மருத்துவ துறைக்கான நோபல் பரிசு !!! அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

 

மருத்துவ துறைக்கான நோபல் பரிசு !!!
அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

உயிரினங்களில் வாழ்வுமுறைக்கு உதவிடும் மரபணு மூலக்கூறுகளின், செயல்பாடுகள் பற்றிய கண்டுபிடிப்புக்காக, 2017 -ம் ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

nobelprize02102017-big

அமைதி, இலக்கியம், க‌லை, அறிவியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்தாண்டுக்கான நோபல்பரிசு, ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் அறிவிக்கப்பட்டது.

அதில், 2017 –ம் ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, ஜெபி சி.ஹால், மைக்கேல் ரோஷ்பஷ், மைக்கேல் டபிள்யூ.யங் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற 3 பேருக்கும் இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

பூமியின் பரிணாம வளர்ச்சிக்கேற்பவும், பருவநிலை மற்றும் வெப்பத்தால் உண்டாகும் சக்தி இழப்பை ஈடு செய்யவும் மனிதர்கள், விலங்கினம், தாவரங்கள் உள்பட அனைத்து உயிரினங்களிலும் இரவு நேரங்களில் விழித்திருந்து வேலை செய்து தேவையான புரதச்சத்தை ஈட்டித்தரும் மரபணு பற்றிய ஆய்வை வெற்றிகரமாக நடத்தியமைக்காக இவர்களுக்கு இந்த விருது கூட்டாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கான அறிவிப்பை நோபல் பரிசுக்குழு தலைவர் தாமஸ் பெர்ல்மன் அறிவித்தார்.!!!.

இந்திய டிரைவரின் உடலில் பற்றிய தீயை
அரபு நாட்டு பெண் அணைத்து காப்பாற்றினார்

ஐக்கிய அரபு அமீரக நெடுஞ்சாலையில், இரு லாரிகள் மோதிய விபத்தில் உயிருக்கு போராடிய இந்திய டிரைவரின் உடலில் பற்றிய தீயை அரபு நாட்டு பெண், தான் அணிந்திருந்த புர்க்காவால் அணைத்து காப்பாற்றியுள்ளார்.

1-5

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடைக்கோடியில் உள்ள நகரமான ரஸ் அல்-கைமாஹ் பகுதியை சேர்ந்த ஜவஹர் சைப் அல் குமைட்டி என்ற 22 வயது பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு, காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

நெடுஞ்சாலை வழியாக வந்தபோது இரு லாரிகள் நேருக்குநேர் மோதி தீபிடித்து எரிந்து கொண்டிருப்பதை ஜவஹர் கண்டார். லாரியின் அருகில் இருந்து உடலில் தீப்பற்றியவாறு ஒருவர் ஓடி வருவதை கண்ட அவர் பதைபதைத்தார். அவ்வழியாக சென்ற அனைவரும் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த டிரைவரின் உயிரை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை. உடனடியாக தனது காரில்இருந்து இறங்கி ஓடிய ஜவஹர் சைப் அல் குமைட்டி , தான் அணிந்திருந்த புர்க்காவை கழற்றி, உடலில் தீப்பற்றியவாறு கீழே புரண்டு கதறிய டிரைவரின் மீது புர்க்காவால் அடித்து தீயை கட்டுப்படுத்தியதுடன், அவரது உடலை புர்க்காவால் மூடி காப்பாற்றினார். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அந்த டிரைவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜவஹர் சைப் அல் குமைட்டியால் காப்பாற்றப்பட்ட டிரைவர் இந்தியாவை சேர்ந்த ஹக்கிரித் சிங் என்பது தெரியவந்துள்ள நிலையில், உரிய நேரத்தில் சமயோஜிதமாக ஜவஹர் தீயை அணைத்ததால் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை.

50 சதவீதத்துக்கு மிகாத அளவில் தீக்காயங்கள் உள்ளதால் அவரை காப்பாற்றி விடலாம் என்று தெரிவித்த டாக்டர்கள் ஜவஹரின் மனிதநேயத்தையும், துணிச்சலையும் வெகுவாக பாராட்டினர். இதுதொடர்பான தகவல்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி சமூக வலைத்தளங்களின் மூலம் பரவ ஆரம்பித்தவுடன் பாராட்டு மழையில் ஜவஹர் சைப் அல் குமைட்டியை குளிப்பாட்டி வருகின்றனர். இதற்கிடையில், அவரது தைரியத்தை ஊக்குவிக்கும் வகையில் சன்மானம் அளிக்கப் போவதாக ரஸ் அல்-கைமாஹ் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.!!!.

சீனாவில் “யங்கோ” நடனத்தை ஒரே நேரத்தில்
11,919 பேர் ஆடி கின்னஸ் சாதனை

சீனாவில், சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஆண்டுதோறும் நாட்டுப்புற திருவிழா நடத்தப்படுவது வழக்‍கம். இந்நிலையில், இந்த ஆண்டு நாட்டுப்புற திருவிழா, கடந்த சில தினங்களாக சீனாவில் களைகட்டியுள்ளது.

chinesefolkdanceguinness03102017-big (1)

 

ஜிலின் மாகாணம் துன்ஹுவா நகரில் “யங்கோ” என்ற நாட்டுப்புற நடன நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. திறந்தவெளியில் நடந்த இந்நிகழ்ச்சியில், பல்வேறு வண்ணங்களில் உடையணிந்த கலைஞர்கள், பாரம்பரிய முறையில் நடனமாடி கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.

ஒரே நேரத்தில், 11,919 கலைஞர்கள், யங்கோ நடனமாடியது, கின்னஸ் உலக சாதனையாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை ஏராளமான மக்‍கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். யங்கோ நடனவிழாவில் இடம்பெற்ற சீன பாரம்பரிய அடையாளமான “டிராகன்” உள்ளிட்ட அம்சங்கள், நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கின.!!!.

 
 
 
 

This post has been viewed 161 times