விலை உயர்ந்தாலும், விற்பனை குறைய வில்லை…!!!

 

“குடி குடியை கெடுக்கும்”

விலை உயர்ந்தாலும், விற்பனை குறைய வில்லை…!!!

கடந்த வாரம் தமிழக அரசு விற்கும் மது பாட்டில்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண ரக மது ரூ. 10 முதல் உயர் ரக மது ரூ.150 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றாலும், மதுக்கடைகளில் மது பாட்டில்கள் வாங்குவோரின் கூட்டம் குறைய வில்லை. இந்த விலை உயர்வு மூலம் தமிழக அரசுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இந்த பணம் தான் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாகவும், மக்களுக்கு இலவசங்கள் வழங்கவும் பயன் படுத்தப்படுகிறது.

16THTASMAC (1)

இந்த நிலையில், குறைந்த செலவில் அதிக போதை நாடி கள்ளச் சாராயம் குடித்து, கண் இழந்து உறுப்புகள் செயலிழந்து எத்தனை குடும்பங்கள் தவித்து நிற்கின்றன என்பதை நாம் அவ்வப்பொழுது பத்திரிகைகளில் பார்க்கிறோமே? அதைத் குடித்தும் மரத்துப் போய் போதையின் அளவு குறையக் குறைய, தூக்க மாத்திரைகளை சிலர் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.

பின்னர் தூக்க மாத்திரைகளை அதிகம் போட்டும் அவற்றாலும் பயனின்றிப் போக அடுத்த கட்டமாக போதையை இன்னும் அதிகம் நாடி போதை மருந்துகளை ருசி பார்க்க முயலுகிறார்கள்.

இவ்விதம் குடிகாரனின் போதை உணர்வு அதிகமாகிக் கொண்டே போய் ஒரு வெறியாய் மாறிவிடும். கடைசியில் “கோமா” என்னும் நிலைக்குப் போய் விடுவோரும் உண்டு.

உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது. மனம் கட்டுப்பாடாக இருந்தால், சூழ்நிலை படு மோசமானதாக இருந்தாலும், மனக் கட்டுப்பாடு கொண்டவர்களை யாராலும் குடிகாரனாக்க முடியாது. குடிகாரர்கள் மத்தியிலும் கூட ஒழுக்கத்தில் உயர்ந்தவராக வாழலாம். எனவே மனக் கட்டுப்பாட்டுடன் மதுவை வெறுக்க வேண்டும்.

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும், புகைத்தலும் இன்றைய இளைஞர் மற்றும் யுவதிகள் மத்தியில் ஒரு பேஷனாக மாறிவிட்ட நிலையில், விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில், மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஏதாவது கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வருமாறு, இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தால், ஒயின், பீர், விஸ்கி, பிராந்தி கிடைக்குமா? என்று கேட்டுக்கொண்டே மேற்படி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு பலர் ஒன்றுகூடும் களியாட்ட நிகழ்வுகளில் மது அருந்துதல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது என்பதுடன், மது அருந்தாது விடுபவர்களை “பட்டிக்காடு” என்று நோக்கும் நிலையும் வந்துவிட்டது.

ஆனால், இவற்றால் எமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களை எவரும் சிந்தித்துப் பார்பதுமில்லை. அவ்வாறு சிந்திப்பவர்களின் புத்தியையும் மது என்ற பானம் மயக்கி விடுகிறது.

மது அருந்துதல், புகைத்தல் மற்றும் வெற்றிலையுடன் பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு சேர்த்து உண்ணுதல் இந்த மூன்றும் நமது உடலுக்கு பாதகமானவையாகும்.

அளவுக்கதிகமான மதுபான வகைகளை குடிப்போருக்கு நரம்புத்தளர்ச்சி, பாலியல் குறைபாடு, ஈரல் கரைதல் போன்ற நோய்களும், புகைப்பவர்களுக்கு சுவாசப் புற்றுநோய், நரம்புத்தளர்ச்சி, பாலியல் குறைபாடு போன்ற நோய்களும் வெற்றிலையுடன், புகையிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு வாய்ப்புற்றுநோயும் ஏற்படுகின்றன.

இது தவிர, மது குடிக்கும் ஒருவர் புகைப்பிடிக்கும்போது, அருகிலுள்ளவர்களும் தன்னிச்சையாக புகையை சுவாசிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு புகையிலையை புகைக்கும் அருகில் இருப்போரும் பாதிக்கப் படுகிறார்கள். இதனால் அவர்களுக்கும் உடல் நலக்குறைவு ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.

குடி பழக்கத்திற்கு ஆளாகும் பணக்கார குடும்பத்தினரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு பணம் இருப்பதால், மதுவால் ஏற்படும் நோய்களுக்கு அவர்களால் வைத்தியம் பார்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால், ஏழை குடிகாரன் என்ன செய்வான்? மிகவும் தரம் குறைந்த மதுவை குடித்து விட்டு, நோயையும் வாங்கிக்கொண்டு, நோய்க்கு சிகிச்சை பெற பணமும் இன்றி கஷ்டப்படுகிறான். இறுதியில் அந்த நோய்க்கே அவன் பலியாகி விடுகிறான்.

இன்னொரு வேதனையான விஷயம் என்ன வென்றால், இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் மது அருந்திக்கொண்டிருந்தனர். தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

சொல்லப்போனால், சில மலை கிராமங்களில் சாதாரண ஏழை குடும்பங்களில் பெண்களும் மது குடிக்கும் பழக்கத்தில் இருக்கிறார்கள். இதனால் அவர்களது குழந்தைகள் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள்.

 
 
 
 

This post has been viewed 131 times