மது குடிப்பதை தவிர்ப்பது எப்படி?

 

“குடி குடியை கெடுக்கும்”

stop-drinking-alcohol1

இந்திய திரு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பெண்கள் இன்றைக்கு மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இப்படி ஆண்களைப்போல் அதிகமாகப் பெண்களும் இன்றைக்கு மதுவினை நாடிச்செல்ல மிக முக்கியக் காரணமாக அமைவது, ஆண் நபரின் தூண்டுதல் மற்றும் மரபுவழிப் பழக்கம் என்று சொல்கிறார்கள். ஆண்களைவிட மதுவுக்கு அடிமையாகும் பெண்களே அதிகப்படியான பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

 

குடிக்கும் பெண்கள் எல்லாம் குடிநோய்க்கு அடிமையாவது கிடையாது. அப்படி அடிமையாகும் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து மீண்டு வருவதும் கிடையாது. சென்னையைப் பொறுத்தவரை கலாசார மாற்றமும், பெண்கள் குடிப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாகியிருக்கிறது. இங்கே குடித்தால்தான் “ஸ்டேட்டஸ்” என்று நினைக்கும் ஒரு சமுதாயம் உருவாகியிருக்கிறது.

முன்பெல்லாம் ஏதாவது விழா என்றால் அங்கே பலவித சாப்பாடுகள் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு தொட்டதுக்கெல்லாம் “ட்ரீட்” என்ற கலாசாரம் உருவாகிவிட்டது. பார்ட்டி என்றாலே மது இல்லாமல் இல்லை.

அதிலும் குறிப்பாக இன்றைக்கு ஐ.டி கம்பெனிகளில் பணிபுரிபவர்கள் எதற்கெடுத்தாலும் “பார்ட்டி” என்கிற வலையில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட பார்ட்டிகளுக்கு “குடிக்கவே மாட்டேன்” என்ற சுயக் கட்டுப்பாட்டுடன் செல்பவர்களைக்கூட அங்கிருக்கும் சூழல் மாற்றிவிடுகிறது.

‘எல்லோரும் குடிக்குறாங்க., நாம மட்டும் குடிக்காம இருந்தா.. அவங்க நம்மை என்ன நினைப்பாங்க?’ என்று தனக்குள்ளே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டு அதற்கான சரியான பதிலாகக் குடிப்பதையே இன்றைய இளையதலைமுறையில் அதிகமானோர் தேர்வு செய்கிறார்கள்.

சிலரோ, ஒருமுறை குடித்துதான் பார்ப்போமே…!’ என்று நினைத்து குடிக்கத் தொடங்கி பிறகு அதுவே தொடர்கதையாகி விடுகிறது.
1. ”குடிக்கக் கூடாது என்ற உறுதியுடன் பார்ட்டிக்குப் போகிறவர்கள், போகும் முன்பே வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம். அங்கே உங்களை கிண்டல் அடிப்பார்கள். அதனால் நீங்களே குடிக்க நினைத்தாலும் உங்கள் வயிறு அதை ஏற்றுக்கொள்ளாது.

2. நண்பர்களின் வற்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க, பார்ட்டிக்குச் சென்றவுடனே ஒரு கிளாஸ் சாதாரண குளிர்பானத்தை எடுத்து சும்மா கையில் வைத்துக்கொண்டு, பார்ட்டியில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு இருந்தாலே போதும். அவர்களை யாரும் குடிக்கச் சொல்லி கேட்கவோ, கட்டாயப்படுத்தவோ மாட்டார்கள். குடிக்கவே மாட்டேன் என்று சொல்பவர்களைத்தான் குடிக்க வைக்க அதிகம் தூண்டுவார்கள்.

3. பார்ட்டிகளுக்கு செல்லும் போது மனைவியையும் அழைத்துச் செல்லலாம். உங்கள் மனைவி, உங்களை நீங்கள் மது குடிப்பதில் இருந்து காப்பார்.

4. பார்ட்டிகளில் மது பாட்டில்களை திறக்கும் போது, நீங்கள் பார்ட்டியில் இருந்து விடை பெற்றுக்கொள்ளலாம்.

5. மது பரிமாறப்படும் பார்ட்டி என தெரிந்தால்., அந்த மாதிரி நிகழ்வுகளை தவிர்த்து விடலாம்.

மேலும் குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது? என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு குடிநோயாளியால் முழுமையாக குடிப்பதை நிறுத்த முடியுமே தவிர, குடிக்கும் அளவைக் குறைக்க முடியாது. அவர் குடிக்கக் காரணம் அவருடைய நோயே. இதற்கு மனைவியோ, பெற்றோரோ, நண்பர்களோ காரணமில்லை.

வாக்குறுதி கொடுப்பதால் (சத்தியம் செய்வது) யாரும் குடியை நிறுத்திவிட முடியாது. அதெல்லாம் அதிகபட்சம் ஒரு மாதம் நீடிக்குமே தவிர, குடியை நிறுத்த சாத்தியம் சத்தியத்துக்கு இல்லை. சொல்லப்போனால் இப்படிப்பட்டவர்கள் மறுபடியும் அளவுக்கு அதிகமாகவே குடிக்க வாய்ப்பு உண்டு.

இப்படி குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தன்நலன் மற்றும் குடும்ப நலனைக் கருத்தில்கொண்டு, குடியை நிறுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்., மிரட்டல் அல்லது கண்டிப்பின் மூலமாகக் குடியை நிறுத்திவிட முடியாது.

இவர்கள் குடிநோயிலிருந்து மீண்டுவர மருத்துவ மற்றும் மனோதத்துவ ரீதியான சிகிச்சை மிக முக்கியம். அன்பு, அரவணைப்பும் முக்கியம்.
போதையில் இல்லாத சமயமாகப் பார்த்து குடிநோயாளியிடம் பேசி அவரை சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்க வேண்டும். குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறவேண்டும்.

மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் கைநடுக்கம், தூக்கமின்மை, தாங்க முடியாத வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் வரலாம். இதற்குத் தேவையான மருத்துவ உதவிகளையும், சிகிச்சைகளையும் குடிநோயாளிகளுக்கு முதல் வாரத்தில் அளிப்பார்கள். பின்பு மூன்று வாரங்களுக்கு மனோரீதியான சிகிச்சைகள் அளிக்கப்படும். நான்கு வார காலம் இந்த சிகிச்சை தொடரும்.

இந்த காலகட்டத்தில் நேரத்துக்கு உணவு உட்கொள்ளுதல், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றை நோயாளிகளைத் தொடர்ந்து பின்பற்றச் செய்ய வேண்டும். மேலும், இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை ஒன்றிணைத்து அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை ஒருவருக்கொருவர் குழுவாக அமர்ந்து பேச வைக்கலாம்.

அடுத்ததாக, மது மறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றவர்களை வரவழைத்து அவர்களது முந்தைய நிலை மற்றும் தற்போதைய நிலையை, தற்போது மது மறப்பு மையங்களில் சிகிச்சை பெறுவோருக்கு அறிவுரை கூற வைப்பதும் நல்ல பலனை தரும்.

மது நோயாளியின் குடும்ப அங்கத்தினர்களுக்கும் இரண்டு வாரங்கள் கவுன்சிலிங் கொடுக்கிறார்கள். சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்றவர்களைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மாதம் ஒருமுறை வரவழைத்து, மது மறப்பு மைய அதிகாரிகள் ஆலோசனை வழங்குகிறார்கள். குடிநோய் குணப்படுத்தக்கூடிய நோய் என்பதை உணர்ந்தாலே போதும்…! அந்த நபர் திருந்தி விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

 
 
 
 

This post has been viewed 29 times