டெங்கு ஒழிப்பில் தமிழக அரசு கடமை தவறுகிறதா?

 

டெங்கு ஒழிப்பில்
தமிழக அரசு கடமை தவறுகிறதா?

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், கிராமம் முதல் நகரம் வரை பரவி இருக்கிறது. இதனால் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள், முதியவர்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் 40 பேர்தான் இறந்துள்ளதாகவும், அறியப்படாத காய்ச்சல் காரணமாக 80 பேர் இறந்துள்ள விசயம் 12 ஆயிரம் பேர் வரை அரசு மருத்துவ மனைகளில் உள் நோயாளிகளாகவும்.

Map_of_Tamil_Nadu_districts.svg copy

வெளி நோயாளிகளாகவும் இருப்பதாக, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 500 பேர்வரை இருக்கும் என்றும், பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

2015–ம் ஆண்டு முதல் பிரேசில், மெக்சிகோ, வெனிசுலா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 18 நாடுகளில் டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி போடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்சில், இந்த வகை ஊசி, தேசிய தடுப்பூசி திட்டத்திலேயே சேர்க்கப்பட்டு, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், இந்த வகை ஊசியை பயன் படுத்த மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில், கிராமப்புற ஏழை குடும்பத்தினர்தான் பெரிதும் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். காரணம், அவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதும், காய்ச்சல் ஏற்பட்டதும், நகர பகுதிக்கு சென்று அதற்குரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள போதிய நிதி ஆதாரம் அவர்களிடம் இல்லை என்பதுதான்.

இப்போதுள்ள நிலையில், அரசு மருத்துவ மனைகளில் ஏராளமான டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால், அவர்கள் படுக்க போதிய படுக்கைகள் இல்லாமல், நோயாளிகளை வராந்தாக்களிலும், தரையிலும் படுக்க வைக்கும் அவல நிலைதான் காணப்படுகிறது. இந்த நிலையை மாற்ற கூடுதல் “டெங்கு வார்டுகள்” ஏற்படுத்தப்பட வேண்டும்.

வசதியுள்ளவர்கள், தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று விலை உயர்ந்த மருந்து–மாத்திரைகளை சாப்பிட்டு, சீக்கிரம் குணம் அடைந்து விடுகிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் ஏழைகள் தான், பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஏழைகளுக்கு, அரசு மருத்துவ மனைகளில் நல்ல சிகிச்சை கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதே நேரத்தில் ஏழைகளிடம், மருத்துவ மனை ஊழியர்கள் கை நீட்டாமலும் இருக்க வேண்டும். எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி, மருத்துவ மனை ஊழியர்களும் பணியாற்ற வேண்டும். மேலும் அரசு மருத்துவ மனைகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கி வரும் வெளி நோயாளிகள் பிரிவை, 24 மணி நேரமும் இயங்க அரசு உத்தரவிட வேண்டும்.

அப்போதுதான், காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்களிடம், “எந்த நேரத்தில் அரசு மருத்துவ மனைக்கு சென்றாலும் சிகிச்சை பெற முடியும்” என்ற நம்பிக்கை ஏற்படும்.
மொத்தத்தில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் கடமை, தமிழக அரசுக்கு உள்ளது. அந்த கடமையை நிறைவாக செய்ய வேண்டும் என்பதே, அனைத்துக்கட்சி தலைவர்களின் விருப்பமாகவும், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது…!!!.

 
 
 
 

This post has been viewed 96 times