அரசியலில் பெண்கள்…!!!

 

அரசியலில் பெண்கள்…!!!

இந்த வார “இனியவளே உனக்காக” பகுதியில், “அரசியலில் பெண்கள்” என்ற தலைப்பில் சில கருத்துக்களை பார்க்க இருக்கிறோம். நமது நாடு சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த சுதந்திரத்தை பெற நாம் கடந்த தூரம் மிக அதிகம்.

Mixed race businesswoman speaking at podium

தேசப்பிதா காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்களையும், ஆயிரக்கணக்கில் தொண்டர்களையும், இந்த சுதந்திரத்துக்காக நாம் பலி கொடுத்து இருக்கிறோம். சுதந்திரத்துக்கு பின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் சேர்ந்தே பார்த்து வருகிறோம். இந்த மக்களாட்சியின் அரசியல் நடைமுறைகளில் மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் அரசியல் ஈடுபாடு எத்தகையது? எத்தனை பேர் அரசியல் வானில் மின்னியிருக்கிறார்கள்? என்று பார்ப்போம்….

சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டிட் போன்ற பல பெண்கள் கவர்னர் பொறுப்பிலும், சுசேதா கிருபளானி, உத்திரபிதேசத்திலும் நந்தினி சத்பதி ஒடிசாவிலும் முதலமைச்சர்களாகவும் பணியாற்றியிருந்தாலும் கூட வாழ்க்கையின் கடை நிலையில் இருக்கும் பெண்கள் இன்றும்கூட அரசியலிலிருந்து விலகியே இருக்கின்றனர் என்பதே உண்மை.

இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஜெயலலிதா போன்றவர்களையும் நாம் குறிப்பிடலாம். ஆனால் இவர்கள், அரசியலில் குறிப்பிட்ட ஒரு மேலான தகுதியை பெற அவர்கள் போராடிய போராட்டம், அவர்களுக்குத்தான் தெரியும்.

அரசியல்வாதியாக ஒரு பெண் உருவாவது ஒரு கட்டம். அதே நேரத்தில் ஓட்டுப் போடும் உரிமைக்கே பல நாடுகளில் பெண்கள் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். நமது நாட்டில் பெண்களைச் சக மனுஷியாக அங்கீகரித்ததில், மதராஸ் மாகாணம் முதலிடம் பிடித்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் இருந்த மதராஸ் மாகாணத்தில், 1921- லேயே பெண்களும் ஓட்டளிக்கலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சொத்து வைத்துள்ள பெண்களுக்குத்தான் ஓட்டுரிமை.

யாருக்கு குறிப்பிட்ட அளவு சொத்து இருக்கிறதோ., யார் குறிப்பிட்ட வரி செலுத்தி இருக்கிறார்களோ, அவர்கள் மட்டுமே ஓட்டுப் போடலாம் என்ற நிலை. ஆனால், இங்கிலாந்தில் 1928–ம் ஆண்டுதான் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? 1944–ம் ஆண்டு பிரான்ஸிலும், 1945–ம் ஆண்டு இத்தாலியிலும் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கும் மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியிருக்கிறது.

“அரசியலில் இறங்கினால் பெயர் கெட்டுவிடும். எங்கள் குடும்பத்தினரே எங்கள் ஒழுக்கம் பற்றிய பல பிரச்சினைகளை எழுப்புவார்கள், மரியாதை கிடைக்காது, அரசியலில் இறங்க பெரிய பணக்காரக் குடும்பமாக இருக்கணும்” இவைதான் பெரும்பாலும் முற்காலத்தில் பெண்களிடம் இருந்து வந்த பதில்கள். அவர்கள் சொல்வதிலும் முன்பு உண்மை இருந்தது.

இன்றைய அரசியல் வானில் மின்னும் பல பெண்கள் பலமான பின்னணி கொண்டவர்கள்தான். செல்வாக்கு மிக்க குடும்பம், நிறையப் படிப்பு, சமூக அங்கீகாரம், போதுமான அளவு பணம் இவை அமைந்த பெண்களே அரசியலில் ஈடுபட்டு பதவிகளுக்கு வர முடிகிறது. சில இடங்களில் மேயர், பஞ்சாயத்துத் தலைவர், கவுன்சிலர் போன்ற பதவிகளை ஒதுக்கீட்டின் அடிப்படையில் பெண்கள் வகிக்கிறார்கள்தான். ஆனால், அவர்கள் கணவன் அல்லது உடன் பிறந்தவர்களால் ஆட்டுவிக்கப்படும் பதுமைகளாக விளங்குகிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ்ப் பெண்கள் வீட்டைச் சார்ந்தே சிந்திக்கப் பழக்கப்பட்டவர்கள். ‘ஐயோ…! அதெல்லாம் பெரிய சமாச்சாரம்…! நான் பொம்பளை.. என்னால என்ன செய்ய முடியும்?’ என்ற மனப்பான்மை படித்த, வேலைக்குப் போகும் பெண்களிடமும் காணப்படுகிறது. பெண்ணுக்கான ஒழுக்கக் கோட்பாடுகள் வேறு, ஆண்களுக்கான ஒழுக்கக் கோட்பாடுகள் வேறு என்று இந்தச் சமூகம் நிர்ணயித்திருக்கிறது. பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்படுவதே இல்லை. அவர் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் சரி மரியாதை கிடைக்காது.

உதாரணமாக, ஒரு ஆண் அரசு அதிகாரியாக இருந்து நல்ல விதமாகச் செயல்படுகிறார் என்றால், “அவரு ரொம்ப நாணயமானவருங்க…! லஞ்சம் வாங்க மாட்டார்” என்று பேசும் சமூகம் அதையே ஒரு பெண் செய்யும்போது, “அது ரொம்ப நல்லதுங்க…! லஞ்சம் வாங்காது…!” என்று அஃறிணையில்தான் குறிப்பிடுகிறார்கள்.
பெண்கள் அரசியல் களத்தில் நுழைந்தால் அக்கம் பக்கத்தவரால் புறக்கணிக்கப்படும் நிலை இருக்கிறது. இத்தனை பின்னடைவுகள் பெண்களுக்கு இருப்பது தெரிந்தும் 33% இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு தயங்குகிறது. காலம் காலமாகப் பெண்ணைப் பூட்டிவைத்த ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது. பெண்ணுக்கு உரிமை அளித்தால் அவள் வீட்டை ஒதுக்கி விடுவாளோ.. தன்னைத் தாண்டிச் சென்றுவிடுவாளோ.. என்ற அச்சத்தின் விளைவே இது. இந்த நிலை மாற வேண்டும்.

அந்தப்புரம் இருந்த காலத்தில் கூட பெண்கள் அரசியலில் சாணக்கியர்களாக, வழிநடத்தும் ஆசான்களாக, அரசர்களுக்கு திகழ்ந்தனர். அறிவியலை நோக்கி செல்லும் இக்காலத்தில், அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறைவாகவே இருக்கிறது. பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதால், அரசியல் எளிதானது அல்ல என்கின்றனர் ஒரு சாரார். பிரசவ நேரத்தின் வலி தாங்கும் மனஉறுதி படைத்த பெண்கள், அரசியலை சமாளிக்க முடியாதா? என்கின்றனர் மற்றொரு சாரார்.
பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீட்டிற்கே இப்போதும் போராட வேண்டியுள்ளது. ஒரு குடும்பத்தை பராமரிக்கும் திறமையுடைய பெண்களால், நாட்டையும் நிர்வகிக்க முடியும். அரசியலில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், சபாநாயகர் மீராகுமார் சாதித்து இருப்பதை நினைவு கூற விரும்புகிறேன்.

குடும்பத்தில் மந்திரிகளே பெண்கள் தான். திட்டமிடல், பெண்களிடம் உள்ளதால் தான் சிறந்த நிர்வாகிகளாக இருக்கின்றனர். பெண்களுக்கு உள்ள தடைகளை மீறி, பல பெண் அரசியல்வாதிகள் சாதித்துள்ளனர். அரசியல் மட்டுமல்ல அனைத்து துறைகளுமே எளிதானது தான்.

பெண்களுக்கு அரசியலில் போட்டியிடும் உரிமை உள்ளது. உரிமைகளை கேட்டுப் பெற வேண்டும். பெண்களுக்கு இளகிய மனது. கடினமான, திடமான மன உறுதியுடைய பெண்கள்தான் அரசியலில் வெற்றி பெற இயலும். பெண்களிடம் நிர்வாகத் திறமைகள் இருந்தாலும், அதை வெளிப்படுத்த விடாமல் ஆணாதிக்கத்தினர் தடுத்து வருகின்றனர். பெண்களிடம் பொறுப்புகளை கொடுத்து பாருங்கள்… அரசியலையே மாற்றிவிடுவோம்.

சில இடங்களில், பெண்களின் தவறுகள் பூதாகரமாகவும், ஆண்களின் தவறுகள் சாதாரணமாகவும் பார்க்கப்படுகின்றன. சில பெண்களின் நடவடிக்கைகள் நெளிவு, சுளிவு இல்லாத நேர்மையான பாதையாக இருக்கும். ஆண்கள் சந்தர்ப்பங்களுக்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றி கொள்கின்றனர்.

பெண்கள் தூய்மையான அரசியலை தர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், ஆண் சமுதாயம் தடையாக உள்ளது. என்றாலும், அரசியலில் பெண்களாலும் சாதிக்க முடியும். இதற்கு பெண்ணே…! நீயும் விலக்கல்ல., நீ உன் வீட்டை வழி நடத்துவது போல், உன்னைச்சார்ந்த பெண்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்து, சேவை செய்.
அதனைத்தொடர்ந்து இந்த நாட்டுக்காக அரசியலில் இருக்கும் ஊழல்களையும், நேர்மையற்ற செயல்களையும் தடுத்து நிறுத்த வேண்டியது உன் கடமையாகவும் இருக்கிறது.

நேர்மையான அரசியல் அமைப்பு உனக்கு வழிகாட்டும். நீயும் பெண்களுக்கு நல்ல வழிகாட்டியாக, சிறந்த பெண் தலைவியாக உருவாக வேண்டும். இதுவே நீ, இந்த நாட்டுக்கும், பெண்ணினத்துக்கும் செய்யும் புனித சேவையாகும், இனியவளே…!!!.

 
 
 
 

This post has been viewed 167 times