தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 450 பேர் வரை பலி

 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 450 பேர் வரை பலி

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த “மருத்துவ அவசர நிலை” பிரகடனம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

images

 

32 மாவட்டங்களிலும் பரவியுள்ள டெங்கு காய்ச்சல் குறித்து, சத்தியம் மின்னிதழ் செய்தியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு, கோவையில் 40 பேரும், நெல்லையில் 20 பேரும், திருவள்ளூரில் 40 பேரும், கடலூரில் 33 பேரும் பலியாகி உள்ளனர். மொத்தத்தில், இதுவரை 366 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

dengue-outbreak_21863049-5b17-11e5-ac8c-005056b4648e

இதனையும் தவிர தனியார் மருத்துவ மனைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100–ஐ தாண்டும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். எனவே ஒரு மாதத்தில் “டெங்கு”க்கு 450-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவ மனைகளிலும், தனியார் மருத்துவ மனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனையும் தவிர டெங்கு அறிகுறியுடன் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாக தெரிய வருகிறது. மேலும் இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போடியில் டெங்கு காய்ச்சலுக்கு 8 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார. துறையூரை அடுத்த மாராடியில் பெண் ஒருவரும், திருத்தணி பூண்டி மாங்காட்டில் 8 வயது சிறுவனும் டெங்குவுக்கு இரையாகி உள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ”டெங்குவில் 3 நிலைகள் உள்ளன. இதில் 3–வது நிலை மிகவும் மோசமானது. எனவே மக்கள் உஷாராக, காய்ச்சல் ஏற்பட்டாலே, உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். மேலும் இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும். எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், அதிக அளவில் தண்ணீர் கலந்த உணவுகள், இளநீர் போன்ற திரவ உணவுகள் சாப்பிட வேண்டும்” என்றும் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், “டெங்கு விவகாரத்தில் அரசு முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக இருக்கும் ஏ.டி.எஸ். கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதிகளை, சென்னையில் தொற்றுநோய் தடுப்பு இயக்கக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை கிண்டி. புதுப்பேட்டை, பார்டர் தோட்டம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கியுள்ளதும், டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருள்களில் தண்ணீர் தேங்கி, அதில் டெங்கு பரப்பும் கொசுக்களின் முட்டைகள், புழுக்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது. சென்னை கிண்டி தொழிற்பேட்டை பகுதிகளில் டெங்கு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, அந்த பொருட்களை அகற்ற 20,000 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் தங்கள் கடைகளின் முன் தேங்கியுள்ள பொருட்களை அகற்றாவிட்டால், இந்திய தண்டனை சட்டம் 269-ன் கீழ் 6 மாத சிறையோ அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதமோ விதிக்கப்படும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், நிலவேம்பு கஷாயத்தை தினமும் 3 வேளை சாப்பிட வேண்டும் என்றும், பப்பாளி இலைச்சாற்றை தினமும் 3 வேளை குடிக்க வேண்டும் என்றும் சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்…!!!.

 
 
 
 

This post has been viewed 140 times