டெங்கு காய்ச்சலை, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏன் சேர்க்க வில்லை?

 

டெங்கு காய்ச்சலை, மருத்துவ காப்பீட்டு
திட்டத்தில் ஏன் சேர்க்க வில்லை?

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதை முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏன் சேர்க்கவில்லை?” என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், டெங்கு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வரும் 13–ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

preview copy

தமிழகத்தில், டெங்கு காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 10 பேர் டெங்கு காய்ச்சலால் இறப்பதாகவும், இதுவரை 10,000–க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர உத்தரவிட கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “டெங்குவுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு உள்ளதா? டெங்குவை முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏன் சேர்க்கவில்லை?” கேள்வி எழுப்பினர். மேலும் டெங்குவை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுகுறித்து வரும் 13–ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், “முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு இதுவரை 4 ஆயிரத்து 714 பேருக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசு அங்கீகரித்த 870 மருத்துவமனைகளில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என அவர் விளக்கம் அளித்தார். சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தால், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலியான மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அவர் எச்சரித்தார்…!!!.

 
 
 
 

This post has been viewed 93 times