கேரளாவின் “தண்ணீர்” அரசியல்..!!!

 

கேரளாவின் “தண்ணீர்” அரசியல்..!!!

அரசியலில், ஆளும் கட்சி அரசியல்… எதிர்க்கட்சி அரசியல் என இருவகைகள் இருப்பதை காணலாம். ஆனால், “தண்ணீர் அரசியல்” பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்த அரசியலைத்தான் தற்போது கேரள அரசாங்கம் தமிழகத்தின் மீது நடத்தி வருகிறது.

கேரளாவில், தமிழகத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதுதான், முல்லைப்பெரியாறு அணை. இந்த அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டாலும் இன்னும் பலமாக இருக்கிறது. இந்த அணையில் இருந்து தேனி, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கும், குடிநீருக்காகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் மொத்த உயரம் 158 அடி. இதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி 142 அடி வரை தண்ணீர் தேக்க முடியும். ஆனால், கேரள அரசு 136 அடிவரைதான் தண்ணீர் தேக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. சமீபத்தில் தேனி மற்றும் கம்பம் பகுதி விவசாயத்துக்கும், குடிநீருக்காகவும், முல்லை பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை, கேரள துணை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், செப்.21–ம் தேதி சென்னைக்கு வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, முல்லைப்பெரியாறு நீர் திறப்பு பற்றி பேசியுள்ளார். இந்த பேச்சுக்கு பிறகு, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தண்ணீர் தமிழ் நாட்டுக்குள் வந்து வீணாகிறது. ஏனென்றால் இப்போது தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்து இருப்பதால், இந்த தண்ணீரால் பெரிய அளவில் பயன் இல்லை.

அதே நேரத்தில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீரை இப்போது திறந்து விடாமல், குறைவாக திறந்து விட்டால், கூடுதல் தண்ணீரை முல்லைப்பெரியாறு அணையில் தேக்க முடியும். அந்த தண்ணீர் தமிழ்நாட்டுக்கு தேவையான போது திறந்து விடப்பட்டால், பயனுள்ளதாக இருக்கும். ஆனால், கேரளா இதில் தான் “தண்ணீர் அரசியல்” நடத்துகிறது.

இதே தண்ணீர் அரசியலைத்தான், காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக அரசும் செய்து வருகிறது. இதிலும் தமிழக அரசு போராடிக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் இன்னும் தமிழகத்துக்குரிய தண்ணீரை முழுமையாக பெற முடிய வில்லை. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 72 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இதே போன்றுதான், கேரளாவும், இப்போதும் தண்ணீர் அரசியலை, தமிழகத்துடன் நடத்துகிறது. எனவே, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை தமிழக விவசாயத்துக்கு பயனுள்ள முறையில் கேரளாவிடம் போராடி பெற வேண்டியது, தமிழக அரசின் கடமை. இந்த கடமையை, தமிழக முதல்வர் உடனடியாக செய்ய வேண்டும்., செய்வாரா?.

 
 
 
 

This post has been viewed 143 times