாட்டை முன்னேறச்செய்வது பற்றி கவலைப்படு வாலிபனே…!

6. இந்திய நாட்டிற்கு உடனடி தேவை ஜனப்பெருக்க குறைவாக்கம்., ஜனநாயக விரிவாக்கம். இதனை அடுத்து தேவை அரசியலில் நேர்மை. உன்னால் முடியாதது எதுவும் இல்லை. முயன்றால், எல்லாமே உன்னால் முடியும். மாற்றி யோசி., மாற்றத்தைப் பற்றி யோசி., முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கவலைப்படு வாலிபனே…!

இளைஞனே…! மேற்கண்ட பகுதியில், நீ எதற்காக கவலைப்படத் தேவை இல்லை., எதற்காக கவலைப்பட வேண்டும்? என்பது பற்றி விரிவாக பார்த்தோம். இதன் படி நீ உன் வாழ்க்கையில் செயல்பட்டால், நீயும் செழிப்பாய்…! உன் குடும்பமும் செழிக்கும்…!! உன் ஊரும் செழிக்கும்…!! உன் நாடும் செழிக்கும், வாலிபனே…!!!.

 
 
 
 

This post has been viewed 134 times