தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்… தொடரும் மரண ஓலங்கள்…

 

தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்…
தொடரும் மரண ஓலங்கள்…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மரண ஓலங்கள் அதிகரித்துள்ளன. நாளுக்கு நாள் சாவு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினமும் 10 பேர் வரை டெங்கு காய்ச்சலால் இறப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி இருக்கிறார்.

Dengue-Fever-1

சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில மாதங்களாகவே, டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 500 பேர் வரை இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறும் நிலையில், தமிழக அரசோ 85 பேர்தான் டெங்குக்கு பலியாகி இருப்பதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறுகிறார். மேலும் “தமிழகம் அமைதிப்பூங்கா”வாக திகழ்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி சமீபத்தில் பேசி இருக்கிறார். ஆனால் “அமைதிப்பூங்கா”வுக்கு பதிலாக தமிழகம்“ டெங்கு பூங்கா”வாக திகழ்கிறதோ என்று நினைக்கக் கூடிய அளவில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்துக்கு மேல் என்றும் தெரிய வருகிறது. அக். 9–ம் தேதி மட்டும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 18 பேர் இறந்துள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில், சேலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அருகே உள்ள துட்டம்பட்டியை சேர்ந்த ராஜா என்பவரின் 7 வயது மகள் சிவானி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு டெங்கு இருப்பது உறுதியானதும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவானி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கருப்பையாவின் 12 வயது மகள் அழகேஸ்வரி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2 மாதத்தில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 20–க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அக்.6-ம் தேதி திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரியின் உதய குமாரின் மகன் நந்த குமார் என்ற 21 வயது என்ஜினீயரிங் மாணவர் மதுரையில் தனியார் மருத்துவ மனையில் டெங்கு காய்ச்சலால் உயிர் இழந்துள்ளார். அன்று ஒரு நாள் மட்டும் 118 பேர் மருத்துவ மனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் என்பதும், அன்று மட்டும் 14 பேர் டெங்குவுக்கு பலியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஓமலூர் பகுதியில் மட்டும் இதுவரை டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து தமிழக அரசு தவறான தகவலை வெளியிடுவதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை ஸ்டாலின் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிக்சைகள் குறித்து கேட்டறிந்ததாக தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 400–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பது ஆதாரத்துடன் தன்னிடம் உள்ளதாக கூறினார். டெங்கு காய்ச்சலுக்கு தினமும் 10 பேர் உயிரிழக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கையை, தமிழக அரசு மூடி மறைப்பதாக குற்றம்சாட்டினார்.” டெங்கு காய்ச்சல் பரவாமல் முன்கூட்டியே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்., சாவு எண்ணிக்கையை தமிழக அரசு மறைப்பது, வெட்க கேடான செயல்” என்றும், ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

“மருத்துவ அவசர நிலையை தமிழ் நாட்டில் பிரகடனப்படுத்தி, டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு இன்னும் அதிதீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித்தலைவர் அன்பு மணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.டெங்கு காய்ச்சல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் தவறான தகவல்களை அளித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கலாகி இருக்கிறது.

இந்த நிலையில், “கோவை, சேலம் ,சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் பன்றி காய்ச்சல் இல்லை” என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சத்தியம் மின்னிதழ் நிருபரிடம் தெரிவித்துள்ளார்…!!!

டெங்கு அபாயம்..  நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாத கிராமமே இல்லை எனலாம். இதற்கு காரணம் சுகாதார குறைவு காணப்படும் இடங்களில் வளர்ச்சி பெறும் ஏ.டி.எஸ். என்ற வகை கொசுக்கள்தான். இந்த வைரஸ் தாங்கிய கொசு, கறுப்பு நிற கோடுகள் கொண்ட உடல்வாகு டன் இருக்கும். இந்த வகை கொசுக்கள், பகல் நேரத்தில் மட்டுமே மனிதனை கடிக்கும். அதிலும் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும்தான் கடிக்கும்.

கிராமங்களில் தேவையற்ற இடங்களில் தேங்கும் தண்ணீரில் இந்த கொசுக்கள் உற்பத்தியாகும். சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், வாளி, பிளாஸ்டிக் பக்கெட், டயர்களில் தேங்கும் தண்ணீர், திறந்த கிணறுகளில் இந்த வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும். சாதாரண தேங்காய் ஓட்டில் தேங்கும் தண்ணீரில் கூட டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே, இது போன்ற இடங்களில் தண்ணீர் தேங்காத நிலையை கண்காணித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வகை கொசுக்கள் நம்மை கடிக்காமல் இருக்க கொசு வலையை கட்டிக்கொண்டு படுத்து தூங்கலாம். கொசு வத்தி, கொசு விரட்டி போன்றவற்றையும் பயன் படுத்தலாம். இதற்கான களிம்பை, கை கால்களில் தடவிக்கொண்டு தூங்கலாம். டெங்கு காய்ச்சலுக்கான முதல் அறிகுறி, தலைலியுடன் கூடிய காய்ச்சல். வாந்தியும் இருக்கும். ரத்த அழுத்தம் குறைந்து காணப்படும். காய்ச்சல் 104 டிகிரி வரை இருக்கும்.

உடலில் சிவப்பு நிற தட்டுகள் போன்றவை ஏற்படும். முகம் சிவக்கும். சிலருக்கு பல் ஈறுகளில் ரத்த கசிவு காணப்படும். சிலருக்கு சருமத்தில் வேணற்கட்டிகள் அல்லது வெடிப்புகள் தோன்றும். பாதங்கள் மற்றும் உள்ளங்கை சிவந்து காணப்படும். இந்த வகை காய்ச்சல் சிறு நீரகத்தையும் பாதிக்கும். சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், உயிர் சேதம் ஆகி விடும். இதற்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற்று விட வேண்டும். ஐ.ஜி.எம்., எலிசா, பி.சி.ஆர். போன்ற பரிசோதனைகள் மூலம் டெங்கு காய்ச்சலை மருத்துவர்கள் உறுதி படுத்துவார்கள்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறையும். இதனை ஈடு செய்ய அதிக அளவு இளநீர், கஞ்சி, உப்பு கரைசல், நீராகாரம் போன்றவற்றை சாப்பிட வேண்டும். சரியான படி இந்த வகை காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்தால் 7 நாளில் குணம் கிடைக்கும். உடல் சோர்வு, உடல் வலி போன்றவை குணமாக மேலும் ஒரு வாரம் ஆகும்.

டெங்கு காய்ச்சலின் முதல் அறிகுறியே, இவ்வகை கொசுக்கள் கடித்து ஒரு வாரம் ஆன பின்தான் தெரிய வரும். ஆங்கில மருத்துவம் அரசு மருத்துவ மனைகளில் அளிக்கப்படுகிறது. இதனைத்தவிர சித்த மருத்துவத்தில், நிலவேம்பு கஷாயம், மலை வேம்பு கஷாயம் போன்றவற்றை தினம் மூன்று வேளை குடித்தால் டெங்கு காய்ச்சலில் இருந்து விடுதலை கிடைக்கும். பப்பாளி இலையை பாலுடன் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து, சற்று சீனி கலந்து குடிக்கலாம். இதனால் ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். முடக்கத்தான் கீரையும் நல்ல மருந்தாக உள்ளது.

மலை வேம்பு, நில வேம்பு, அளரி, வேப்ப இலை, பப்பாளி இலை போன்றவற்றை பயன்படுத்தினாலும் நிவாரணம் கிடைக்கும்.

மொத்தத்தில், எந்த வகை காய்ச்சலாக இருந்தாலும், உடல் சூடாக காணப்பட்டால் உடனே மருத்துவ மனைக்கு சென்று, அது டெங்கு காய்ச்சலா? என்பதை உறுதி படுத்த வேண்டும். அதே நேரத்தில் நில வேம்பு கஷாயமும், பப்பாளி இலை சாறும் குடிக்க தொடங்கி விடலாம்.

அரசு மருத்துவமனைகளில் 24ஜ்7 சேவையாக காய்ச்சல் புற நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வசதி அரசு மருத்துவமனைகளில் உள்ளது.

அதிவேகமாக ஒரு நிமிடத்தில் ரத்த பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ளும் மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. .பலருக்கு காய்ச்சல் விட்ட பின்னரும் தலை சுற்று, கிறுகிறுப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை மீண்டும் அணுக வேண்டும்…!!!.

 
 
 
 

This post has been viewed 122 times