சத்தியம் பதில்கள்

 

 சத்தியம் பதில்கள்

( தங்கபாண்டியன், நெல்லை):
“ நீலச்சுறா” என்ற இணையதள விளையாட்டை தடை செய்தாலும், எப்படி சில மாணவர்கள் இதில் சிக்கி விடுகிறார்கள்.?

தடை செய்யப்பட்டாலும், இணைய தளத்தில் ஏதாவது ஒரு மூலையில் இருந்து இதனை கண்டுபிடித்து சில மாணவர்கள் விளையாடுவதால், அவர்கள் தங்கள் உயிரை இழந்து விடுகிறார்கள். இளைஞர் சமுதாயம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.!!!.

( ராம் குமாரன், மதுரை):

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று மக்கள் அன்று சொன்னார்கள். ஆனால் அன்று, அவசர அவசரமாக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்கள். ஆனால் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ஆட்சியாளர்கள் “ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது” என்று கூறுகிறார்கள். இது ஏற்புடையதா?

எல்லாமே, ஏட்டிக்கு போட்டிதான். பதவியை காப்பாற்றிக் கொள்வதுதான் அவர்களது குறிக்கோள். அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து நாளுக்கு நாள் காட்சிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் உண்மை.!!!.

( தனபால், திருச்சி):
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்குமா?

தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவால் முடியாது. எனவேதான், அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து எதிர்காலத்தில் போட்டியிட இப்போதே காய் நகர்த்தி வருகிறார்கள்.!!!.

( சுரேஷ் குமார், கோவை):
2019 மக்களவை தேர்தலில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்குமா?
போகிற போக்கினை பார்த்தால், மீண்டும் பாரதீய ஜனதா கட்சியே வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஏனென்றால், காங்கிரசில் சோனியா சோர்ந்து விட்டார்., ராகுலிடமோ வேகமில்லை., மக்களோ மோடி பேச்சில் மயங்கியுள்ளனர்.!!!.

( தீபிகா, சென்னை):
போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிடும் நீதிமன்றங்கள், மக்கள் சேவை செய்யாமல் ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருக்கும் தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிடுமா?
நல்ல யோசனைதான். நீதிபதிகளின் காதில் கண்டிப்பாக உங்கள் கேள்வி கேட்டிருக்கும் என்று நம்பலாம்.!!!.

( ராஜேஷ் குமார், சிவகங்கை):
தமிழ் நாட்டில் நடிகர்- நடிகைகள் அரசியலில் சாதிக்கிறார்களே? ஆனால் மற்ற மாநிலங்களில் அப்படி இல்லையே., ஏன்?
தமிழக மக்கள் மட்டுமே, சினிமாவை பாரத்து ஓட்டு போடும் நிலையில் இருக்கிறார்கள். மார் தட்டும் தமிழன் சிந்திப்பதில் மட்டும் வீக்.!!!.

( சாந்தன், சென்னை):
இப்போதைய தமிழக அரசியலில் “சிலீப்பர் செல்” என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறதே., “சிலீப்பர் செல்” என்றால் என்ன?
தூங்குவது போல பாசாங்கு செய்வோர் என்று நேரடியாக அர்த்தம் கொள்ளும் நிலையில், இதன் உண்மையான அர்த்தம் “ எதிரி நாட்டுக்குள் (எதிரி கட்சிக்குள்) இருக்கும் அடுத்த நாட்டு உளவாளிகள்” போன்றவர்கள் என்பதுதான்.!!!.

( தாமஸ், சென்னை):
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு தலையிடுகிறதா? இல்லையா?
“ உடைப்பதும் நானே., ஒன்று சேர்ப்பதும் நானே” என்ற வேலையை மிகத்தெளிவாக பாஜக செய்து வருகிறது , மறைமுகமாக.!!!.

 
 
 
 

This post has been viewed 134 times