டெங்கு காய்ச்சலுக்கு பெண் வக்கீல், என்ஜினீயர், கல்லூரி மாணவி பலி

 

டெங்கு காய்ச்சலுக்கு
பெண் வக்கீல், என்ஜினீயர், கல்லூரி மாணவி பலி

டெங்கு காய்ச்சலுக்கு, பெண் வக்கீல், என்ஜினீயர், கல்லூரி மாணவி பலியாகி இருக்கிறார்கள்.

maxresdefault

தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்தை சேர்ந்த 37 வயதான வக்கீல் கவிதா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து, ஆற்றுபாலம் பகுதியில் இருந்து பேரணியாக சென்று, தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு 4 சாலைகளையும் மறித்து 2 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

“டெங்குவை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசு, ராஜினாமா செய்ய வேண்டும், தஞ்சை ஆட்சியர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என கோரிக்கை வைத்து, தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து வக்கீல்களுடன் மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் வந்து பேச்சு நடத்தினார். இதனைத் தொடர்ந்து 2 மணி நேரமாக நடந்த போராட்டத்தை, வக்கீல்கள் விலக்கி கொண்டனர்.

61078090

கடலூர் புது வண்ணாரப்பேட்டை சேத்தியா தோப்பு ஒரத்தூரை சேர்ந்த முத்தழகன் என்ற என்ஜினீயர் சென்னையில் வேலை பார்த்து வந்தார். இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இது போல போடி நாயக்கன் பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்திரியும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். அக். 10–ம் தேதி மட்டும் டெங்குக்கு தமிழகத்தில் ஒரே நாளில் 11 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

திருத்துறைப்பூண்டி அருகே வேலூர் கிராமத்தை சேர்ந்த யேசுதாஸ் என்பவரின் மனைவி சண்முகசுந்தரி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். திருமணத்துக்குப் பிறகு செவிலியர் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சண்முகசுந்தரி சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சண்முகசுந்தரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்…!!!

மத்திய குழு சென்னை வந்தது….!
டெங்கு பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு…

தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தது. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு, டெங்கு பாதிப்புகள் குறித்து, மருத்துவ மனைகளில் நேரடி ஆய்வை மத்திய குழு மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்குவால் 500–க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் கூறும் நிலையில், 40 பேர்தான் இறந்துள்ளனர் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ள அறிக்கையில், “28 பேர்தான்இறந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழகத்தில் டெங்கு பாதிப்புகளை ஆராய்ந்து தடுக்கும் வகையில், மத்திய குழுவை தமிழகம் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு கோரியது.

இதனையடுத்து மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையில் கல்பனா, வினய் உட்பட 5 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர் சென்னை வந்துள்ளனர். இவர்கள் தலைமை செயலகத்தில் நடைபெற்ற அரசு செயலாளர் கூட்டத்திற்கு பின்னர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், “தமிழகக்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிக்கு ரூ.256 கோடி தேவை என்று மத்திய குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மருத்துவ குழு தலைவர் டாக்டர் அஸ்தோஸ் விஸ்வாஸ், “டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை. இந்த காய்ச்சலுக்கு அரசு மருத்துவ மனைகளில் தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு பணியில், மக்களுக்கும் பொறுப்பு உண்டு. சென்னையில் அரசு மருத்துவ மனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவ மனைகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு குறித்து, மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

முன்னதாக, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து, பேசிய போதும், தமிழகத்துக்கு டெங்கு பாதிப்பு பற்றி ஆய்வு செய்யவும், சிகிச்சை அளிக்கவும் மத்திய மருத்துவ குழுவை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார்.

பிரதமரை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம், “என்னுடன் ஆலோசித்த பிறகே, முதல்வர் பழனிச்சாமி, முக்கிய முடிவுகளை மேற்கொள்கிறார். எனக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடோ, வருத்தமோ இல்லை” என்றார். துணை முதல்வராக பதவி ஏற்ற பின்னர் பன்னீர் செல்வம் ,பிரதமரை சந்திப்பது இது முதல் முறையாகும் என்பது குறிப்பிடத் தக்கது…!!!
டெங்கு எண்ணிக்கையில்

2012-ம் ஆண்டை முறியடிக்குமா, 2017?

2012–ம் ஆண்டில், தமிழகத்தில் 12,826 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை, 2017–ம் ஆண்டு முறியடிக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், மரணத்தின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டெங்கு என்ற அரக்கன், தமிழகத்தில் குழந்தைகளை கூட விட வில்லை. குழந்தைகளைத்தான், இந்த வகை காய்ச்சல் மிகவும் எளிதாக பற்றிக்கொள்கிறது. காரணம், குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான். இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், சொல்லொணா அவதிக்கு உள்ளாகிறார்கள். கடுமையான வலி, வயிற்று வலி, தலைவலி மூட்டு வலி, உடல் வலி, வாந்தி போன்ற அனைத்து நோவுகளையும், இந்த டெங்கு காய்ச்சல் கொடுத்து விடுகிறது.

இந்த வகை காய்ச்சலுக்கு என்று, தனியாக மருந்து, மாத்திரைகள் கிடையாது. என்றாலும், இப்போதைய நவீன மருத்துவ காலத்தில், மருத்துவர்கள் சில வகை மருந்துகளை கொடுத்து காய்ச்சலை குறைக்கிறார்கள். என்றாலும் சித்த மருத்துவத்தின் படி, நிலவேம்பு கஷாயமும், பப்பாளி சாறும் மருந்தாக குடித்து வருகிறார்கள். இதில் குணமும் கிடைக்கிறது. இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிக அளவு சத்தான நீர் உணவுகள் சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தமிழ் நாட்டில் 2010–ம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் 2,051 பேர்களும், 2011–ம் ஆண்டில் 2,501 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2012—ம் ஆண்டு 12,826 பேர்களும், 2013–ம் ஆண்டு 6,122 பேரும், 2014–ம் ஆண்டில் 2,804 பேரும், 2015—ம் ஆண்டு 4,535 பேரும், 2016—ம் ஆண்டு 2,521 பேர்களும் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்த புள்ளி விவரத்தை பார்த்தால் 2012–ம் ஆண்டில்தான் டெங்குவுக்கு அதிக மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அதே ஆண்டில்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி டெங்குவுக்கு 66 பேர் பலியானதாக அறிக்கை கூறுகிறது. இந்த நிலையில் 2017—ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் 10—ம் தேதி வரை தமிழகத்தில் டெங்குவால் 11,744 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் 40 பேர் இறந்ததாகவும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்போது டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில், 2012–ம் ஆண்டை 2017-ம் ஆண்டுமுறியடித்து விடுமோ? என்ற கேள்விக்குறியும் எழுகிறது.

தற்போது திருவள்ளூர். காஞ்சீபுரம், சென்னை, நாமக்கல். சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில்தான் டெங்குவின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனைத்தவிர சென்னையிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கூட டெங்குவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் தங்கள் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்வோம். அரசுடன் இணைந்து மக்களும், பொது நல அமைப்புகளும் செயல்பட்டால், டெங்கை முதலில் கட்டுப்படுத்தலாம்., அடுத்து அதனை முழுமையாக ஒழிக்கலாம்.

இந்த நிலையில், முதல் அமைச்சரின் காப்பீடு திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சூரிய பிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது….!!!

நில வேம்பு கஷாயம் பற்றி
தெரிந்து கொள்ளுங்கள்…

டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் இருக்க, அல்லது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து இப்போது மக்களிடம் நிலவி வருகிறது.

ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு நில வேம்பு கஷாயம் கொடுக்க கூடாது. முதலில் காய்ச்சல் ஏற்பட்டால், அது எந்தவகை காய்ச்சலாக இருந்தாலும் சரி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கஷாயம் எடுத்துக் கொள்வது நல்லது. 3 வயது முதல் 12 வயதுள்ளோருக்கு 30 மல்லி அளவில் கொடுக்கலாம். பெரியவர்கள் 60 மில்லி வரை சாப்பிடலாம். காலை, மாலை என குறைந்த பட்சம் 3 முதல் 5 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நிலவேம்பு கஷாயம் குடித்தாலும், தங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் எந்த வகை காய்ச்சல்? என்பதை மருத்துவர்களிடம் சென்று ரத்த பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள், மருத்துவர்களின் அறிவுரையின் பேரில்தான் நிலவேம்பு கஷாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நிலவேம்பு கஷாயம், சர்க்கரையின் அளவை மிகப்பெரிய அளவில் குறைத்து விடும். நாட்டு மருந்து கடைகளிலும், ஆங்கில மருந்து கடைகளிலும், நிலவேம்பு பொடி பாக்கெட்டில் கிடைக்கிறது. இதில் தரமானவற்றை வாங்கி பயன் படுத்த வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு நடுத்தர தரத்திலுள்ள கரண்டியில் ஒரு கரண்டி போடலாம். அதனை பாதியாக குறைந்த பின்,அதனை எடுத்து ஆற வைத்து குடிக்கவும். இது அதிக அளவில் கசப்பாக இருப்பதால், அத்துடன் சிறிய அளவில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இதனை உடனுக்குடன் தயாரித்து குடிப்பதே நல்லது.

டெங்கு காய்ச்சலை, சித்த மருத்துவர்கள் “பித்த ஜூரம்“ என்று அழைக்கிறார்கள். இந்த வகை காய்ச்சலுக்கு கசப்பும், குளிர்ச்சியுமே மருந்து.

எனவே, இந்த வகை காய்ச்சல் ஏற்பட்டால், இனிப்பு வகைகளை சாப்பிடக் கூடாது. பாகற்காய் ,மிளகு போன்றவற்றை அதிகம் பயன் படுத்தலாம். எண்ணை உணவுகளையும், மாமிச உணவுகளையும் தவிர்க்க வேண்டும்..

மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் படுவோரின் உடலில் நீர்ச்சத்து குறைந்து கொண்டே இருக்கும். எனவே, நீர்ச்த்து குறைவை போக்க, அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அரிசி கஞ்சி, பார்லி கஞ்சி, தானிய கஞ்சி போன்ற எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய நீர் ஆகாரங்களை சாப்பிட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் ஏற்படும் போது, இந்த வகை காய்ச்சல், நமது உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடுகிறது. இதனால் நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. இதனை போக்க, பப்பாளி இலையை மிக்சியில் போட்டு கூழாக்கி, அதனை வடி கட்டி சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். பப்பாளிகாய், மற்றும் பப்பாளி பழங்களையும் சாப்பிடலாம்…!!!.

 
 
 
 

This post has been viewed 507 times