சத்தியம் பதில்கள்

 

( ராஜூ, சென்னை):
உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு., ஜி.எஸ்.டி. வரி அமல் போன்றவற்றால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறதே., சரியா?
எதிர்க்கட்சிகள் கூறுவதால், அது பொய்யாகி விடாது., அதே நேரத்தில் அதுவே உண்மையும் ஆகி விடாது. இதில் உண்மையான நிலை, பொருளாதார நிபுணர்களுக்கே தெரியும். அவர்களில் சிலர், அரசுக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கூறி வருவது வியப்பாக உள்ளது. உண்மையை தைரியமாக கூற யாருக்கும் துணிவில்லை..!!!.

( ராஜேஷ் செங்கை):
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அன்று கூறிய பன்னீர் செல்வம் இப்போது அமைதியாகி விட்டார். காரணம் என்ன?
அவரது கோரிக்கை படி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விட்டது. அவரும் துணை முதல்வராகிவிட்டார். எனவே அமைதியாக இருக்கிறார். எல்லாமே மக்களை ஏமாற்றத்தான் நடக்கிறது என்பதை மக்களும் புரியாமல் இல்லை.!!!.

( சிந்தனை சிற்பி, கூடலூர்):
அதிமுக-வில் தினகரன் அணியினரும் இணைந்து முழுமையான அதிமுக உருவாகுமா? அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? இல்லையா?
சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிய வில்லை. எல்லாமே “அம்பயர்”நினைத்தால் நடக்கும்.!!!.

( தாமஸ், நாசரேத்):
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் எப்படி இருக்கிறது? 100 ஆண்டுகள் வாழ்வாரா?
100 ஆண்டுகள் வாழ்ந்தால் மகிழ்ச்சி., எதுவும் நம் கையில் இல்லை. அவரது இத்தனை நாள் வாழ்வே சாதனைதான்.!!!.

( திருவாசகன், மதுரை):
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர், பன்னீர் அணியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்ய வில்லை?
அந்த கேள்வியைத்தான் ஸ்டாலின் கேட்கிறார். அவர் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. எல்லா நியாயங்களும், ஆளும் நிர்வாகத்துக்கு உள்பட்டது என்பதுதான் எழுதாத நடைமுறை சட்டம்.!!!.

( வெற்றி கொடியோன், சென்னை):
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சோனியா இறங்கி விட்டால், அடுத்து ராகுலா?பிரியங்காவா?
காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்றால் பிரியங்கா, தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும். ராகுல் தலைவரானால், இதே நிலை 2019 மக்களவை தேர்தலிலும் நீடிக்கும்.!!!.

( செங்கொடி, மதுராந்தகம்):
ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் தமிழக அரசியல் எப்படி இருக்கும்?
ஒரே குழப்பமாக இருக்கும். விஜய் மட்டும் ஏன் பாக்கியாக இருக்கிறார். அவரும் அரசியலில் குதித்து விட வேண்டியதுதானே? தேர்கல் களம் முழுவதும் சினிமா வாசனை மணக்கட்டுமே…!!!.

( தாமோதர், சென்னை):
எம்.ஜி.ஆருக்கு, ஜெயலலிதாவை ஒப்பிட முடியுமா? ஜெயலலிதாவுக்கு எடப்பாடி பழனிச்சாமியை ஒப்பிட முடியுமா?
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி என்று மேலிருந்து கீழாக மட்டுமே வரிசைப்படுத்த முடியுமே தவிர, எம்.ஜி.ஆருக்கு யாரையும் ஒப்பிட முடியாது.!!!.

 
 
 
 

This post has been viewed 95 times