பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வந்தார், சசிகலா

 

பெங்களூரு சிறையில் இருந்து

பரோலில் வந்தார், சசிகலா

சசிகலாவுக்கு பரோல் வழங்க ஆட்சேபணை இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளதை தொடர்ந்து, பெங்களூர் சிறையில் இருந்த சசிகலாவுக்கு, கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் 5 நாள் பரோல் வழங்கினார்கள். இதனைத்தொடர்ந்து அவர் அக்.6–ம் தேதி சிறையில் இருந்து வெளியேறி, சென்னை வந்தார். 233 நாட்களுக்கு பிறகு அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார்.

V K Sasikala leaves after attending the party's MLA's meeting

சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சென்னையில் உள்ள “குளோபல்” மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, அறந்தாங்கியை சேர்ந்த மூளைச்சாவு அடைந்த வாலிபர் கார்த்திக் என்பவரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் நடராஜன் குணம் அடைந்து வருகிறார். இந்த நிலையில், பிப். 17–ம் தேதி முதல் பெங்களூர் சிறையில் இருந்து வந்த சசிகலா, கணவரை பார்க்க 15 நாள் பரோல் கேட்டு, கர்நாடகா சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார். அதில் போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்யாததால், சசிகலாவின் பரோல் மனுவை நிராகரித்த கர்நாடக சிறைத்துறை கண்காணிப்பாளர் சோம சேகர், கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்தால், பரோல் குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதனால், சசிகலா கூடுதல் ஆவணங்களுடன் பரோல் மனுவை மீண்டும் தாக்கல் செய்தார். இந்நிலையில், சசிகலா தாக்கல் செய்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வந்த நிலையில், “சசிகலாவுக்கு பரோல் வழங்க ஆட்சேபணை இல்லை” என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, சசிகலாவுக்கு செப். 6–ம் தேதி 5 நாள் மட்டும் பரோல் வழங்கப்பட்டது.

வீட்டில் இருந்து மருத்துவமனை, மருத்துவமனையில் இருந்து வீடு, தவிர வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது என்றும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருத்துவமனையில் இருக்க வேண்டும் என சசிகலாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் மிக அவசியமான சூழல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டு செல்லலாம். ஊடகங்களை சந்தித்து எந்த கருத்துக்களையும், சசிகலா தெரிவிக்கக்கூடாது எனவும், சசிகலாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில், சசிகலா பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சசிகலா தாமாகவே, எந்த அரசியல்வாதியையும் அழைத்து சந்திக்கக்கூடாது என்றும், ஆனால் வீட்டுக்கு வரும் அரசியல்வாதிகளை சந்திக்க தடையில்லை எனவும் சசிகலாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து பகல் 1–30 மணிக்கு வெளியே சசிகலாவை, டி.டி.வி. தினகரன் வரவேற்றார். பின்னர் சசிகலா, ,காரில் சென்னைக்கு புறப்பட்டார். இரவு 7 மணி அளவில் அவர், சென்னை வந்து, டி. நகரில் ஹபிபுல்லா ரோட்டில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியா வீட்டுக்கு சென்று தங்கினார்.

பரோலில் வந்துள்ள சசிகலாவின் செயல்பாடுகளை உளவுத்துறை போலீசார் உன்னிப்பாக கண்காணித்தனர். பின்னர் மறுநாள் காலை அவர் குளோபல் மருத்துவ மனைக்கு சென்று நடராஜனை பார்த்தார். அப்போது இருவர் கண்களிலும் கண்ணீர் ததும்பியது. அப்போதும், குளோபல் மருத்துவ மனை வளாகத்தில் தமிழக உளவுத்துறை போலீசாரின் நடமாட்டம் காணப்பட்டது.

இந்த நிலையில், ”சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு நடராஜன் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். “ட்ரக்கியோஸ்டோமி” முறையில் சுவாச உதவி அளிக்கப்பட்டு வருகிறது. நடராஜன் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும்” என குளோபல் மருத்துவ மனை மருத்துவ குறிப்பை வெளியிட்டுள்ளது…!!!
நடராஜனுக்கு மாற்று உறுப்பு

ஆபரேஷன் நடந்ததில் முறைகேடா?

சென்னை குளோபல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நடராஜனின் உறவினர் சங்கர் என்பவரிடம் இருந்து, கல்லீரலில் ஒரு பகுதியும், கலாவதி என்ற பெண்ணிடம் இருந்து ஒருசிறு நீரகமும் தானமாக பெற அனுமதி கோரப்பட்டு, அரசும் அதற்கு அனுமதி கொடுத்து இருந்தது. ஆனால், அதை தவிர்த்து அறந்தாங்கியில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த கார்த்திக் என்பவரை, விமானத்தில் சென்னைக்கு எடுத்துச்சென்று, அவரது உடலில் இருந்து கல்லீரல், சிறு நீரகத்தை எடுத்து, நடராஜனுக்கு பொருத்தியுள்ளனர். பின்னர் அந்த உடலை, கார்த்திக்கின் பெற்றோரிடம் வழங்கினர். அவர்கள் இறுதி சடங்குகளை செய்து முடித்தனர்.

இந்த நிலையில், கார்த்திக்கின் சகோதரி பிரேம லதா, செய்தியாளர்களிடம் கூறுகையில்,” நாங்கள் மிகவும் ஏழைகள். தஞ்சாவூர் மருத்துவ மனையில் கார்த்திக்கை அனுமதித்து இருந்தோம். அவரது உடல் நிலை மோசமாக இருந்ததால், சென்னை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றால், கார்த்திக் பிழைக்க வாய்ப்புண்டு என்று கூறினார்கள். இதனால் கார்த்திக்கை சென்னைக்கு எடுத்துச்செல்ல சம்மதித்தோம். ஆனால், சென்னைக்கு சென்று சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. அதே நிலையில்தான் கார்த்திக் இருந்தான். அப்போதுதான், உடல் உறுப்பு தானம் பற்றி எங்களிடம் பேசினார்கள். அதன் படி உறுப்பு தானம் அளித்தோம். எங்களை யாரும் கட்டாயப்படுத்த வில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், “தமிழகத்தில் உறுப்பு மாற்று என்பது மிகப்பெரிய வியாபாரமாக நடைபெறுகிறதா? என்பதை கண்காணித்து விசாரிக்க வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு அதிகளவில் பாதித்த முதல் மூன்று மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என கூறினார்.

மேலும், எல்லா துறைகளும் சரியாக இயங்குகின்றதா? என்பதை முதலமைச்சர் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து சசிகலாவின் கணவர் நடராஜன் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “உறுப்பு மாற்று ஏழைகளுக்கு மறுக்கப்பட்டு, பணக்காரர்களுக்கு வழங்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் உறுப்பு மாற்று என்பது மிகப்பெரிய வியாபாரமாக நடைபெறுகிறதா? என்பதை, தமிழக அரசு கண்காணித்து விசாரிக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழிசை வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,” தனது கணவர் நடராஜனின் உடல் நிலையில் காட்டிய வேகத்தையும், விவேகத்தையும், ஜெயலலிதா உடல் நலத்தை பேணுவதில் சசிகலா காட்டி இருந்தால், ஜெயலலிதா உயிர் பிழைத்து இருப்பார்” என்றும் தடாலடித்துள்ளார்…!!!

சசிகலாவின் பரோலும், தமிழக அரசியலில்
ஏற்பட்டுள்ள மாற்றமும்

மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரது கணவர் நடராஜன், சிறுநீரகம், மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை குளோபல் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சசிகலா, தனது கணவரை பார்க்க , 5 நாள் பரோலில் வெளியே வந்தார். அவர் சென்னை வந்து, தி. நகரில் ஹபிபுல்லா ரோட்டில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் தங்கினார். மருத்துவ மனைக்கு சென்று தனது கணவரின் கைகளை பிடித்துக் கொண்டு, கண்ணீர் சிந்தினார்.

இந்த நிலையில், சசிகலாவின் சென்னை வருகை, தமிழக அரசியலிலும் சில மாற்றங்களையும், கேள்விக்குறிகளையும் ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜூ,. ”நான் சசிகலாவால் வளர்ந்தவன். இப்போது நான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருப்பதால், முதல்வரின் கருத்துக்கு மாறாக நான் என் கருத்தை தெரிவிக்க முடிய வில்லை. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கிறேன். தற்போதைய அதிமுக அரசு அமைய பெரும் பாடு பட்டவர், சசிகலா என்பதை யாரும் மறுக்க முடியாது” என்று தனது நிலையை விளக்கி இருக்கிறார்.

இந்த நிலையில், எடப்பாடி அணியிலுள்ள சிலிப்பர் செல்கள் இனி படிப்படியாக பேச தொடங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், இந்த சிலிப்பர் செல்கள், இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பதுடன் நின்று விடுவார்களா? அல்லது இவை சசிகலாவை திருப்தி படுத்த சொல்லப்பட்ட வார்த்தைகளா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தினகரன் கூறியது போல் தான் சிலீப்பர் செல் இல்லை என்று கண்ணீர் மல்க கூறினார். சசிகலா குறித்து தான் பேசியது தவறாக பெரிதாக்கப்பட்டுள்ளது என்ற அமைச்சர், எளிமையான முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆட்சி தொடரவேண்டும் என்று கூறினார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “செல்லூர் ராஜூ சிலிப்பர் செல் இல்லை. எடப்பாடி அணியில் இருக்கும் சிலிப்பர் செல்களின் பெயர்களை நான் எப்படி வெளிப்படையாக கூற முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கிடையில், அதிமுக செய்தி தொடர்பாளர் சி. ஆர். சரஸ்வதி, “தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி அமைந்ததில், சசிகலா ஆற்றிய பெரும் பங்கை மறுக்க முடியாது.” என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்.

சிறையில் இருந்து 5 நாள் பரோலில் சசிகலா வெளியே வந்துள்ள நிலையில், தமிழக அரசிலும், அதிமுக கட்சியிலும் சில அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. இந்த அதிர்வலைகள், பேரலைகளாக மாறுமா? என்பது கேள்விக்குறியே. பேரலைகளாக மாறாத பட்சத்தில், இந்த அதிர்வலைகளால் பயன் இல்லை.
இதற்கிடையில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஓ.எஸ். மணியன், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரும் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.”சசிகலா பரோலில் வந்தால், அவரை நான் சந்தித்து பேசுவேன்” என்று ஓ.எஸ். மணியன் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். ஆனால், சசிகலா பரோலில் வெளியே வந்தபின், அவரை ஓ.ஸ். மணியன் சந்திக்க வில்லை. இதில் பின்னணி தகவல்கள் ஏதும் இருக்கும் என்று அரசியலாளர்கள் கருதுகிறார்கள்.

இவர்கள் தவிர எடப்பாடி அணியில், மேலும் இரு கை விரல் எண்ணிக்கை அளவில் அமைச்சர்களும், நான்கு கை விரல் எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்களும் சசிகலாவுக்கு மறைமுகமாக ஆதரவாக இருப்பதாக கருதப்படுகிறது. அதாவது “சிலிப்பர் செல்”கள் என வர்ணிக்கப்படும் அவர்கள் சசிகலாவுடன் செல்போனில் பேசியதாகவும் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. இந்த நிலையில், சசிகலா பரோல் முடிந்து, மீண்டும் பெங்களூர் சிறைக்கு சென்று விட்டால், அதன் பின் அவரது ஆதரவு எம்.எல்.ஏ,க்கள் எப்படி இருப்பார்கள்? என்பதும் கேள்விக்குறியே.

இதற்கிடையில், நடராஜன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ அறையில், சசிகலா, தனகு கணவர் நடராஜன், டாக்டர் வெங்கடேஷ், பாஸ்கரன் உள்ளிட்டோருடன், தனது எதிர்கால திட்டங்கள் குறித்தும், அரசியல் நகர்வுகள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் தெரிய வருகிறது. அப்போது, நடராஜன் பேச முடியாத நிலையில் இருப்பதால், அவர் தனது கருத்துக்களை பேப்பரில் எழுதி காட்டியதாகவும், சைகை மூலம் விளக்கியதாகவும் தெரிய வருகிறது…!!!.

 
 
 
 

This post has been viewed 200 times