18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில் நவ. 2-ல் விசாரணை

 

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில்
நவ. 2-ல் விசாரணை

தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேரை தகுதி நீக்கம்செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நவ. 2–ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Dinakaran_-newPTI

ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுக கட்சி, எடப்பாடி பழனிச்சாமி அணி, பன்னீர் செல்வம் அணி, சசிகலா -தினகரன் அணி என 3 அணிகளாக பிரிந்தது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது மெஜாரிட்டியை சட்டசபையில் நிரூபித்த போது, பன்னீர் செல்வம் அணியினரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய வில்லை. ஆனால், அதற்கு அடுத்த அரசியல் கட்ட நகர்வின் போது, தினகரன் அணியை சேர்ந்த 18 எம். எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையில், “ஒ.பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுக்குஎதிராக வாக்களித்த போது, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வில்லை. அவர்களுக்கு நோட்டீசை கூட சபாநாயகர் அனுப்ப வில்லை. ஆனால் எங்கள் தரப்பின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது., இதில் உள்நோக்கம் இருக்கிறது. எங்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு தவறானது” என்று தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து சபாநாயகர் தனபால் தரப்பில், ”ஆட்சியை கவிழ்ப்பேன் என்று தினகரன், தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் வெளிப்படையாக பேசினார்கள், எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்த தினத்தன்றே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சதித்திட்டம் தீட்டினர்” என்று ஆதாரங்களோடு வழக்கறிஞர் முதுல் ரோத்தகி வாதாடினார். சபாநாயகர் தரப்பில் விளக்கம் தர ஒரு மாதம் கால அவகாசம் தர நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சபாநாயகரின் உத்தரவினால் தாங்கள் அடையாளம் இல்லாமல் ஆகியுள்ளோம் என்றும், சபாநாயகர் தங்களுக்கு அளித்த விளக்க நோட்டிஸ் மீது நான்கு முறை ஆட்சேபனை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகருக்கு அளித்த புகார் கடிதம் குறித்து வெளியில் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்று கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார்.

இதனையடுத்து தினகரன் தரப்பில் ஊழலுக்கு துணைபோகும் முதல்வரை தான் எதிர்தோம் அரசை அல்ல என்று வாதிடப்பட்டது. அதன் பின் ஆட்சியை கவிழ்க்க தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சதி செய்தார்கள் என்று சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 9–ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

பின்னர் 9–ம் தேதிய விசாரணையின் போது, தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதற்கு தமிழக அரசின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அரசு தரப்பிலும்கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அக். 23–ம் தேதி கடைசி நாள் என்று நீதிபதிகள் அறிவித்து, நவ. 2–ம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்…!!!.

 
 
 
 

This post has been viewed 92 times